சர்க்கஸ் கோமாளிகள் நகைக்கிறார்கள்
அது அவர்கள் உலகம்
வலியில்லா வேதனையில்லா அழுகையில்லா
அபூர்வ உலகம் அவர்களுடையது
கேலி செய்வோரையும் வாய்மூட வைக்கும்
சுய எள்ளல்வாதிகள் அவர்கள்
விழுவதையெண்ணிப் பயந்தால்
பறப்பதெப்போது
என்ற சித்தாந்த வாதிகள்
சொந்த ஊரில் மரமேறிப்பிழைத்தவன்தான்
இதோ
அடிக்கொரு தரம் தடுக்கிவிழுந்து
அழுது ஊரைக்கூட்டுகிறான்
கிணற்று உள்நீச்சலில் கைதேர்ந்தவன்தான்
ஓரடி உயரத்திற்கே
பாசாங்காய்ப் பயப்படுகிறான்
தோட்டாவாய்
திணித்துக்கொண்ட பீரங்கி துப்பியதும்
அலறிப்பறக்கும் அவனைக்கண்டு
வெடித்துச்சிரிக்கிறது அரங்கம்
முகப்பூச்சுதான்
எத்தனை வசதியானதாக இருக்கிறது
உணர்வுகளையெல்லாம் மறைக்க
வயது வேறுபாடின்றி
அத்தனை பேரும் ரசிக்கும் அவன்மேல்
பசிக்குப் பெருங்காதல்
அவனுக்கோ கலைமேல்
தன்னை வருத்திப்
பிறரை மகிழ்விக்கும் அவன்
ஓர் நாள்
துடித்துத் துவண்டதையும்
மெதுவாய் அடங்கியதையும்
கேளிக்கையாகவே எண்ணி
இவ்வுலகம்
கை தட்டிக்கொண்டிருக்கிறது உரக்க
பிறர் நகைக்க தானழுதவன் இதழ்களில்
இன்று
உறைந்து நிற்கிறது புன்னகை.
No comments:
Post a Comment