குப்பைகளைத் தரம்பிரிக்க
கற்றுக்கொடுத்திருக்கிறார்களாம் பள்ளியில்
மக்கும் குப்பை மக்காக் குப்பை என
உதட்டுக்குள்ளேயே அடிக்கடி
சொல்லிப்பார்த்துக்கொள்கிறாள்
வீட்டிலிருக்கும் பொருட்களையெல்லாம்
எதெது எவ்வகையென
மனசுக்குள்ளேயே குறிப்பெடுக்கிறாள்
இனி நான் ஒப்புதலளித்த பின்னரே
எவ்வொரு குப்பையும் வெளியேற வேண்டும்
புது விதியொன்றை வரைகிறாள்
வகைபிரித்துப் போடவென
தொட்டிகளையும் அடுக்கச்சொல்கிறாள்
பழத்தோலைத் தெரியாத்தனமாக
மாற்றிப்போட்ட தாத்தா
மாட்டிக்கொண்டு விழிக்கிறார் பரிதாபமாய்
ஒன்றிரண்டு தோப்புக்கரணங்களை
அபராதமாய் விதித்தபின்
பெரிய மனசுடன் மன்னிக்கிறாள் பேத்தி
வீடே குப்பையின் பின்னால் ஓடுகிறது
பேத்தியின் ரகளைக்கு நடுங்குகிறது
அவளின் அட்டகாசம்
சற்று அதிகமாகவே ஓங்குகிறது வீட்டில்
‘புதுமாடு குளுப்பாட்டுதா.. எல்லாஞ்சரியாப்போகும்
ரெண்டு நாளில்’ என்றபடி
நமட்டுச்சிரிப்புடன் நகர்கிறாள் நல்லாச்சி
குப்பையை உரமாக்குவதில்
பேத்தியின் ஆர்வத்தை
மடை மாற்றுகிறாள் மெல்ல மெல்ல
அடுத்த தெருவில் ஓர் பாட்டியை
திண்ணையில் ஒதுக்கிவிட்டார்கள் குப்பையைப்போல்
ஆற்றாமையுடன் அரற்றும் நல்லாச்சியை
துளைத்தெடுக்கிறாள் பேத்தி
ஒதுக்கப்பட்டவர்கள் எவ்வகை என
நினைவில் பிரகாசிப்போர் ஓர் வகையெனில்
இருக்கும்போதே மங்குபவர் இன்னொரு வகை
அவரவர் செயற்பாடுகளால்
அவரவரே நிர்ணயிக்கின்றனர்
எவ்வகையாயினும் புறக்கணித்தல் பாவம்
என்றாள் காலத்தால் கனிந்தவள்
குட்டிக்கைகள் கொள்ளுமட்டும் சுமந்து
எருக்குழி நிரப்பும் பேத்திக்கிரங்கி
இப்போதெல்லாம்
எண்ணியே இலையும் பூவும் உதிர்க்கின்றன
வேம்பும் மரமல்லியும்
என்கிறாள் நல்லாச்சி
ஆமாமென ஆமோதிக்கிறது
உதிராமல் தவமிருக்கும் பாலைப்பூ
பேத்தி கண்மலருமுன் சுத்தம் செய்துவிடும்
அன்னை மட்டும் முறைக்கிறாள்.
டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி
No comments:
Post a Comment