பூக்கவுமில்லாம காய்க்கவும் செய்யாம
மரம் மாதிரி எதுக்கு நிக்கே?
சூடு சொரணை இருக்கா ஒனக்கு?
திட்டியபடி முருங்கை மரத்தை
துடைப்பத்தால் சாத்துகிறாள் நல்லாச்சி
பாவம் மரமெனப் பதறுகிறாள் பேத்தி
ஒண்ணுமில்ல மக்கா
பலன் கொடுக்காத தாவரத்துக்கு
செய்யற சாங்கியந்தான் இதுவென
சமாதானப்படுத்தியபடி
ஒற்றைச்செருப்பைக் கட்டித்தொங்கவிட்டு
கட்டிப்பெருங்காயத்தைப் புதைத்து
தேமோர் கரைசலையும் தெளித்து விட்டு
பெருமூச்சுடன் நகர்கிறாள் நல்லாச்சி
சின்னாளிலேயே
கொள்ளாத காய்களுடன் நிறைந்த மரம் கண்டு
சரஞ்சரமா சடை பிடிச்சுக்காய்ச்சிருக்கு
பறிச்சு முடியலை என
சந்தோஷமாய் அலுத்துக்கொள்ளும் நல்லாச்சியிடம்
மூச்சு விடவில்லை பேத்தி
காலையும் மாலையும் அவள்
காம்ப்ளான் ஊற்றி வளர்த்த உண்மையை
அத்தனையையும் கவனித்த
மூணாம் வீட்டு செல்லம்மாச்சி
வாரிசுக்காக நாளும்பொழுதும் மருமகளை
வதைப்பதை விட்டு
ஆஸ்பத்திரிக்கு முடுக்குகிறாள்
மருமகளையும் மகனையும்.
No comments:
Post a Comment