ஒரு வைரமென
நட்சத்திர விதானத்தின் கீழ்
சயனித்திருக்கிறாள் பேத்தி
நல்லாச்சியின் மேல் கால் போட்டுக்கொண்டு
முல்லை வாசனை சுமந்து வரும்
மந்தமாருதத் துணையுடன்
சின்னவளைத்தூங்க வைக்க
எடுத்து விடும் கதைகளெல்லாம்
ஒவ்வொன்றாய்த் தோல்வியுற
உம் கொட்டியபடி சின்னவளும்
கொட்டாவியை மென்றபடி பெரியவளும்
மேலும் பல கதைகளைக் களமிறக்குகின்றனர்
தானும் சொல்லப்போவதாக
அறிவித்த பேத்தி
இடைவெளியில்லாக் கதைகளை
இஷ்டத்துக்கு அளந்து விடுகின்றாள்
சொல்லடுக்கி அடுக்கி அவள் சமைத்த கதைகளில்
கற்பனா ரசம் பொங்கியோட
வானம் வரை பெரிய ஆப்பிள் காய்க்கும் மாமரமொன்று
தம் தோட்டத்திலிருப்பதை
ரகசியமாய் அவள் சொன்ன சமயம்
விழிகள் விரியக் கேட்டுக்கொண்டிருந்தது நிலவு.
நல்லாச்சியும் தென்றலும் உறங்கி
இரு ஜாமங்களானபடியால்
அவ்விருவரும் அதை அறியக்கூடவில்லை
ரகசியங்களை
ஒரு செல்லப்பூனையைப்போல் பராமரித்து வரும்
குழந்தைகளே
அவற்றைப் பிறரிடம் காட்டிப் பெருமையும் கொள்வர்
ஆகவே
நீங்களும் சொல்லி விடாதீர்கள்.
No comments:
Post a Comment