தொலைத்த இடத்தில்தான் தேடணும்
என்கிறாள் நல்லாச்சி
தினமும் ஏதேனுமொன்றைத்
தொலைக்கும் பேத்தியிடம்
அவள்
எங்கோ தொலைத்ததையெல்லாம் கண்டுபிடிக்கும்
மந்திரக்கோலன்றோ நல்லாச்சி
எனினும்
அல்லல் அதிகமானால் அலுத்தும்கொள்வாள்
பொருட்களைத்தொலைத்தே பழக்கப்பட்ட பேத்தி
ஒருநாளில்
நல்லதோர் நட்பையும் தொலைக்கிறாள்
பிரிவென்ற பெயரில்;
அவ்வன்பை எங்கே தேடுவதெனக் குழம்புகிறாள்
பெற்றோரின் அன்போ
உற்றாரின் அன்போ
இன்னபிற களித்தோழரின் அன்போ
இணைவைக்க இயலாமல் தத்தளிக்கின்றன
தூக்கமின்றி ஏக்கத்தில் மெலிகிறாள் பேத்தி
மாற்றமொன்றே மருந்தாகும் என்கிறாள் நல்லாச்சி
முற்றத்தில் மேய வரும் பறவைகள்தாமும்
அன்பைச்சொரிகின்றன அவள்மேல்
மயிலிறகுகளாய் தூவியாய்
கொஞ்சுமொழிகளும் கீதங்களுமாய்
நனைக்கின்றன பேத்தியை
துளித்துளியாய் உயிர்க்கிறாள் அவள்
தொலைக்காத இடத்திலும் கிடைக்கலாமென
புரிந்து கொள்கின்றனர்
ஆச்சியும் பேத்தியும்.
டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.





