Pages

Tuesday, December 15, 2015

செண்பக வீதியில்..

சுட்ட படம்.
ஆங்கோர் சாலைக்கம்பத்தில்
பூத்திருந்த செம்மலரின்
தகிக்கும் காட்டினையொத்த நிறம் ஒன்றே
அத்தனை வாகனங்களையும்
ஸ்தம்பிக்க வைக்கப்போதுமானதாயிருந்தது
சற்றே வெளிறி அம்மலர்
மஞ்சள் பூசிக்கொண்டபோது
அந்நிறமொத்த செண்பகச்சரங்களை
வாகன வீதியில் விற்றுக்கொண்டிருந்த சிறுவனின் குரலும்
பதட்டம் அணிந்திருந்தது
மஞ்சள் பூசிய செம்மலர் பசிந்து உதிர்ந்தபோது
விரைந்தவர்களின் பார்வையில்
மனமும் பூச்சரங்களும் ஒருசேரக் கனக்க
சுமந்து நின்றிருந்த அவன் படவேயில்லை
மீதமிருந்ததில் ஒரு சரம்
தங்கையின் சாயலிலிருந்த
ஓர் ஏழைச்சிறுமியின் கூந்தலமர்ந்து
செல்லிடமெங்கும் நறுமணம் பூசியபடியிருந்தது
வசிப்பிடம் திரும்பிக்கொண்டிருந்த அவனுக்கு
அன்றைய நாளினை நிறைவடையச்செய்ய
அதுவே போதுமானதாயிருந்திருக்கலாம்.

வால்: வெளியிட்ட அதீதம் மின்னிதழுக்கு நன்றி.

Saturday, November 21, 2015

நல்லாச்சி - 4


"இதென்ன?அதென்ன?" வீதிகளை அளந்தபடி
பேத்தி வீசும் கேள்விகளுக்கெல்லாம்
பதிலளித்த நல்லாச்சி
"இது யார்" என்ற கேள்விக்கு
எப்படிப்பதிலளிப்பாள்
தாத்தா கொணர்ந்த 'இன்னொரு' ஆச்சியென்று.
*********************************
"எவ்ளோ பெரிய பூனை!!"
கூண்டுக்குள் உறங்கும் உருவம் கண்டு
இரு கன்னம் பொத்தி
அதிசயித்த பேத்திக்கு
புலியை அறிமுகப்படுத்தினாள் நல்லாச்சி
அன்றிரவு
பால் திருட அவர்கள் வீட்டிற்கு
வந்ததொரு சின்னப்புலி

தொலைக்காட்சிப்பெட்டியில்
மறுநாள்
புள்ளிமானைத் துரத்திக்கொண்டிருந்த அப்பூனைக்கு
ஊட்டச்சத்து கலந்த பாலை ஊட்டியதாய்
குற்றம் சாட்டப்பட்ட நல்லாச்சி
கூண்டுக்குள் நிற்கிறாள்
உறுமும் சாட்டைக்கு உடல் குறுக்கியபடி.
***************
ஏதோவொரு கோபத்தில்
பேத்தி விட்டெறிந்த பொம்மை
எதேச்சையாகவும் மிகச்சரியாகவும்
வந்து விழுந்தது நல்லாச்சியின் கைகளில்.

"அடடே!!.. சரியா காட்ச் பிடிச்சிட்டீங்களே"
கெத்தை விடாமல் பாராட்டியபடி
முளைக்காத மீசையில் ஒட்டாத மண்ணை
தட்டி விட்டுக்கொள்ளும் பேத்தியை
அள்ளிக்கொள்கிறாள் நல்லாச்சி
இன்னொரு பொம்மையாய்.

வால்: வெளியிட்ட அதீதம் மின்னிதழுக்கு நன்றி.

Tuesday, September 22, 2015

நிசப்த இரைச்சல்..

இணையம் கொடுத்த படம்.

ஆந்தைக்கும் பின்னிரவு நாய்களுக்கும் போட்டியாக
சீரற்ற இடைவெளிகளில் முழங்கிய
வாகன ஒலிப்பானுக்குப் போட்டியாக
இருமிக்கொண்டிருந்தார் மேல்மாடித்தாத்தா
நடுநிசித் தொந்தரவைச் சலித்தபடி

திறக்கப்படாத வாயிலுக்காய்
சக மனிதர்களின் பொருமலைப்பொருட்படுத்தாமல்
வாகனத்தைக் கதற விட்டுக்கொண்டிருந்தவரின்
விரல்களில் ஒழுகிக்கொண்டிருந்தது
அன்றைய தினத்தின் அலுப்பும் சலிப்பும் கோபமும்

மேடு பள்ளம் சுற்றி கல் முள் மிதித்தோடி
சோர்வுற்றிருந்த அந்த வாகனமும்
ஓய்வுக்காக ஏங்கிக்கொண்டிருந்திருக்கக்கூடும்
திருடனொருவனை எச்சரிப்பதை அறியாமல்
கடைசித்துளி சக்தியையும் திரட்டிக்கூவியது அது
காத்திருப்பின் துளிகள் நிறைவடைந்து
நிசப்தம் சூழத்தொடங்கிய நொடியில்
திருடன் வெளியேறிய வீட்டின்
எங்கோ ஓர் மூலையிலிருந்து
வீறிடத்தொடங்கியது ஒரு குழந்தை.

வால்: கவிதையை வெளியிட்ட அதீதம் மின்னிதழுக்கு நன்றி.

Thursday, August 13, 2015

நல்லாச்சி.. (3)

அருவியைப் படத்தில் பார்த்து வியந்த நல்லாச்சியிடம்
பம்ப்செட் பார்த்து அதிசயித்த பேத்தி
பெருமைப்பட்டுக்கொண்டாள்
உலகிலேயே பெரிய அருவி இருப்பது
தன்னூரில்தானென்று

அருவியென்பது ஒரு பெரிய பம்ப்செட்தான்
பம்ப்செட் என்பதும் ஒரு சிறிய அருவிதானென்று
நமுட்டுச்சிரிப்போடு சொல்கிறாள்
கிணறுகள் தோறும் அருவிகள் கொண்ட
ஊரிலிருக்கும் நல்லாச்சி
அவள் பங்குக்கான பெருமையோடு..
********************************************

எழுதப்படிக்க பேத்தியும்
மாக்கோலமிட நல்லாச்சியும்
ஒருவருக்கொருவர் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தனர்
இருவரிடையேயும் பிணக்கு ஆரம்பித்தபோது
அவ்வீட்டிலிருந்து கிளம்பிய கோடுகள் இரண்டும்
அண்டசராசரமெங்கும் சுற்றியலைந்து
களைத்துத்திரும்பியபோது
பேத்தியின் ஒற்றைப்புள்ளிக்கோலத்தையும்
ஆச்சியின்
சற்றே வாய் பிளந்த 'அ'னாவையும்
பாராட்டிக்கொள்ளும் பெருந்தன்மை
வாய்த்திருந்தது இருவருக்கும்.

வால்: வெளியிட்ட அதீதம் மின்னிதழுக்கு நன்றி.

Saturday, August 1, 2015

எளியவை..

என் பிரார்த்தனைகள்
எப்போதும் எளிமையானவையே
வீடுவீடாய் அமைதியை விநியோகித்துச்செல்லும் புறா
எந்த வேடன் வீட்டு அடுப்பிலும் வேகாதிருக்கட்டும்
என்பதிலிருந்து
உச்சி பொசுக்கும் தீப்பகலில்
எனக்கென ஓர் பனித்துளி
பெய்யவேண்டுமென்பது வரையிலும்
பட்டியலில் அடங்கும்

அத்தனையையும் செவி மடுத்தபின்
பேராசை கூடாதென்று உரைத்து
கற்பூரதீபத்திலேயே
எனது பிரார்த்தனைகளைப்பொசுக்கிய கடவுளிடம்
ஊதுவத்தி வாசத்தையே திரையிட்டு மூடும்
வெண்வத்தியை மட்டுமாவது
சம்ஹாரம் செய்யக்கோரினாலோ
"என்னால் செய்யவொட்டாதேயம்மா இது.. எளிதாய் ஏதேனும் கேள்" என்றபடி
ஆலயம் விட்டு எழுந்தோடுகிறான்

அவன் செல்லும் வழிகளில்
மதுபானக்கடைகள் இல்லாதொழியட்டும்
என்றொரு பிரார்த்தனையை
வைக்கிறேன் அவனிடமே

முன்னம் வைத்த பிரார்த்தனைகள்
இதை விட எளிதென்று
ஒவ்வொன்றாய் நிறைவேற்ற ஆரம்பிக்கிறான்
கண்ணையும் காதையும் மூடிக்கொண்டதோடு
வாயையும் மூடிக்கொண்டிருக்கலாமோ
என்று யோசித்தபடி.

வால்: கவிதையை வெளியிட்ட அதீதம் மின்னிதழுக்கு நன்றி.

Saturday, March 14, 2015

ஆச்சியின் வாசனை.. (நல்லாச்சி - 2)

மெஹந்தி இடத்தெரியாத நல்லாச்சியை
உள்ளங்கையில் சிவந்திருந்த
நூடுல்ஸ் வரிகளும் அன்னமும்
சற்றே மிரளச்செய்திருந்தன
தொப்பியணிந்த விரல்களும்
இட்லி தோசையிட்ட உள்ளங்கைகளுமாய் வாழ்ந்த
அந்த கிராமத்துமனுஷி
சற்று அந்நியப்பட்டே நின்றிருந்தாள் அச்சூழலில்
அடுத்த விடுமுறைக்குள் கற்றுக்கொள்வதாய்
சபதமிட்டிருந்த நல்லாச்சி
சாக்குச்சொல்ல வார்த்தையும் தேடிக்கொண்டிருந்தாள்

பட்டணத்துப்பேத்தியை எதிர்கொள்ள நாணியவளிடம்
இட்லி தோசை வரைந்து
கூடுதலாய்த்தொப்பிகளும் வேண்டிய
அந்தக்கரும்புக்கொழுந்தின்
மருதாணிப்பூங்கரங்களில்
இழுத்தணைத்து முத்தமிட்ட ஆச்சியின்
அன்பு சிவந்திருந்தது
பேத்தியின் கைகளில்
மருதாணி வாசனையுடன்.

வால்: கவிதையை வெளியிட்ட அதீதம் இதழுக்கு நன்றி.

Saturday, January 10, 2015

நல்லாச்சி - 1

நல்லாச்சிக்கும் பேத்திக்குமிடையே
கடும் வாக்குவாதம்

"வெற்றிலை போட்டால் மாடு கொத்துமா தாத்தா?"
பேந்தப்பேந்த விழித்துக்கொண்டிருந்தார்
இழுத்து வரப்பட்ட பஞ்சாயத்துத்தலைவர்
"கோழிதான் முட்டும்" என்பதை
உரைக்கவியலாமல்..

**********************
கன்று மிதித்ததால் பாதம் வீங்கிக் கிடக்கும்
பேத்திக்கு
மஞ்சள்பத்துப் போடவென
மஞ்சனத்தி இலை பறித்தரைக்கிறாள் நல்லாச்சி
"செத்தோலதாம் வலிக்கும்.. கண்ணப்பொத்திக்கோ"
சொல்பவளை ஆமோதிக்கிறது
எங்கிருந்தோ ஒரு இருட்டுக்குயில்
தன் காலை நீவியபடி.
சமாதானப்படுத்திக்கொண்டிருப்பவளின் கண்களில்
வழிகிறது பேத்தியின் வலி
தீராநதியாய்..

************************

"நாலாம் பிறை கண்டால்
நாய் படாத பாடு பட வேண்டியிருக்கும்"
பேத்தியைக்கடிந்துகொண்டாள் நல்லாச்சி
ஜன்னல் வழியே நிலா பார்த்த பொழுதில்.
செய்வதறியாது கலக்கத்துடன் விழித்தது
தடாகத்தில்
தன் முகம் ரசித்துக்கொண்டிருந்த நிலா.