முந்நூறு கிராம் சர்க்கரைப்பொங்கலும்
மூன்று முழம் பூவும் படைத்து
வேண்டிநிற்கிறான் பக்தன்
மூன்றுலட்ச ரூபாய் லோன் பாசாக
தொகையைக்கேட்டு திகைத்த தெய்வம்
காணிக்கையை யோசிக்கவாரம்பித்தது
சுற்றுப்பட்டு நகரத்துசாமிகள் தம் பெருமையாய்
உருள்பெருந்தேரும்
பூப்பல்லக்கும் சப்பரமும் கொண்டிருக்க
பின்னிருக்கும் காட்டுச்சுனையில்
தானோர் தெப்பஉலாவேனும் காண வேண்டாமா?
தெய்வத்தின் பட்டியல் நீண்டுசென்ற பொழுதில்
இடைமறித்தது பக்தையின் குரல்
"லோனு பாசானாத்தான்
புள்ளைக்கி மால பூக்கும்
கருணை காட்டப்பா"
ஆசையும் பரிவும்
துலாக்கோலில் நின்றாட
சட்டென பரிவின் கனத்தைக் கூட்டியது தெய்வம்
"பெண்ணடி பாவத்தைக் கையேந்தி
இன்னும் தும்பம்படவா இந்தக் காட்டுக்குள்ள?
பல்லக்கும் தெப்பமும்
பசையுள்ள பக்தனைச் செய்ய வைப்போம்"
சிரசில் சூட்டிய மலரை வீழ்த்தி
நற்சகுனம் காட்டிய தெய்வத்திடம்
காணிக்கையாய்
கூரை போட்டுத் தருவதாய் வாக்களித்த பக்தனை
வாஞ்சையுடன் நோக்குகிறது
பழம்பட்டைப் போர்த்தி கூதலில்
நடுங்கியமர்ந்திருக்கும் தெய்வம்.