அரிசி மரம் காண
ஆசை கொண்ட பேத்திக்கு
நெல் விளையும் வயலைக் காட்டுகிறாள் நல்லாச்சி
கூடவே கற்பிக்கிறாள்
அது
அரிசி மரமல்ல செடியுமல்ல
நெற்பயிரென இயம்புவதே சரியென
ஒவ்வொரு நெல்லாய்த் தோலுரித்து
அரிசியெடுக்கும் பணிக்கஷ்டத்திற்காய்ப்
பரிதாபப்படும் பேத்திக்கு
ஆதியோடந்தமாய் விளக்கிச்சொல்லி
கிளைக்கேள்விகளுக்கெல்லாம்
ஊக்கப்படுத்தி
நா வறண்டு நிற்கும் நல்லாச்சியை நோக்கிப்
பாய்ந்து வருகிறது இன்னொரு கேள்விக்கணை
பச்சரிசிப் பயிரெது
புழுங்கலரிசிப் பயிரெது
காட்டுக இவ்வயலில் என..
1 comment:
ஹாஹாஹா கடைசிக் கேள்வி!! கவிதை பல விஷயங்களை உணர்த்துகிறது!
கீதா
Post a Comment