Pages

Thursday, May 8, 2025

முறுக்கு..

தட்டட்டியில் பெய்த மழைநீர்
தார்சாவில் ஒழுகுமுன்
ஆலாட்டியிருந்த அவித்த நெல்லை
அள்ளிவர ஓடுகிறாள் நல்லாச்சி
அள்ளி நிரப்பும் அவளது பெருங்கைகளினூடே
புகுந்து புறப்படுகின்றன
பேத்தியின் குறுங்கைகளும்

அவித்த நெல் அரிசியானபின்
முறுக்கும் இன்னபிறவும் வேண்டுமென
வேண்டுதல் வைக்கிறது குறுதெய்வம்
அப்படியே ஆகட்டுமென
அருள்வாக்களிக்கிறது முதுதெய்வம்

முக்காப்படி அரிசியை உரலிலிட்டு
முறுக்குச்சுற்றவென
முக்கிமுக்கி மாவாக்குகிறாள் செல்லம்மக்கா
விறகடுப்பில் செய்தால் அதிருசியென
கைகொள்ளாமல் விறகுகளை
அள்ளிவருகிறார் தாத்தா
தேங்காயெண்ணெய் முறுக்கின் மணமே அலாதியென்றபடி
கொப்பரைத்தேங்காய்களை செக்கிலிடுகிறாள் அம்மா
எட்டூருக்கும் தெரியும்படி முறுக்குச்சுடுகிறாள் நல்லாச்சி

முறுக்குமாவுப் பிள்ளையாருக்கு
முதல் ஈடைப் படையலிட்டு
பக்குவமாய் மீதத்தையும் சுட்டெடுத்து
அண்டைஅயலுக்கும் சொந்தத்துக்கும்
ஆளுக்கிரண்டைப் பகிர்ந்தளித்தபின்
பேத்திக்கும் விளம்புகிறாள் பாசத்துடன்
அவள் கேட்ட அரைவேக்காடு முறுக்கை

காப்பியில் நொறுக்கியிட்ட முறுக்கையும்
பேத்திக்குக் கடத்தியபின்
எவ்வகையிலும் பங்காற்றாமல்
சும்மா திரிந்த மாமனுக்கு
சூடு போடத் தேடுகிறாள் நல்லாச்சி
மடியில் முடிந்துகொண்ட முறுக்குடன்
மச்சுப்பக்கம் மாமன் ஔிந்து
முக்கால் மணியாயிற்றென
பேத்தி காட்டிக்கொடுக்க மாட்டாள்
நீங்களும் சொல்லிவிடாதீர்கள்.

No comments: