Pages

Friday, February 26, 2010

நிழல்கள்...


சுயம் தொலைத்து
நான் மீண்டபின்னும்;
இன்னும்,
அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறாய்...

விலகி ஓட முயன்று

தோற்றுத்திரும்பி;
காலடியிலேயே
வந்து சுருண்டு கொள்கிறாய்;
விசுவாசமான நாய்க்குட்டியைப்போல்...

தொடர்ந்துதான் வருகிறாயென்று
தொடர்ந்து, நடந்தால்
திடீரென்று காணாமல் போகிறாய்!!!
எதிர்பாரா நேரம் எதிரே வந்து
கண்ணாமூச்சி காட்டுகிறாய்.

உன் நண்பன் நானென்று
கைகோத்து வந்துவிட்டு;
சொல்லாமல் கொள்ளாமல்
போவதை,
என்ன பெயரிட்டு அழைக்க!!!
நீ நிழலா??? ..மனமா???..

Thursday, February 25, 2010

நாற்றங்கால் பந்தம்

வேரோடும் ,
வேரடி மண்ணோடும்,
பிடுங்கிய பின்
செடிக்கில்லை ,
நாற்றங்கால் பந்தம்.

அடுத்த நொடியே
மறந்துபோக
எப்படித்தான் முடிகிறதோ!!!!
இன்னொரு தோட்டம் சென்றுவிட்டால்
வேரடிமண் காய்ந்துவிடுமா என்ன!!!!

புது மண்ணில்
துவளுது குழையுது,
வேர் பிடிக்க
சில காலமாச்சுது.
புதுப்பூரிப்போட இளங்குருத்தும்
பூவும் பிஞ்சும் இருந்தாலும்,
வாழ்வென்னவோ
சூரியன் முகம் பார்த்துத்தான்.

நீர் தேடிச்செல்லும் வேர்கள்
கொஞ்சம்
நினைவுகளும் தேடிச்செல்லுமா???

விடைகிடைத்தது
கடைசியில்...
சருகாகிப்போனபின்பும்
வேர் நுனியில் இருந்தது,
நாற்றங்கால் , மண் வாசனை....
பெண்ணும்,பயிரும் ஒன்றுதானோ
இந்த மண்ணில்!!!....






Monday, February 15, 2010

சில நினைவுகள்

நினைவுகளின் சுமைகளில்
அழுந்தி விடா வண்ணம்
என்னை நானே
மீட்டெடுத்துக்கொள்கிறேன்...

குட்டிக்குரங்காய்
தொற்றிக்கொண்டு
கூடவே வரும் நினைவுகளை
உதற முயன்றிருக்கலாம்...

சில நினைவுகள்
புன்னகைகளை விதைத்து விட்டு
செல்கின்றன.
சில நினைவுகள்
கண்ணீரை
அறுவடை செய்கின்றன்.

அருவியைப்போல்
தடதடக்கும் சில நினைவுகள்
குப்புறத்தள்ளி வேடிக்கை பார்க்கும்...
அழகான சில நினைவுகள்
ஆறுதலும் சொல்லும்...

சளசளவென்ற ஓயாத
நினைவுகளிலிருந்து
விடுதலை எங்ஙனம்!!!!!

அன்பெனும் மழையில்..

உனக்கான என்னை
நீயும்
எனக்கான என்னை
நானும்
கண்டு கொண்டதில்
ஆரம்பித்தோம்
நமக்கான நாம்.

**********************

ஊடலுக்குப்பின்
காதல்
இது பழமொழி
ஊடலுக்குப்பின்
ஊடல்
இது
காதலர் மொழி

**********************

இன்னும்
எத்தனைமுறை வேண்டுமானாலும்
விழுவேன்
தாங்கிக்கொள்ள
உன் கரம் இருந்தால்.

**********************

தினமும் பார்த்துக்கொள்ளவில்லை
பரிசுகள் என்னும்
உரமிடவுமில்லை
ஆனாலும் செழிக்கிறது
நாம் வளர்த்த பயிர்
அன்பெனும் மழையில்.

**********************
உன் கூந்தலில்
ரோஜாவை சூட்டியதால்
மற்ற மலர்களெல்லாம்
நிறமிழந்து போயின.
உன் கூந்தல் வாசத்தின் முன்
ரோஜாவோ
வாசமிழந்து போனது.

**********************

காதலர்களுக்குத்தான்
காதலர் தினம்
நமக்கெதற்கு!!!!
நாம்தான் தினம் தினம்
உயிர் வாழ்கிறோமே!!!
காதலை சுவாசித்து.