பன்னிரு கரம் விரித்து
உக்கிரமாய் ஆடிவருகிறாள் கருங்காளி
இட்ட அடிக்கும் எடுத்த அடிக்கும்
தோளில் புரளும் மாலை மலர்தூவ
செந்நாக்கு துருத்தி
சீறும் கண்களையுருட்டி
விண்ணிலுயர்ந்த பாதம் கலீரென
வீதிவலம் வரும் அவளைக் காண்பித்து
பேத்திக்குச்சோறூட்டுகிறாள் நல்லாச்சி
அவளிடம் பிடித்துக் கொடுத்து விடுவதாக
பயமுறுத்தி
அருகி வந்ததும் கண்ணுற்ற காளி
செந்நாவை அகற்றிவிட்டுக்
குசலம் விசாரிக்கிறாள் நல்லாச்சியிடம்
பிஸ்கட் வாங்கித்தருவதாக
கைப்பிடித்துச் செல்லும் காளியுடன்
குதித்து நடக்கிறாள் பேத்தி
காளியை விட உக்கிரமாய்
முறைக்கிறாள் நல்லாச்சி.
No comments:
Post a Comment