Pages

Tuesday, August 25, 2026

கள்ளியும் பூக்கும் (பண்புடன் மின்னிதழில் வெளியானது)

காலம் உறங்கும் இருட்டு அறையில் 
நிழல்கள் நிஜங்களை வேட்டையாடுகின்றன.
நீலக் கண்ணீர்த்துளிகளாய் 
சூரியன் உருகி வழிய
கடந்த பாதைகளின் காலடித்தடங்கள் 
கள்ளிச்செடிகளாய் முளைத்து நிற்கின்றன

தொண்டைக்குள் அடைபட்டுக் கிடந்த மௌனம் 
ஒரு கருப்புப் பறவையாய் 
ஆன்மாவைக் கொத்திக்கொண்டிருக்க
ஆழ்மனதின் கடலில் மூழ்கி 
வலிகளைச் சேகரிக்கிறேன் முத்துக்களென

வானத்தை நோக்கிய 
ஒரு புதிய வாசல்தான் வலி
காலம் எறிந்து சென்ற
காயங்களை எல்லாம்d
கவிதையாக்கிப் பருகிவிடலாம்
கசப்பை இனிப்பாக்கும் வித்தையோடு
எனக் கூவிச்செல்கிறாள் 
கண்களில் நெருப்பை அணிந்தவள்

காலடித்தடங்களில்
வண்ணங்களைத் தீட்டும்
என் விரல்களின் வழியே
கள்ளிகளெங்கும் பூத்துச்சொரிகின்றன
வெண்முத்துச்சூரியன்கள்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Monday, August 17, 2026

நல்லாச்சி..


இடித்த பச்சரிசி மாவும்
ஈருருண்டை வெல்லமும்
இரண்டுக்கும் தோதான தேங்காய்களுமாக
ஒளவையாரம்மன் கோவிலுக்குப்
புறப்பட்டுக்கொண்டிருக்கிறது
நல்லாச்சியின் குடும்பம்

உப்பொரு வகை இனிப்பொரு வகையென
அவித்து வைத்த கொழுக்கட்டைகளும்
அவை வெந்த நீரில் காய்ச்சிய கூழுமென
அம்மைக்கு இவர்கள் படைக்க
“முன்தயாரிப்பு வகைகளும் கிடைக்குது மக்ளே”
என்கிறாள் ஒளவை
“புதியவையோ சூடாக்கியவையோ யானறியேன்
ஊதித்தின்ற சுட்ட பழம் இன்னும் நெஞ்சினிக்க
ஊர்ப்பட்ட உப்புடன் பழங்கொழுக்கட்டை கரிக்குதையே
விநாயகன் பாடோ பெரும்பாடு
நீண்ட மூக்கு பொறுப்பதில்லை வாடையை"
ஒளவையின் வாய்மொழியோ
பிரம்மையின் ஒருதுளியோ
புரியாமல் விழிக்கிறாள் நல்லாச்சி
குதித்துக்கொண்டிருக்கிறாள் பேத்தி
தோவாளை கால்வாயில் குளிப்பதற்காக

குளிப்பதற்கும் கொழுக்கட்டைகளுக்கும்
ஆடிச்செவ்வாய்கள் வந்துபோகின்றன
ஒளவையாரையும் பிள்ளையாரையும்தான்
அங்கே காணோம் இப்போதெல்லாம்
கைலாயத்தில் வாசக்கொழுக்கட்டைகள் கிடைக்குமென
போய்விட்டதாய்க் கேள்வி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Sunday, August 9, 2026

முகவரிகளின் வாசனை.


வளைந்து தொங்கும் நிலாவின் விளிம்பில்
மிதக்கும் என் பாதங்கள்
நிகழ்காலத்தின் காலணிகளை அணியும்போது
காற்றோடு கரைந்துபோகிறது
என் ஆதி முகவரிகளின் வாசனை

ஒவ்வொரு வாசலையும் கடக்கும் நேரம்
காலம் தோல் உரித்துக் கொள்ளும்போது
உதிர்ந்து விழும் என் நிழல்கள்
யாரோ விட்டுச்சென்ற நிழற்படத்தை
தன் முகம் என நம்ப முயல்கின்றன

வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளை
மெல்லத் திருடிக் கொண்டு
முட்களைச் சொருகி வைக்கும்
விசித்திர வேடத்திற்கு
பக்குவமென்றும் அனுபவமென்றும் பெயரிட்டு
நிறுவுந்தோறும்
இருண்ட வானில்
தன் பழைய கூட்டைத் தேடி அலையும்
ஒரு இறக்கையற்ற பறவையாய்
மிதந்து கொண்டிருக்கும்
என் குழந்தைப்பருவச் சிரிப்புடன்
யாருமற்ற வீதியில்
தன் சொந்தக் குரலையே தொலைத்துவிட்டு
தேடிக்கொண்டிருக்கிறது ஒரு வெற்று எதிரொலி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Saturday, August 8, 2026

நல்லாச்சி


நல்லாச்சி உறங்குகிறாள்
சமையலறைப் பாத்திரங்கள் ஓசையின்றி 
சைகையில் பேசிக்கொண்டிருக்க
தாழ்வாரம் வரை வந்து 
தயங்கி தவிப்போடு அமர்ந்திருக்கும்
வெயிலின் தங்க நிறம்
படிகளில் தேன்துளிகளாய்த் தேங்குகிறது

பகலெல்லாம் ஓயாமல் உழைத்த களைப்பில் 
பாயில் சாய்ந்திருக்கிறாள் நல்லாச்சி
இறகுகளை மெல்ல விரித்த தென்றல்
இதமாய் விசிறுகிறது அவளுக்கு
காற்றில் கலைந்த நிழல்கள்
பூனைக்குட்டியாய் அவள் காலடியில் முடங்கியிருக்க
முற்றத்தில் விளையாடும் பேத்தி
எட்டிப்பார்த்துக்கொள்கிறாள் அவ்வப்போது
அவளுக்கான கதைகள்தான்
இப்போது
நல்லாச்சியின் கனவுகளில் கருக்கொண்டிருக்கின்றன

அகில உலகமும் தன் இயக்கம் மறந்து நிற்க
காலமும் வெயிலும் வாசற்படியில் தவம் கிடக்கின்றன
சூரியனின் கதிர்களை அணைத்துக்கொண்டு
நல்லாச்சி உறங்குகிறாள்
பேத்தியும் காத்துக்கொண்டிருக்கிறாள்
அண்ணன் மீதான பஞ்சாயத்துக்கும்
கதைகளுக்குமாக

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.