வெற்றிலையுடன்
வம்பையும் சேர்த்து மெல்லும்
செல்லாச்சி வருகிறாள் தடியூன்றி தெருவில்
ஈ காக்காயெல்லாம்
இதோ பரதேசம் போகிறேனென
ஓடியொளிய
அப்பாவி நல்லாச்சி அகப்பட்டாள்
அன்றைய ஆட்டுக்குட்டியாய்
வட்டச்சம்மணமிட்டமர்ந்து
நல்லாவிடம் பேச்சு வளர்க்கிறாள் செல்லா
நாவில் சொல் வைத்து
நன்றாய்த்தான் வீசுகிறாள் தூண்டிலை
பேச்சால் வலை விரித்து
மான் சிக்கக் காத்திருக்கிறாள்
எண்ணிச் சொல்லெடுத்த நல்லாச்சி
கண்ணாடிப்பாத்திரம் கையாளும் லாவகத்துடன்
ஆய்ந்தாய்ந்து அனுப்புகிறாள் வாய்ச்சொல்லை
நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது எல்லாம்
குறும்பு செய்த பேத்தியை
அம்மா கண்டிக்கும் வரை
தன்னிலை மறந்த நல்லாச்சி
செல்லப்பேத்திக்காய் பரிந்து பேச
அவல் கிடைத்த திருப்தியுடன்
கிளம்புகிறாள் செல்லாச்சி
'ஐயோ போச்சே' என
தலை பற்றி அமர்கிறாள் நல்லாச்சி
குழந்தைக்குறும்பு
மாமி மருகள் தகராறாய் உருப்பெருகிப் பரவுமேயென
மருகுகிறாள் நல்லாச்சி
அலங்கமலங்க விழிக்கின்றனர் அம்மையும் மகளும்.
No comments:
Post a Comment