பக்கத்து ஊரில் ஒரு திருமணம். அன்றைக்கென்று முக்கியமான ஒரு வேலை வந்துவிட்டதால் தாத்தா "பேத்திப்பொண்ணும் நீயும் மட்டும் போய்ட்டு வாங்க" என நல்லாச்சியிடம் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். சும்மா வீட்டிலிருக்கும் பொழுதுகளிலேயே பேத்தியை அலங்கரித்து அழகு பார்க்கும் நல்லாச்சி, கல்யாண வீட்டுக்குப் போவதென்றால் வாய்ப்பை விடுவாரா என்ன?
பட்டுப்பாவாடை, அதற்குப் பொருத்தமான சட்டை, ஜொலிக்கும் நகைகள், நெத்திச்சுட்டி, கலீர்கலீரெனச் சிணுங்கும் காெலுசுகள், மணக்கும் மல்லிகைப்பூ என தன் கைவண்ணத்தையெல்லாம் காட்டி பேத்தியை அழகுபடுத்தினார். "ஆச்சி, போறும்.." எனச் சிணுங்கிய பேத்தியை "சும்மாரு புள்ள.." என அடக்கியவர் பட்டும்படாமலும் ஒரு திருஷ்டிப்பொட்டையும் வைத்துவிட்டு பேத்தியை அழைத்துக்கொண்டு கிளம்பினார்.
செல்லும் வழியில் "ஆச்சியும் பேத்தியும் எங்க சோடி போட்டுக்கிட்டுக் கிளம்பியிருக்கியோ?" என விசாரித்தவர்கள் பேத்தியின் அலங்காரத்தையும் அழகையும் அணுவணுவாய் உற்றுப்பார்த்ததைக் கவனிக்கத் தவறவில்லை ஆச்சி. கல்யாண வீட்டிலும் கிட்டே வந்து உள்ளன்போடு விசாரித்தவர்களைத் தவிர ஒரு சிலர், "பட்டுப்பாவட உடுத்துனாதாம் பொம்பளப்புள்ள லெச்சணமா இருக்கு. இந்த நெக்லசு எத்தன பவுனு? மவன் வெளிநாட்டுலேர்ந்து கொண்டாந்தானா?" எனக் கேட்டபடி கையிலெடுத்துப் பார்த்துவிட்டு பெருமூச்சுடன் நகர்ந்ததையும் மனதில் வைத்துக்கொண்டாள்.
மணமக்களை வாழ்த்திவிட்டு, விருந்துண்டு வீட்டுக்கு வந்தவள், வீட்டு முற்றத்தில் பேத்தியை கிழக்கு நோக்கி நிற்க வைத்துவிட்டு, "இன்னா வாரேன்" எனச் சென்றவள் ஒரு பொட்டலத்துடன் திரும்பினாள்.
உப்பும் மிளகும்
கடுகும் காய்ந்த மிளகாயும்
அள்ளியெடுத்த முச்சந்தி மண்ணும்
கூட்டிப்பொதிந்து
கண்ணேறு கழிக்கிறாள் நல்லாச்சி
அங்கமெலாம் பையத் தடவி
வயிற்றில் சற்றே அழுத்தித் தடவி
ஏதோ கேட்க முற்படும் பேத்தியை
கண்ணால் அடக்கி
இடவலமாகவும் எதிர்ச்சுற்றாகவும்
ஏற்றியிறக்கி
விரித்த பொட்டலத்தில்
மென்மையாய் மும்முறை துப்ப
சைகை காட்டி
காத்து கருப்பு அண்டாதிருக்கட்டும்
என்றபடி போடுகிறாள் கனலில்
பொட்டலத்துக்குப் போட்டியாய்ப்பொரிகிறாள்
காற்றடைத்த பலூனென
காத்துக்கும் கருப்புக்கும் விளக்கம் வேண்டி
அதுகாறும் குதித்த பேத்தி
'பொறாமை கொண்டோரின்
பெருமூச்சுதான் காற்று
கெடுமதியாளரின் நிழல் இங்கே கருப்பு
இவ்விரண்டும் அண்டாமல்
நல்லோர் சூழ வாழிநீ'
என வழுத்துகிறாள் நல்லாச்சி
தெளிந்து குளிர்கிறாள் பேத்தி.
No comments:
Post a Comment