
(நன்றி:கூகிள்)
அவசரமாய்ப்போட்ட ஒப்பனையை
ஆங்காரமாய் கலைத்துவிட்டு
ஒன்றுமறியாததுபோல்
சிரித்துக்கொண்டிருக்கிறது மழை;
வேஷம் கலைந்த கோபத்தை
கையாலாகாத்தனமாய் வெளிப்படுத்தி
இளித்துக்கொண்டிருக்கிறது சாலை;
தேங்கிப்போன நினைவுகளுடன்
அடுத்த ஒப்பனையை எதிர்நோக்கி...
சுமையை இறக்கிவைக்கும்
இலக்கு தேடி..
விரைந்துசெல்கின்றன
மடிகனத்த மேகங்கள்;
பெருமூச்சு விட்டுக்கொண்டு...
விழுந்து எழுந்து,
விழுப்புண் பெற்று,
பூகம்ப பயணத்தின் இலவச இணைப்பாய்
முதுகுவலி வாங்கி,
யமதர்மனின் நிமிட தரிசனம்பெற்று,
அடுத்த நாளுக்கான நீட்டிப்புக்கு
உத்தரவாதம் பெற்ற உயிருடன்
வந்து சேர்கிறோம் நாம், வீடு நோக்கி..
