Pages

Friday, July 11, 2025

நல்லாச்சி


குப்பைகளைத் தரம்பிரிக்க
கற்றுக்கொடுத்திருக்கிறார்களாம் பள்ளியில்
மக்கும் குப்பை மக்காக் குப்பை என
உதட்டுக்குள்ளேயே அடிக்கடி
சொல்லிப்பார்த்துக்கொள்கிறாள்
வீட்டிலிருக்கும் பொருட்களையெல்லாம்
எதெது எவ்வகையென 
மனசுக்குள்ளேயே குறிப்பெடுக்கிறாள்
இனி நான் ஒப்புதலளித்த பின்னரே
எவ்வொரு குப்பையும் வெளியேற வேண்டும் 
புது விதியொன்றை வரைகிறாள்
வகைபிரித்துப் போடவென
தொட்டிகளையும் அடுக்கச்சொல்கிறாள்

பழத்தோலைத் தெரியாத்தனமாக
மாற்றிப்போட்ட தாத்தா
மாட்டிக்கொண்டு விழிக்கிறார் பரிதாபமாய்
ஒன்றிரண்டு தோப்புக்கரணங்களை 
அபராதமாய் விதித்தபின்
பெரிய மனசுடன் மன்னிக்கிறாள் பேத்தி
வீடே குப்பையின் பின்னால் ஓடுகிறது
பேத்தியின் ரகளைக்கு நடுங்குகிறது
அவளின் அட்டகாசம்
சற்று அதிகமாகவே ஓங்குகிறது வீட்டில்
‘புதுமாடு குளுப்பாட்டுதா.. எல்லாஞ்சரியாப்போகும் 
ரெண்டு நாளில்’ என்றபடி
நமட்டுச்சிரிப்புடன் நகர்கிறாள் நல்லாச்சி
குப்பையை உரமாக்குவதில்
பேத்தியின் ஆர்வத்தை
மடை மாற்றுகிறாள் மெல்ல மெல்ல

அடுத்த தெருவில் ஓர் பாட்டியை
திண்ணையில் ஒதுக்கிவிட்டார்கள் குப்பையைப்போல்
ஆற்றாமையுடன் அரற்றும் நல்லாச்சியை
துளைத்தெடுக்கிறாள் பேத்தி
ஒதுக்கப்பட்டவர்கள் எவ்வகை என
நினைவில் பிரகாசிப்போர் ஓர் வகையெனில்
இருக்கும்போதே மங்குபவர் இன்னொரு வகை
அவரவர் செயற்பாடுகளால்
அவரவரே நிர்ணயிக்கின்றனர் 
எவ்வகையாயினும் புறக்கணித்தல் பாவம்
என்றாள் காலத்தால் கனிந்தவள்

குட்டிக்கைகள் கொள்ளுமட்டும் சுமந்து
எருக்குழி நிரப்பும் பேத்திக்கிரங்கி 
இப்போதெல்லாம்
எண்ணியே இலையும் பூவும் உதிர்க்கின்றன
வேம்பும் மரமல்லியும்
என்கிறாள் நல்லாச்சி
ஆமாமென ஆமோதிக்கிறது
உதிராமல் தவமிருக்கும் பாலைப்பூ
பேத்தி கண்மலருமுன் சுத்தம் செய்துவிடும்
அன்னை மட்டும் முறைக்கிறாள்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி

Friday, July 4, 2025

நல்லாச்சி

p.c. panbudan

அறுவடைக்கென ஆட்கள் வந்திருக்கிறார்கள்
நல்லாச்சி வீட்டு தோப்பில்
வகைவகையாய்
மாங்காய்களும் பலாப்பழங்களும் வாழைத்தார்களுமாய்
கனியக்காத்திருந்தவற்றில்
குத்தகை போக மீதத்தை அடுக்குகிறார்கள்
நல்லாச்சி வீட்டு முற்றம் நிறைய

தரம் பிரித்தபின் அரைக்காய்களை
பழுக்க வைக்க முனைகிறாள் நல்லாச்சி
பலாக்காயின் தண்டில் வேப்பங்குச்சி செருகுகிறாள்
மாங்காய்களை வைக்கோல் மூடிப்பொதிகிறாள்
வாழைத்தாரைக் குழியில் ஊற்றம் போடுகிறாள்
கனல் தூவி
அத்தனைக்கும் அருகிருந்து உதவிய பேத்தி
ஆச்சரியம் அகலாமல் கேட்கிறாள்
புளிப்பும் துவர்ப்புமானவை
எப்படி இன்சுவை கொள்கிறதென

சூழும் நெருக்கடிகளும்
கடந்து செல்லும் சோதனைகளுமாய்
கிடைக்கும் அனுபவங்களனைத்தும்
பக்குவப்படுத்திப் புடம்போடும்போது
கனியத்தானே வேண்டுமென்கிறாள் நல்லாச்சி
முதிர்தலின் சுவை இனிது
தேனூறும் இப்பழங்களைப் போல் என்கிறாள்

எனில் 
மனிதர்களும் கனிவதுண்டா என்கிறாள் பேத்தி
ஆம்
மனம் முதிர்ந்தால் மனிதர் கனிவர்
அனுபவத்தின் சாற்றுடன் அன்பைக் கலந்து
புத்தியைக் குழைக்க பக்குவம் வரும்
பக்குவமடைந்து கனிந்தோர் அனைவரின் விருப்பமாவர்
அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளாதோர்
என்றுமே கனிவதில்லை
பேத்தியின் தலைகோதியபடி
நல்லாச்சி உரைத்த மொழிகளெலாம்
ஊற்றத்தின் புகையென
அவளை
பழுக்க வைக்கத்தொடங்கின
நல்லாச்சி செய்ததெலாம்
சாம்பல் மூடிக்கிடந்த கனலை
சற்றே விசிறி விட்டதுதான்.

டிஸ்கி: பண்புடன் மின்னிதழில் வெளியானது.

Thursday, May 8, 2025

முறுக்கு..

தட்டட்டியில் பெய்த மழைநீர்
தார்சாவில் ஒழுகுமுன்
ஆலாட்டியிருந்த அவித்த நெல்லை
அள்ளிவர ஓடுகிறாள் நல்லாச்சி
அள்ளி நிரப்பும் அவளது பெருங்கைகளினூடே
புகுந்து புறப்படுகின்றன
பேத்தியின் குறுங்கைகளும்

அவித்த நெல் அரிசியானபின்
முறுக்கும் இன்னபிறவும் வேண்டுமென
வேண்டுதல் வைக்கிறது குறுதெய்வம்
அப்படியே ஆகட்டுமென
அருள்வாக்களிக்கிறது முதுதெய்வம்

முக்காப்படி அரிசியை உரலிலிட்டு
முறுக்குச்சுற்றவென
முக்கிமுக்கி மாவாக்குகிறாள் செல்லம்மக்கா
விறகடுப்பில் செய்தால் அதிருசியென
கைகொள்ளாமல் விறகுகளை
அள்ளிவருகிறார் தாத்தா
தேங்காயெண்ணெய் முறுக்கின் மணமே அலாதியென்றபடி
கொப்பரைத்தேங்காய்களை செக்கிலிடுகிறாள் அம்மா
எட்டூருக்கும் தெரியும்படி முறுக்குச்சுடுகிறாள் நல்லாச்சி

முறுக்குமாவுப் பிள்ளையாருக்கு
முதல் ஈடைப் படையலிட்டு
பக்குவமாய் மீதத்தையும் சுட்டெடுத்து
அண்டைஅயலுக்கும் சொந்தத்துக்கும்
ஆளுக்கிரண்டைப் பகிர்ந்தளித்தபின்
பேத்திக்கும் விளம்புகிறாள் பாசத்துடன்
அவள் கேட்ட அரைவேக்காடு முறுக்கை

காப்பியில் நொறுக்கியிட்ட முறுக்கையும்
பேத்திக்குக் கடத்தியபின்
எவ்வகையிலும் பங்காற்றாமல்
சும்மா திரிந்த மாமனுக்கு
சூடு போடத் தேடுகிறாள் நல்லாச்சி
மடியில் முடிந்துகொண்ட முறுக்குடன்
மச்சுப்பக்கம் மாமன் ஔிந்து
முக்கால் மணியாயிற்றென
பேத்தி காட்டிக்கொடுக்க மாட்டாள்
நீங்களும் சொல்லிவிடாதீர்கள்.

Wednesday, April 30, 2025

வண்ணங்கள் தோய்ந்த வில்.


இரு வேறு வானிலைகளில் சில நிமிடங்களுக்காய்
தோன்றி மறையாமல்
எல்லாக் காதல் நிலைகளிலும் 
அன்பின் பேரொளியாய் நிலைத்து மிளிர்கிறது
காதல்வெளியின் வானவில்
எண்ணங்கள் குழைத்து வண்ணஞ்சேர்த்து
மனப்பரப்பில் தீட்டிய அந்த ஓவியம்
காத்திருப்பிற்கொரு நிறம்
ஊடலுக்கொரு நிறம்
பிரிவிற்கொரு நிறம்
இணைவதற்கொரு நிறமெனக் கொண்டு
காலங்கள் நீளுந்தோறும் இன்னும் இன்னுமென
அழுத்தமாய் நிறமேற்றிக்கொள்கிறது
காதல்வசந்தம் பூக்கிறது அங்கே
வாழ்த்தும் வசந்தங்களின் பூஞ்சாரலில் நனைந்து
முரலும் வண்டுகளின் பொற்சிறகுகளை
இரவல் வாங்கிய பட்டாம்பூச்சிகள்
காதல்வெளியெங்கும் பறந்து திரிகின்றன
காதலின் வண்ணங்களைப் பரப்பியபடி

டிஸ்கி: முகநூலில் தோழி பிரபாதேவி நடத்திய போட்டியில் பரிசு பெற்ற கவிதை.

Thursday, July 18, 2024

நல்லாச்சி


நல்லாச்சியின் பேத்தியை
வம்பிழுப்பதே
செல்லாச்சியின் பொழுதுபோக்கு
கூறத்தகாததைக் கூறாதேயென
நல்லாச்சி அறிவுறுத்தியும்
மாற்றமேதுமில்லை
செல்லாச்சியின் போக்கில்
வம்பிழுத்து வதைத்து
பிறரைக் கண்ணீர் சிந்த வைப்பதில்
சிலருக்கு ஏனோவொரு அற்பதிருப்தி
கல்லின்மேல் எழுத்தெனவும்
பசுமரத்தாணியெனவும்
தம் சொற்கள் சென்று தைக்குமேயென
அவர்கள்
கிஞ்சித்தும் யோசிப்பதில்லை
மழைக்காளானென அவை
பிறர் மனதில் பெருகிக்கிடப்பதையும்
ஊவாமுள்ளென காயப்படுத்துவதையும்
அறியாதவரல்லர் அவர்
ஆயினும் அப்பழக்கத்தை
கைவிட்டாருமில்லை
பேத்தியை 
நல்லாச்சி கண்டிக்கும் பொழுதுகளில்
'ஒன்ன தவுட்டுக்கு வாங்கினா ஒங்காச்சி
அதாம் உறுத்தில்லை ஒம்மேல' என்பாள்
'உன்னை கோவில்ல கண்டெடுத்தா நல்லாச்சி
அவளுக்குப் பேரன்தான் பெருசு' என்பாள்
'பொட்டப்புள்ள.. அடுத்தூட்டுக்குப் போறவதானே' என்பாள்
உதடு பிதுக்கி 
பேத்தி அழுவதையோ
கண்ணீர் கட்டிநிற்க அவள்
மெளனமாய்க் குனிவதையோ
சிறிதும்
சட்டை செய்தாலள்ளள்
ஒருநாள்
திண்ணையிலிருக்கும் செல்லாச்சியை
அவள் மகன் சடைவது கேட்டு
பேத்தி ஓடிச்சென்று நிற்கிறாள் 
கனன்ற விழிகளுடன்
சொற்போர் தொடுக்கிறாள்
'அவங்களைத் தவுட்டுக்கு வாங்கினீங்களா
எங்கியும் கண்டெடுத்தீங்களா
அதாம் உறுத்தில்லாம ஏசுதேளா'
அடுக்கிக்கொண்டே போகிறாள் சின்னவள்
அடிவாங்கினாற்போல் உறைகிறாள் பெரியவள்
'விதைச்சதுதான் கிடைக்கும்'
பார்வையால் அறிவுறுத்துகிறாள் நல்லாச்சி
புரிந்து தலைகவிழ்கிறாள் செல்லாச்சி
'ஆச்சி பாவம்' என்றபடி 
மடியில் முகம் புதைக்கிறாள் பேத்தி
அவள் தலைமேல் படிகின்றன
இருகரங்களும் ஆசீர்வாதமாய்.

Tuesday, February 27, 2024

நல்லாச்சி

அவ்வைக்கிழவி நம் கிழவி
அருமை மிகுந்த பழங்கிழவி’
குரலெடுத்துப்பாடிக்கொண்டிருக்கிறாள் பேத்தி
வாய்க்காலில் அளைந்து விளையாடியவாறு
நல்லாச்சியோ
கொழுக்கட்டை மாவிலொரு கண்ணும்
பிடுங்கக்காத்திருக்கும் குரங்கின்மீதொரு கண்ணுமாக
சுள்ளி சேகரித்துக்கொண்டிருக்கிறாள்
அடுப்பெரிக்க

பச்சரிசி மாவும் தேங்காயும் வெல்லமுமாய்
பிணைந்து பிணைந்து பிசைந்துருட்டி
அடுப்பில் வேகும் கூழ்க்கொழுக்கட்டைகள்
வனாந்திரத்தையே நாவூறச்செய்ய
கருவறையில் காத்திருக்கிறாள்
ஓளவையாரம்மன் 
அமுதம் பருக

கொழுக்கட்டை வாசனை தீண்டிச்செல்ல
பேத்தியின்
சின்ன மூளைக்குள்ளொரு சந்தேக மொட்டு விரிகிறது
ஓடோடி வருகிறாள் 
குடைந்த கேள்விகளை
எடுத்து வீசுகிறாள் நல்லாச்சியிடம்
“அதியன் கொடுத்த நெல்லிக்கனி இவளுக்குத்தானே?
சுடாத பழம் போடென்று குமரனிடம் கேட்டவள் இவள்தானே?”
ஆமோதிக்கிறாள் நல்லாச்சி

‘எனில்
சுட்ட கொழுக்கட்டையா? சுடாத கொழுக்கட்டையா?
இச்சமயம் அவள் வேண்டுவது யாதென
எங்ஙனம் நாம் அறியக்கூடும்?
பல்லில்லாப் பாட்டிக்குப் பதமானது ஏது?’
விழிமலர்த்தி வினவும் பேத்திக்கு
பதிலுரைக்கா நல்லாச்சி
ஒளவையாரம்மன் என்ன சொல்வாளோவென
அமர்ந்திருக்கிறாள்
‘அவ்வைக்கிழவி நம் கிழவி
அருமை மிகுந்த பழங்கிழவி’
பாடியவாறே அடுப்புத்தள்ளுகிறாள் பேத்தி.

Monday, May 29, 2023

யானைப்பூச்சி


இத்தனை விகாரமாய்ப் படைத்திருக்க வேண்டாம்
நொந்து கொண்டபடி
ஆலமரத்தினடியில் சயனித்திருந்தது
மந்தையிலிருந்து பிரிந்து வந்துவிட்ட
புத்திளம் யானைக்கன்று

எதற்கென்றே தெரியாமல்
இரு பெரும் காதுகள்
இப்பிறவியில் மெலிய வாய்ப்பில்லா
மஹாகனம் கொண்ட பேருடல்
இடையிடையே இடையூறாய்
வந்து நெளியும் நீள்மூக்கு
தெண்ணீரில் தன்னுருவென 
தான் கண்டதையெண்ணி
இன்னும் மனம் கலங்கிற்று

தாவும் மான் தொடங்கி தோகை மயில் ஈறாக
அதன்
அழுத கண்ணீர் துடைத்தன
ஆறுதல் தோற்று நின்றன
தூக்கத்தைத் துக்கம் வென்றெடுக்க
துக்கத்தைக் கொடும்பசி தோற்கடிக்க
அலமுறையிட்டு அழுதது யானைக்கன்று

அழுகையின் வீரியம் கூடுந்தோறும்
படபடத்த காதுகள்
அடித்துக்கொண்டு வானேகின உச்சநொடியில்
இப்போதெல்லாம்
அந்த யானைக்கன்று கலங்குவதில்லை
மலருக்கு மலர் தாவிக்கொண்டிருக்கிறது
தும்பிக்கையால் தேனுறிஞ்சியபடி.