Pages

Thursday, November 24, 2022

நல்லாச்சி - 38


வெள்ளரளியும் செவ்வரளியும்
கலந்தொரு மாலை கண்டத்தில்
வெண்டாமரை மொட்டுகள் கோர்த்தவொன்று 
நெஞ்சிலாடுகிறது
முற்பிறப்பின் பயனாய் வெள்ளைரோஜாக்கள்
வயிற்றைத் தரிசிக்க
போதாதென சம்பங்கி மாலையொன்று
இடைதழுவ
முழந்தாளைத்தொடுகிறது
பன்னீர்ப்பூ ஆரம்
இத்தனையுமிருந்தும்
தாள்தோயும்
முல்லை மல்லிகை நிலமாலை எங்கேயென
சந்நதம் வந்தாற்போல் சீறுகிறான்
தெய்வகுற்றமெனக் குழைகிறானொருவன்
சேலையைப் பற்றியிழுத்துக்
குறிப்புணர்த்தும் பேத்திக்கு
விளக்குகிறாள் நல்லாச்சி
பக்தரின் முன்கோபம் தணிவிக்க
நடக்கும் நேர்ச்சை இதுவென
இத்தனை வெண்மலர்களிலும் தணியாததையா
ஒரு நிலமாலையில் தணிவித்து விடும் தெய்வம்?
எனப் பரிகசிக்கும் பேத்தியின் வாயை
சர்க்கரைப்பொங்கலால் அடைத்து
அப்பால் இட்டுச்செல்கிறாள் நல்லாச்சி
மலர்களின் நறுமணத்தில்
கிறங்கி நிற்கிறது தெய்வம்
வேண்டுதல் இன்னவென்று கிரகிக்காமல்.

No comments: