Pages

Monday, April 6, 2026

நல்லாச்சி


வெய்யில் வாட்டுகிறதாம் நல்லாச்சியை
வருடந்தோறும் அதிகரிப்பதாய்ப் புலம்புகிறாள்
மழையும் குளிரும் வெயிலும்
அதிகரித்துகொண்டே போவதாய்ச்சொல்லி
அந்தந்த தெய்வங்களை ‘அர்ச்சிக்கிறாள்’
ஒருவரையொருவர் நோக்கிக்கொள்கின்றன அவை
பாவம்போல்
குளிருக்கென்றோர் தெய்வம் இல்லாமல்
தவித்துத் திரிகின்றன அர்ச்சனைகள்

முற்றத்தைப்போர்த்திய தென்னங்கிடுகு
சாளரங்களைத் திரையிட்ட வெட்டிவேர்
குலைகுலையாய் நுங்கும் இளநீரும்
கூடவே கொஞ்சம் மோரும் பானகமும்
ஆயுதங்களுடன் தயாராகத்தானிருக்கிறாள்
குட்டிச் சிப்பாய் பேத்தியுடன்

அவ்வூரைக் கடக்குமட்டும்
மேகத்தில் முகம் மறைக்கும்
நல்லாச்சிக்குப்பயந்த சூரியன்
ஆச்சிக்காய் கொணர்ந்த பனிப்பாறை
உருகிச் சிதற
படபடவெனப் பெய்கிறது ஆலங்கட்டி மழை
‘நாசமத்த மழை, என் செடியெல்லாம் போச்சே’
இன்னும் திட்டுகிறாள் நல்லாச்சி
வெறுத்துப்போன சூரியன்
பால்வெளிக்கப்பால்
சன்யாசியாய்ப் போய்விட்டதாய்க் கேள்வி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Monday, March 30, 2026

நல்லாச்சி


இருளென்றால் பயப்படும் பேத்திக்கு
இரவும் ஆகாது
மூன்றுகண்ணன் வசிப்பதாய்
முற்றத்திற்கும் செல்ல மாட்டாள்
இரவின் நிறத்தைப் பூசியதால்
கருமையும் ஒவ்வாததாயிற்று

ஒரு எள்ளுருண்டையைப்போல்
திரண்டிருக்கும் கன்றுக்குட்டிக்கோ
அவளென்றால் தனிப்பிரியம்
ஒதுக்கினாலும் விரட்டினாலும்
அகலாது பிரியஞ்சொரியும்

பேத்தியைத் தெளிவிக்க
இட்டுச்சென்ற நல்லாச்சி
பலவும் சொல்லிப் போதிக்கிறாள்
பிஞ்சு மனதைப் பக்குவப்படுத்துகிறாள்
இரவின் கருமைக்குள்தான் நட்சத்திரங்கள்
தம் முகவரியைத் தேடிக்கொள்கின்றன
வெளிச்சம் ஓர் பிம்பம் எனில்
இருள் ஓர் நிஜம்
வெயில் குடித்துக் களைத்த பூமியின்
போர்வையே இருள்
இத்தனை அஞ்சும் நீ
கண்துஞ்சும்போது
உன்னுள் அமைதியாய் உறைந்திருப்பவும்
காரிருளே
இருளை அஞ்சுவாயெனில்
அது
உன்னையே நீ அஞ்சுவதாம்
யோசிக்க ஆரம்பிக்கிறாள் பேத்தி
ஊர ஆரம்பித்திருக்கிறது எறும்பு
கல் தேய்ந்துவிடும் விரைவில்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Monday, March 23, 2026

நல்லாச்சி


நல்லாச்சியிடம் கதையளக்கிறாள் பேத்தி
கண்டபடி பறக்கிறது கற்பனைக்குதிரை
கதை சொல்வதும் அளப்பதும்
ஆச்சிகளின் வழக்கம்
இங்கு இன்று
அது பேத்தியின் முறை

நல்லாச்சியின் முதல் விமானப்பயணம்
குதூகலம் பாதி
கலவரம் பாதியென இருப்பவளிடம்தான்
கண்ணகல உரைக்கிறாள் பேத்தி
மேகங்களின் மேல் ஓய்வெடுக்கும் நிலவை
வன்னமிகு இந்திரலோகத்தை
மேலோகம் சென்ற மூதாதையரை
கண்குளிரக் காணலாமென்கிறாள்
அறிவுக்கும் சந்தேகத்துக்குமிடையே
ஊசலாடுகிறது நல்லாச்சி உள்ளம்

உயரப்பறந்த வானூர்தி
மேகங்களின்மேல் மிதக்கிறது
நல்லாச்சியின் பார்வையும்
தொடுதூரம் வரை தொட்டுத்திரும்புகிறது
அங்குமிங்குமாய்த் தேடுகிறது
விசாரித்த பேத்தியிடம் சொல்கிறாள்
‘எங்க அப்பாவைத் தேடுகேன்’
வார்த்தை வராத பேத்தி
நல்லாச்சியுடன் கைகோர்க்கிறாள் ஆதுரமாய்

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Monday, March 16, 2026

நல்லாச்சி


நாளும் நாலு நல்லதை
நடைப்பயிற்சியின்போது அலசுவது
நல்லாச்சிக்கும் பேத்திக்கும் வழக்கம்
தகவல்கள் பரிமாறுவதுபோலவே
அறிவுரைகளும் பரிமாறப்படும்
பேதமின்றி ஏற்பாள் நல்லாச்சி

வகுப்புத்தோழி குடும்பச்சண்டையால்
அம்மாச்சி ஊருக்குப் போய்விட்டது முதல்
நாளது தினம் தொலைக்காட்சிச்செய்தி வரை
பிழிந்து அலசியபின்
பேத்திக்கு வருகிறது சந்தேகமொன்று
மனிதர்கள் ஏன் மோதிக்கொள்கிறார்களென

அகந்தையும் தன்முனைப்பும்
பெற்றுப்போட்ட காரணங்கள்தாம்
காரணங்களென்கிறாள் நல்லாச்சி
துளிக்குள் பிறந்தழியும்
மாந்தர் அறியாரோ
துளிக்குள் துளியே தாமென்று
அகந்தை அமர்ந்த அறிவும்
மதயானை புகுந்த மல்லித்தோட்டமும்
பிழைக்குமோ!! தழைக்குமோ!!
கேள்விகளின் பாதையில்
சென்றுகொண்டேயிருக்கிறாள் பேத்தி
நின்று கொண்டேயிருக்கிறாள் நல்லாச்சி
யுகயுகமாய்..

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Sunday, March 1, 2026

தனிமையின் தண்மை


தூரத்து மலையில்
தனித்தலையும் ஒற்றைக்குருவி
மனிதவாசம் படா வெளியில்
ஒற்றையாய்ப்பூத்திருக்கும் நீலப்பூ
இன்னொரு ஒற்றைப்பாறைக்கு
தாவிச்செல்லும் வரையாடு
தன்னுள்மூழ்கித் தியானிக்கும்
அலையற்ற சிறுகுளம்
அவரவர் தனிமைக்கு
அவரவரே துணையாயிருக்க
பனித்துகள் திரட்டி
நிலாப்பொம்மை செய்கிறது மலை
ஒவ்வொருவரின் தனிமையையும்
கதகதப்பாய் அணைக்கிறது நிலா
குளிர்கிறது தனிமை.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Sunday, February 22, 2026

நல்லாச்சி


உலகத்து வெயிலெல்லாம் உம்மேலதான்’
செல்லமாகக் கடிகிறாள் நல்லாச்சி
நட்புகளுடன் விளையாடும் பேத்தியை
உச்சிப்பொழுதின் வெப்பம்
வாட்டுமென்ற அக்கறையில்
கலந்தாலோசித்த பட்டாளம்
திருவிழா விளையாட்டைத் தேர்கிறது
அறங்காவலராக்குகிறது நல்லாச்சியை

செங்கற்களே மூர்த்தங்களாய்
அகப்பட்ட பூக்களே தோரணங்களாய்
வடிவெடுக்கிறது சப்பரம்
பூஜைப்பொருட்கள் ஒருவன் உபயம்
நைவேத்யம் ஒருத்தி கொணர்கிறாள்
காற்றில் ஒருவன் கொட்டுமுழக்க
தாத்தாவின் கைத்தடி நாகஸ்வரமாகிறது
ஏதும் கொணராத ஒருத்தியை
விலக்குகிறது கூட்டம்

பதைக்கிறாள் நல்லாச்சி
ஓதுகிறாள் பேத்தியின் காதில்
களிமண்ணில் வனைகிறார்கள்
அழகான ஸ்பீக்கர் செட்டை
உபயதாரராக்குகிறார்கள் விலக்கப்பட்டவளை
எட்டூருக்கு முழங்குகிறது இசை
கிளம்புகிறது புறப்பாடு
குதூகலிக்கிறார் இறைவன்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Monday, February 16, 2026

நல்லாச்சி


பனிச்சறுக்கு விளையாட ஆசை பேத்திக்கு
நயந்தும் பயந்தும் 
பெற்றோர்க்குச்சொன்னவையெல்லாம்
கிணற்றில் சறுக்கிய கல்லாய்க் கிடக்க
வழக்கம்போல் சரணடைகிறாள் நல்லாச்சியிடம்

இமயமலை பற்றி விளக்கினால்
‘ஆராம்ளி மலய விட ஒசரமா?’ என்கிறாள்
மணல்மணலாய்ப் பனித்துகள் காணலாமென்றால்
‘ஆத்தங்கரையில் இல்லாத மணலா?’ என்கிறாள்
ஊரே குளிர்ந்திருக்குமென ஆசை காட்டினால்
‘தடுமம் பிடிச்சுக்கிடும்ல’ என்கிறாள்
ஊரே உலகமென வாழ்ந்த நல்லாச்சி

பனிச்சறுக்குக் கனவில் குதித்துக்குதித்து 
பாவனையில் நடந்த பேத்தி
வாய்க்கால் சேற்றில் கால் இடறுகிறாள்
சில அடிகள் சறுக்கிவிழுகிறாள்
‘கனவில் கண்ட வயலை
விழித்ததும் அறுக்கப்போனாளாம் ஒருத்தி
பனியென்று எண்ணினாயோ சேற்றை’
கடிந்த நல்லாச்சி
இழுத்துச்செல்கிறாள் ஆற்றங்கரைக்கு
பனிப்பொம்மை வேண்டி
சேற்றுப்பொம்மையாய் நிற்கும் பேத்தியை
வேடிக்கை பார்க்கின்றன அத்தனை மீன்களும்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.


Sunday, February 1, 2026

நல்லாச்சி

                                    

சாப்பிடுவதற்கு
செரை படுத்தாத பேத்தி
ஏனோ
சில பொழுதுகளில் சுணங்குவதுண்டு
‘காத்தாட சாப்பிடுதேன்’ என்றபடி
கிணற்றடிக்குத் தட்டுடன் செல்பவள்
துலக்கி மினுக்கி மீள்வாள்
அம்மட்டில் திருப்தியுற்ற நல்லாச்சி
கண்டுகொள்ளாதிருக்கிறாள் சின்னவளை

‘காத்தாட’ தனித்துண்ணும் பொழுதுகள்
சந்தேகத்தை விதைக்கின்றன
அன்னையின் மனதில்
செல்லப்பேத்தியைச் சொல்லுக்கு ஆளாக்கினால்
ஆச்சி வீசுவாள் கண்டனக்கணையை
அகிலமே ஆச்சிக்கு அஞ்சும்போது
அன்னை எம்மாத்திரம்
எனினும்
புகையை ஒளிக்க இயலுமோ!!

கரையவிட்ட தோசைகள் சூரியகாந்தியாய்
தூக்கியெறிந்த கொழுக்கட்டைகள் சப்போட்டாவாய்
மோதகங்களெல்லாம் கொய்யாவாய்
செடிக்குச்செடி காய்த்திருக்க
கிள்ளிப்போட்ட இட்லிகளோ
பஞ்சுபஞ்சாய்ப்பூத்திருக்கின்றன
சிலையாகிறாள் நல்லாச்சி திகைப்பில்
ஒன்றும் தெரியாத பாவனையில்
நழுவுகிறாள் பேத்தி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Sunday, January 25, 2026

நல்லாச்சி


விதைத்த சோளக்காடு அறுவடைக்கு நிற்கிறது
தளவாடங்களுடன் கிளம்புகிறது குடும்பம்
கோணிகளோடு நல்லாச்சியும் 
சிறு பையுடன் பேத்தியும் தொடர்கின்றனர்

கும்பிட்டு அறுத்த
முதல் கதிரே சாவியாய் இருக்க
அடுத்தடுத்த கதிர்களும் அப்படியே
போனால் போகிறதென
ஒன்றிரண்டு சோளமுத்துகளைச் சுமந்து
வெறுஞ்சிப்பியாய் பிளந்திருக்கின்றன மீதமுள்ளவை
பறவைகள் பாதி நாம் மீதியென
பிரிக்கத்தேவையின்றி
காலிப்பாத்திரத்தை வைத்திருக்கிறாள் மண்மாதா
மலைத்து நிற்கின்றனர் மற்றவர்
பரிகசிக்கிறாள் பேத்தி

அன்னைக்காய்ப் பரிகிறாள் நல்லாச்சி
எத்தனை பசித்திருந்தாளோ
கொடுத்ததையெல்லாம் செரித்துவிட்டாள்
மனங்குளிர்ந்த மண்மாதா
நாம் கொதிக்கச் சகிப்பாளோ
அடுத்த விளைச்சலை
பன்மடங்காய்த்தருவாள்
கிடைத்தவற்றை வீடுசேர்ப்போம் கோழிகளுக்காகும் 
இதுவும் அன்னையின் பிரசாதமே 
நல்லாச்சியைத் தொடர்கிறாள்
புத்திக்கொள்முதல் செய்த பேத்தி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Friday, January 16, 2026

நல்லாச்சி


தொலைத்த இடத்தில்தான் தேடணும்
என்கிறாள் நல்லாச்சி
தினமும் ஏதேனுமொன்றைத்
தொலைக்கும் பேத்தியிடம்
அவள்
எங்கோ தொலைத்ததையெல்லாம் கண்டுபிடிக்கும்
மந்திரக்கோலன்றோ நல்லாச்சி
எனினும்
அல்லல் அதிகமானால் அலுத்தும்கொள்வாள்

பொருட்களைத்தொலைத்தே பழக்கப்பட்ட பேத்தி
ஒருநாளில்
நல்லதோர் நட்பையும் தொலைக்கிறாள்
பிரிவென்ற பெயரில்;
அவ்வன்பை எங்கே தேடுவதெனக் குழம்புகிறாள்
பெற்றோரின் அன்போ
உற்றாரின் அன்போ
இன்னபிற களித்தோழரின் அன்போ
இணைவைக்க இயலாமல் தத்தளிக்கின்றன
தூக்கமின்றி ஏக்கத்தில் மெலிகிறாள் பேத்தி
மாற்றமொன்றே மருந்தாகும் என்கிறாள் நல்லாச்சி

முற்றத்தில் மேய வரும் பறவைகள்தாமும்
அன்பைச்சொரிகின்றன அவள்மேல்
மயிலிறகுகளாய் தூவியாய்
கொஞ்சுமொழிகளும் கீதங்களுமாய்
நனைக்கின்றன பேத்தியை
துளித்துளியாய் உயிர்க்கிறாள் அவள்
தொலைக்காத இடத்திலும் கிடைக்கலாமென
புரிந்து கொள்கின்றனர்
ஆச்சியும் பேத்தியும்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.


Tuesday, January 6, 2026

நல்லாச்சி


விருந்தொன்று வந்திருக்கிறது
நல்லாச்சி வீட்டுக்கு
அன்புமிக்கதுதான் அந்நெஞ்சமும்
எனினும்
இருண்டதும்
பேத்தியின் மேல் அன்பு
சற்றே வறண்டதும் கூட

வந்த நாள் முதல்
அதன் அட்டகாசங்களையெல்லாம் சகிக்கின்றனர்
உறவின் பெயரால்
தலைமேல் தாங்குகின்றனர் 
அன்பின் பெயரால்;
பேத்தியின் நனையும் கண்களையும்
வெதும்பும் நெஞ்சத்தையும்
மரியாதை நிமித்தம் வாளாவிருப்பதையும்
கண்ணுறாதவளல்ல நல்லாச்சி
வந்த உறவின் மனக்காயம் புரியாதவளுமல்ல

எல்லை மீறிய ஓர் நாளில் 
அருகிருத்தி உரைக்கிறாள் உறவிடம்
உன் மடி நிரம்பி வழிகிறது
என்னிடமிருப்பதோ ஒன்றே ஒன்று
மதிப்பறிந்தும் அலட்சியப்போக்கு
முறையோ? என்கிறாள்
உறவின் காயத்துக்கு மருந்திடுகிறாள்
மெல்ல மெல்ல ஆறத்தொடங்குவது
உறவின் கண்ணீரால் தெரிகிறது
தழும்பும் மிச்சமின்றிப்போகுமென்பது
சொல்லாமலே புரிகிறது 
பெருமூச்செறிகிறாள் நல்லாச்சி
விடியலுக்கு
மீதமிருக்கும் தூரத்தை எண்ணி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி

Monday, December 29, 2025

நல்லாச்சி


கண்புரை ஏற்பட்டிருக்கிறதாம் நல்லாச்சிக்கு
அறுவை சிகிச்சைக்குப் பயப்படுகிறாள் அவள்
தைரியம் சொல்பவர் சிலர்
அதன் பெயரால் 
அதைரியப்படுத்துபவர் இன்னும் சிலர்

தொடச்சுப்போட்ட டியூப்லைட் மாதிரி
பளீர்ன்னு தெரியும் ஒலகம்
அழகுபோல சீரியல் பாக்கலாம்
எனத்தெம்பூட்டுகிறாள்
சிகிச்சையால் பலன் பெற்ற செல்லாச்சி
நப்பாசையால் சம்மதிக்கிறாள் நல்லாச்சி
முற்றத்து வெயில் முகத்தில் படாது
வெக்கை அணுகாது 
அருகிலிருந்து பேத்தி பேச்சுத்துணையாக
அந்தப்புரத்து ராணி போல் உணர்கிறாள் அவள்

எனினும்
தன்னைப்போல் தாத்தாவும்
கண்ணாடி அணியும் ரகசியம் புரிந்த தினத்தில்
திக்குமுக்காடிப்போனாள் அவள்
தன்னைத்தானே
ஆண் காந்தாரி என வர்ணித்துக்கொண்ட தாத்தா
உயர்தர ரேபானுடன் உல்லாசமாகத் திரிவதில்
கடுப்பிலிருக்கும் அவளிடம் நெருங்கி விடாதீர்கள்
சுட்டெரித்து விடுவாள்
புரையே ஏற்படாத நெற்றிக்கண்ணால்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Saturday, December 20, 2025

காலத்தின் ஆன்மா.. (பண்புடன் மின்னிதழில் வெளியானது)


பேரன்பும் பெருங்கருணையும்
ததும்பித்தளும்பிய காலக்கடலிலிருந்து
பொங்கிப்பிரவாகித்து
கரைதழுவ ஓடி வந்தன நினைவலைகள்
நினைவுகளெனில் பாலைவனச்சோலையுமாம்
நினைவுகளெனில்
புன்னகையின் பின்னொளிந்த கோரப்பற்களுமாம்

வாழ்வெனும் காட்டாற்றின் நடுவே
சிறுதுண்டு நிலமாய்
காலூன்றி ஆசுவாசம் கொள்ளவும்
மலர்ந்திருக்கும் நினைவுகளில் கமழும்
நறுமணத்தால் பேதலித்து
காலடி நிலம் நழுவவும்
இளஞ்சூரியன் சிரிக்கும் இவ்வீதியில்
அதோ அந்தக்குழந்தையின் நகைப்பொலியாய்
ஓங்கியொலித்து
இறுதியில் முணுமுணுப்பாய்த் தேய்ந்தடங்கவும்
என நங்கூரமிட்டு
வரிசையாய் நிற்கின்றன நினைவுகள்
அவ்வப்போது பார்த்துக்கொள்ளும்
நட்சத்திரங்களைப்போல் மினுங்கியபடி

நினைவலைகளின் துணையுடன்
துடுப்பசைத்துத் திரிந்த நினைவுகள்
செலவிட மனதுவாரா உண்டியல் காசைப்போல்
கானல் நீருமாகி
எத்திசையிலோ உச்சுக்கொட்டிய பல்லிக்கு அஞ்சி
பேராழத்தில் அமிழ்ந்து கிடக்கின்றன
கரை திரும்பாமலும் எல்லை மீறாமலும்
காலத்தின் ஆன்மாவாய் நிலைத்தபடி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Sunday, December 14, 2025

நல்லாச்சி



வாழும் பல்லியும் மனைப்பாம்பும்
அரங்கு வீட்டில் உலவும் தேள்களும்
அசைத்துப்பார்த்ததில்லை பேத்தியை
பெரிய தாத்தாவின் முழ நீளத்தாடிக்கும்
மிலிட்டரி மாமாவின் கம்பீர மீசைக்கும்
சற்றும் பயந்ததில்லை அவள்

கண்ணைக்குத்துவதாய்ச்
சொல்லப்படும் சாமியிடமும்
தூக்கிச்சென்றுவிடுவதாய்
நிறுத்தப்படும் பூச்சாண்டியிடமும்
ராஜபார்ட்டுகளுக்குக் கோமாளிவேஷமிடுகிறார்களேயென
பரிதாபமேயுண்டு அவளுக்கு
தேனீக்குப் பயப்படாத மாமன்
குளவிக்கு அஞ்சும் விந்தையும்
முரட்டுக்காளையைத் தட்டி விலக்கும் செல்லாச்சி
மருமகளிடம் காட்டும் பணிவும்
என்றுமே புரிந்ததில்லை அவளுக்கு

ஆளைவிழுங்கும் சுறாமீனொன்றை
ஆங்கிலப்படமொன்றில் கண்ட நாள்முதல்
அத்தனை தைரியத்தையும் மறக்கிறாள்
எந்தக்குழாயின் வழி எத்தனை சுறா வருமோவென
அண்ணன் போடும் தூபத்தால்
அடுக்களை செல்லவும் மறுக்கிறாள்
சாமதானபேதங்களை பேத்தியிடமும்
தண்டத்தை அண்ணனிடமும் பிரயோகித்தபின்
நிலைமையைச் சீரமைக்க முற்படுகிறாள் நல்லாச்சி
ஆதியிலிருந்து ஊட்டி வளர்த்ததெல்லாம்
பாதியில் கரைந்து போனாலும்
எல்லாப்பூச்சையும் அழித்துவிட்டு
மறுபடியும் ஆரம்பித்திருக்கும்
அந்த ஓவியம் செவ்வனே நிறைவுறுவதாக.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட "பண்புடன்" மின்னிதழுக்கு நன்றி.

Thursday, December 4, 2025

நல்லாச்சி


ஒட்டி இழையும் குஞ்சுகளையெல்லாம்
எட்டித்துரத்தும் கோழியின் போக்கு
கொஞ்சமும் பிடிக்கவில்லை பேத்திக்கு
நல்லாச்சியிடம் வந்து அங்கலாய்க்கிறாள்
‘பிள்ளேளுக்க தப்பை அம்மைதானே மன்னிக்கணும்
அதுகளுக்கேது போக்கிடம்’

வெதும்பும் பேத்தியை
தேற்றுகிறாள் நல்லாச்சி புன்னகையுடன்
‘அட! கோட்டிப்பயபுள்ள.. குஞ்சுகளையெல்லாம்
கோழி தவுத்துட்டுது’ என்கிறாள்
‘தவிர்த்துவிட்டது’ எனத் தெளிவாயும் செப்புகிறாள்
புரியாமல் தலைசொரியும் பேத்திக்கு
இரைதேடல் முதல்
இரையாகாமல் தப்புதல் ஈறாகப் பயிற்றுவித்தபின்
குழந்தைகளை
சுயமாய் வாழச்செலுத்துதலே
தவிர்த்துவிடுதல் என விளக்குகிறாள்

எனில்
மனிதர்கள் மட்டும் ஏன்
குழந்தைகளைத் தவிர்த்துவிடுவதில்லையென்ற
பேத்தியின் கேள்விக்கு
நல்லாச்சி வாயடைத்து நிற்க
செல்லாச்சி பதிலிறுக்கிறாள்
மனிதப்பிறவியில்
எல்லாக் கேள்விகளுக்கும் விடையேது மகளே
தலையாட்டிக்கொண்ட பேத்தி
தானியத்தை இறைக்கிறாள்
அம்மையாய் எண்ணி அணைகின்றன
அத்தனை குஞ்சுகளும்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Sunday, November 23, 2025

நல்லாச்சி..


சுரைக்குடம் கட்டிச் சில நாட்கள்
காற்றடைத்த பையுடன் பலநாட்கள்
கவிழ்த்த குடத்துடன் ஒன்றிரண்டு நாளே
கடப்பாரை நீச்சலை மறந்து
கெண்டை மீனாய் நீந்துகிறாள் பேத்தி
நீரில் தானுமொரு துளியாய்க்கலந்தவளுக்கு
நிலமென்பது நினைவிலேயே இல்லை

ஆறும் குளமும் யோசிக்கின்றன
அடுத்த ஊருக்குப் போய்விடலாமென
தவளைகளெலாம் தப்பித்துவிட்டன எப்போதோ
‘கலங்கியது தானே தெளியும்’
அமைதிப்படுத்துகிறது மூத்த ஆறொன்று
‘வாய்ப்பில்லை’ என்கிறது வாய்க்கால்

ஊரிலுள்ள நீரிலெலாம் குடைந்தாடியவள்
கிணறுகளை ஏனோ சீண்டுவதில்லை
சாகசம் அங்குபோல் எங்குண்டு என்போரை
கிணறுகளின் பிரதாபம் பாடுவோரை
முற்றத்து மூலையில் நிறுத்துவாளவள்
பெருமழையில் விழுந்த தாத்தா
இரவெல்லாம் தவித்த கிணறு
தூர்ந்து போகாமல்
இன்றும் நினைவுகளில் அலையடிப்பதை
நல்லாச்சியும் அவளுமே அறிவர்

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Saturday, November 22, 2025

நல்லாச்சி..


கிடத்திய கிடுகில் வைக்கோல் பரப்பி
அதற்குக் குளிராது வேட்டி போர்த்தி
சுடுசாதம் கொட்டிப்பரத்துகிறாள் நல்லாச்சி
முத்தாய்ச்சொட்டும் துளிகளெல்லாம்
சத்தமில்லாமல் பயணிக்கின்றன கிடுகு வரை

அம்பாரச்சோறு அடங்குகிறது அண்டாவில்
சம்பாரம் பயணிக்கிறது அத்தோடு
முற்றத்து முருங்கைச்சாம்பார் உசத்தியாம்
கிரீடமாய்ப் பயணிக்கிறது நல்லாச்சி தலைமேல்
சோற்றுப்படையெடுத்துச் செல்கிறாள்
நடவு வயல் வீரர்களை நோக்கி
குழம்பும் கறியுமாய் ஆயுதமேந்தி

‘சோத்துவாசனைக்கு என்னமும் ஒட்டிக்கிட்டு வரும்’
இரும்புத்துண்டைக்காவலுக்குப் பணித்து 
பத்திரம் என்கிறாள் பேத்தியிடம்
‘மடத்துக்கிணத்தடியில்தான் அரற்றியபடியே அலைகிறாளாம்
சித்தி கொடுமையால் செத்த செம்பகம்
செத்தபின்னும் தீராப்பசி தொடருதையே
பாவப்பட்ட செம்மத்துக்கு’
புலம்பிய நல்லாச்சி கவனித்தாளில்லை
வரப்பிலும் மேட்டிலுமாய் அமர்ந்து
பசியாறும் நடவு ஆட்களில்
ஒருத்தி மட்டும்
செம்பகத்தின் சாயலாய்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Tuesday, November 4, 2025

நல்லாச்சி

திடலின் ஓரத்திலிருக்கும்
ஆலமரத்தைக் கண்ணுறுந்தோறும்
ஆவலும் பயமும் கொள்வாள் பேத்தி
கிளிகளைப்போன்ற அக்காக்களும்
அக்கக்கோவெனும் கிளிகளும்
இறுகப்பற்றி ஊஞ்சலாடும் விழுதுகள்
ஆசையையும் பயத்தையும் விதைத்திருந்தன அவளுக்குள்

விண்ணுக்கும் மண்ணுக்கும் 
பாலமாயிருந்த விழுதுகளில் சில
பாதாள லோகத்தையும் பார்த்துவரப்புகுந்திருந்தன
எண்ணெய் தடவாத முடிக்கற்றையென
நுனிகளில் பிளந்து கிளைத்திருந்தன சில
அக்கையொருத்தி கைபற்றிச்சேர்க்க
விழுது பற்றி ஆடிய பேத்தி
அதே வீச்சில்
பூமியை முத்தமிட்டுப் புரண்டு
புழுதியை விபூதியெனப் பூசியெழுந்தாள்
கசிந்த குங்குமச்சொட்டுகளை ஒற்றியெடுத்தாள்

வாரியணைத்த நல்லாச்சி
சூனியக்கிழவிதான் இவ்வடிவெடுத்திருப்பதாயும்
‘வடக்கற்றையெலாம் அவளின் சடைக்கற்றை
அவ தலமுடியில தொங்குனா வலிக்கும்லா
அதாம் தள்ளியுட்டுட்டா’
என்றும் பயமூட்டுகிறாள்
உளுத்த மரத்திற்கொரு கதை சொன்னவள்
உயிர்மரத்துக்கும் ஒன்று வைத்திருப்பாள்
தள்ளிவிடாத மரமொன்று
தேவதையின் கூந்தலாய்க் கிளைத்திருக்கலாம்
எங்கேனும்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Tuesday, October 28, 2025

நல்லாச்சி..


பூக்களென்றால் கொள்ளைப்பிரியம் பேத்திக்கு
சூட்டிப்பார்ப்பதில் அதிகப்பிரியம் நல்லாச்சிக்கு
தென்னைமரக்குடுமி வைத்த பிராயத்திலிருந்து
கருநாகம் போல் பின்னலிடும் வயது வரை
விதவிதமாய்ச் சூட்டி அழகு பார்க்கிறாள்
சூட்டும்போதே பயன்களையும் சொல்லிவளர்க்கிறாள்
தாழைப்பூமுடித்து மருக்கொழுந்து சூடிய பொழுதில்
குழந்தை மீனாட்சியாய் வரித்து
சுற்றிப்போட்டும் கொள்கிறாள்  

பன்னீர், சண்பகம், ரோஜா, மகிழம், டேலியா என
தாத்தாவின் தோட்டத்தில் பூக்கிறது 
அந்தப் பூப்பிசாசிற்காக
எனினும்
தங்கத்தட்டாய் மலர்ந்திருக்கும் சூரியகாந்தி மேல்
ஆயிரம் கண் வைத்திருக்கிறாள் பேத்தி
தராமல்
சிட்டாய்ப்பறக்கும் மாமனை
வீடு காடு எங்கிலும் துரத்திக்கொண்டு ஓடுகிறாள்
நாவுலர்ந்து மூச்சு வாங்க
தட்டட்டியில் ஒளிகிறான் மாமன்
கூந்தல் பறக்க நிற்கிறாள் பேத்தி
ஓர் இசக்கியென

“அதை வித்துக்கு விட்டிருக்கு மக்களே
ஒரு பூவிலிருந்து ஓராயிரம் செடிகள்
பல லட்சம் சூரியப்பூக்கள்
காடெங்கும் மலையெங்கும் சூரியனாப்பூக்கும்
கைகொள்ளாமல் அள்ளிக்கொள்வாய் நீ”
சமாதானப்படுத்திய நல்லாச்சியின் வாக்கால்
சன்னதம் நீங்கி அமைதியடையும் பேத்தியின்
கண்முன் விரிகிறது
அடிமுடி காணவொட்டா ஒரு சூரியக்காடு.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

பானைக்குள் ஒரு பூனை.

தோழி செல்வியின் பூனை
இருளின் ஆழத்தில் தனிமையில்
சிறு பானைக்குள் முடங்கியமர்ந்து 
பகற்கனவில் ஆழ்ந்திருந்தது சிறு பூனை

சோம்பல் முறித்து நெளிந்தெழுந்த அது
வெளியேற இயலாமல் திகைத்தது
தவித்து வழிதேடிய பூனையின்
சின்ன மூளைக்குள் பிரளயமே நடந்தது
அதன் ஒவ்வொரு அசைவையும் 
தடைசெய்து சிறைப்படுத்தியது
அந்த சின்னஞ்சிறு பானை

கால் வீசி நடந்த கம்பீரம்
பழங்கனவாய் மின்ன
ஏக்கத்தின் மொழி கண்ணீராய் வழிய
சிக்கிக்கொண்ட ஆன்மா போராடுகிறது
பார்ப்பவர்களுக்கோ
அதுவுமொரு விளையாட்டாய்த்தெரிகிறது 
உலகமே ஒரு பெரும் பானை
பூனை என்பது
வாழ்வின் பிரதிபலிப்பும்தான்.