Pages

Thursday, August 13, 2015

நல்லாச்சி.. (3)

அருவியைப் படத்தில் பார்த்து வியந்த நல்லாச்சியிடம்
பம்ப்செட் பார்த்து அதிசயித்த பேத்தி
பெருமைப்பட்டுக்கொண்டாள்
உலகிலேயே பெரிய அருவி இருப்பது
தன்னூரில்தானென்று

அருவியென்பது ஒரு பெரிய பம்ப்செட்தான்
பம்ப்செட் என்பதும் ஒரு சிறிய அருவிதானென்று
நமுட்டுச்சிரிப்போடு சொல்கிறாள்
கிணறுகள் தோறும் அருவிகள் கொண்ட
ஊரிலிருக்கும் நல்லாச்சி
அவள் பங்குக்கான பெருமையோடு..
********************************************

எழுதப்படிக்க பேத்தியும்
மாக்கோலமிட நல்லாச்சியும்
ஒருவருக்கொருவர் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தனர்
இருவரிடையேயும் பிணக்கு ஆரம்பித்தபோது
அவ்வீட்டிலிருந்து கிளம்பிய கோடுகள் இரண்டும்
அண்டசராசரமெங்கும் சுற்றியலைந்து
களைத்துத்திரும்பியபோது
பேத்தியின் ஒற்றைப்புள்ளிக்கோலத்தையும்
ஆச்சியின்
சற்றே வாய் பிளந்த 'அ'னாவையும்
பாராட்டிக்கொள்ளும் பெருந்தன்மை
வாய்த்திருந்தது இருவருக்கும்.

வால்: வெளியிட்ட அதீதம் மின்னிதழுக்கு நன்றி.

Saturday, August 1, 2015

எளியவை..

என் பிரார்த்தனைகள்
எப்போதும் எளிமையானவையே
வீடுவீடாய் அமைதியை விநியோகித்துச்செல்லும் புறா
எந்த வேடன் வீட்டு அடுப்பிலும் வேகாதிருக்கட்டும்
என்பதிலிருந்து
உச்சி பொசுக்கும் தீப்பகலில்
எனக்கென ஓர் பனித்துளி
பெய்யவேண்டுமென்பது வரையிலும்
பட்டியலில் அடங்கும்

அத்தனையையும் செவி மடுத்தபின்
பேராசை கூடாதென்று உரைத்து
கற்பூரதீபத்திலேயே
எனது பிரார்த்தனைகளைப்பொசுக்கிய கடவுளிடம்
ஊதுவத்தி வாசத்தையே திரையிட்டு மூடும்
வெண்வத்தியை மட்டுமாவது
சம்ஹாரம் செய்யக்கோரினாலோ
"என்னால் செய்யவொட்டாதேயம்மா இது.. எளிதாய் ஏதேனும் கேள்" என்றபடி
ஆலயம் விட்டு எழுந்தோடுகிறான்

அவன் செல்லும் வழிகளில்
மதுபானக்கடைகள் இல்லாதொழியட்டும்
என்றொரு பிரார்த்தனையை
வைக்கிறேன் அவனிடமே

முன்னம் வைத்த பிரார்த்தனைகள்
இதை விட எளிதென்று
ஒவ்வொன்றாய் நிறைவேற்ற ஆரம்பிக்கிறான்
கண்ணையும் காதையும் மூடிக்கொண்டதோடு
வாயையும் மூடிக்கொண்டிருக்கலாமோ
என்று யோசித்தபடி.

வால்: கவிதையை வெளியிட்ட அதீதம் மின்னிதழுக்கு நன்றி.