Pages

Friday, July 4, 2025

நல்லாச்சி

p.c. panbudan

அறுவடைக்கென ஆட்கள் வந்திருக்கிறார்கள்
நல்லாச்சி வீட்டு தோப்பில்
வகைவகையாய்
மாங்காய்களும் பலாப்பழங்களும் வாழைத்தார்களுமாய்
கனியக்காத்திருந்தவற்றில்
குத்தகை போக மீதத்தை அடுக்குகிறார்கள்
நல்லாச்சி வீட்டு முற்றம் நிறைய

தரம் பிரித்தபின் அரைக்காய்களை
பழுக்க வைக்க முனைகிறாள் நல்லாச்சி
பலாக்காயின் தண்டில் வேப்பங்குச்சி செருகுகிறாள்
மாங்காய்களை வைக்கோல் மூடிப்பொதிகிறாள்
வாழைத்தாரைக் குழியில் ஊற்றம் போடுகிறாள்
கனல் தூவி
அத்தனைக்கும் அருகிருந்து உதவிய பேத்தி
ஆச்சரியம் அகலாமல் கேட்கிறாள்
புளிப்பும் துவர்ப்புமானவை
எப்படி இன்சுவை கொள்கிறதென

சூழும் நெருக்கடிகளும்
கடந்து செல்லும் சோதனைகளுமாய்
கிடைக்கும் அனுபவங்களனைத்தும்
பக்குவப்படுத்திப் புடம்போடும்போது
கனியத்தானே வேண்டுமென்கிறாள் நல்லாச்சி
முதிர்தலின் சுவை இனிது
தேனூறும் இப்பழங்களைப் போல் என்கிறாள்

எனில் 
மனிதர்களும் கனிவதுண்டா என்கிறாள் பேத்தி
ஆம்
மனம் முதிர்ந்தால் மனிதர் கனிவர்
அனுபவத்தின் சாற்றுடன் அன்பைக் கலந்து
புத்தியைக் குழைக்க பக்குவம் வரும்
பக்குவமடைந்து கனிந்தோர் அனைவரின் விருப்பமாவர்
அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளாதோர்
என்றுமே கனிவதில்லை
பேத்தியின் தலைகோதியபடி
நல்லாச்சி உரைத்த மொழிகளெலாம்
ஊற்றத்தின் புகையென
அவளை
பழுக்க வைக்கத்தொடங்கின
நல்லாச்சி செய்ததெலாம்
சாம்பல் மூடிக்கிடந்த கனலை
சற்றே விசிறி விட்டதுதான்.

டிஸ்கி: பண்புடன் மின்னிதழில் வெளியானது.

Thursday, May 8, 2025

முறுக்கு..

தட்டட்டியில் பெய்த மழைநீர்
தார்சாவில் ஒழுகுமுன்
ஆலாட்டியிருந்த அவித்த நெல்லை
அள்ளிவர ஓடுகிறாள் நல்லாச்சி
அள்ளி நிரப்பும் அவளது பெருங்கைகளினூடே
புகுந்து புறப்படுகின்றன
பேத்தியின் குறுங்கைகளும்

அவித்த நெல் அரிசியானபின்
முறுக்கும் இன்னபிறவும் வேண்டுமென
வேண்டுதல் வைக்கிறது குறுதெய்வம்
அப்படியே ஆகட்டுமென
அருள்வாக்களிக்கிறது முதுதெய்வம்

முக்காப்படி அரிசியை உரலிலிட்டு
முறுக்குச்சுற்றவென
முக்கிமுக்கி மாவாக்குகிறாள் செல்லம்மக்கா
விறகடுப்பில் செய்தால் அதிருசியென
கைகொள்ளாமல் விறகுகளை
அள்ளிவருகிறார் தாத்தா
தேங்காயெண்ணெய் முறுக்கின் மணமே அலாதியென்றபடி
கொப்பரைத்தேங்காய்களை செக்கிலிடுகிறாள் அம்மா
எட்டூருக்கும் தெரியும்படி முறுக்குச்சுடுகிறாள் நல்லாச்சி

முறுக்குமாவுப் பிள்ளையாருக்கு
முதல் ஈடைப் படையலிட்டு
பக்குவமாய் மீதத்தையும் சுட்டெடுத்து
அண்டைஅயலுக்கும் சொந்தத்துக்கும்
ஆளுக்கிரண்டைப் பகிர்ந்தளித்தபின்
பேத்திக்கும் விளம்புகிறாள் பாசத்துடன்
அவள் கேட்ட அரைவேக்காடு முறுக்கை

காப்பியில் நொறுக்கியிட்ட முறுக்கையும்
பேத்திக்குக் கடத்தியபின்
எவ்வகையிலும் பங்காற்றாமல்
சும்மா திரிந்த மாமனுக்கு
சூடு போடத் தேடுகிறாள் நல்லாச்சி
மடியில் முடிந்துகொண்ட முறுக்குடன்
மச்சுப்பக்கம் மாமன் ஔிந்து
முக்கால் மணியாயிற்றென
பேத்தி காட்டிக்கொடுக்க மாட்டாள்
நீங்களும் சொல்லிவிடாதீர்கள்.

Wednesday, April 30, 2025

வண்ணங்கள் தோய்ந்த வில்.


இரு வேறு வானிலைகளில் சில நிமிடங்களுக்காய்
தோன்றி மறையாமல்
எல்லாக் காதல் நிலைகளிலும் 
அன்பின் பேரொளியாய் நிலைத்து மிளிர்கிறது
காதல்வெளியின் வானவில்
எண்ணங்கள் குழைத்து வண்ணஞ்சேர்த்து
மனப்பரப்பில் தீட்டிய அந்த ஓவியம்
காத்திருப்பிற்கொரு நிறம்
ஊடலுக்கொரு நிறம்
பிரிவிற்கொரு நிறம்
இணைவதற்கொரு நிறமெனக் கொண்டு
காலங்கள் நீளுந்தோறும் இன்னும் இன்னுமென
அழுத்தமாய் நிறமேற்றிக்கொள்கிறது
காதல்வசந்தம் பூக்கிறது அங்கே
வாழ்த்தும் வசந்தங்களின் பூஞ்சாரலில் நனைந்து
முரலும் வண்டுகளின் பொற்சிறகுகளை
இரவல் வாங்கிய பட்டாம்பூச்சிகள்
காதல்வெளியெங்கும் பறந்து திரிகின்றன
காதலின் வண்ணங்களைப் பரப்பியபடி

டிஸ்கி: முகநூலில் தோழி பிரபாதேவி நடத்திய போட்டியில் பரிசு பெற்ற கவிதை.