Pages

Tuesday, May 18, 2010

ஒற்றை இறகு.

அருகருகே அமர்ந்து
அலகுகள் உரசி,
அன்பைப்பரிமாறும்
அந்த மின்னல் கணங்களில்;
என்ன பேசிக்கொள்ளுமாயிருக்கும்
அந்த குருவிகளிரண்டும்?!!!

தானியம் கொத்தும்
அந்த
அவசரமான கணத்திலும்,
கீச்..கீச்.. என்ற செல்லச்சண்டைக்கிடையே
குளித்த இறகைக்கோதும்போது;
தெறித்த
ஒருதுளி சூரியனில்
பிரதிபலித்தன
ஆயிரம் வானவில்கள் !!....

எவரேனும் கவனிப்பதை,
முதுகில் உறையும் கண்களாய்
உணரும்
அந்த வெட்க தருணங்களில் ;
வால் முளைத்த காற்றாடியாய் பறந்தவை
உதிர்த்துச்சென்றன
ஒற்றை இறகை.....
Friday, May 14, 2010

பந்தயக்குதிரைகள்..

ஓடுவதற்குத்தயாராய்
வரிசையில்
பந்தயக்குதிரைகள்:

எண்களுக்குப்பதிலாக
மருத்துவம் என்றும்,
பொறியியல் என்றும்,
சட்டம் என்றும்,
பெயர்கள்
தாங்கி நிற்கின்றன.

என்னதான் கணக்கிட்டாலும்,
எந்தக்குதிரையில்
அதிக லாபம் வரும்
என்னும் விகிதம் மட்டும்;
ஒன்றைவிட ஒன்று மேலாகவே இருக்கிறது.

கொள்முதல் நிறைய விழுங்கினாலும்;
கல்யாணச்சந்தையில்
லாபம் கிடைத்துவிடாதா என்ன????

இன்ன பிறவெல்லாம்
கணக்கில் கொள்ளப்படுவதேயில்லை!!
ஏனெனில்;
லாபமில்லா மட்டக்குதிரைகளாம்
அவை!!,
உலகத்தின் கணக்கில்.
Tuesday, May 11, 2010

இறைந்து கிடக்கும் வார்த்தைகள்.

இறைந்து கிடப்பவற்றில்
எனக்கான வார்த்தைகளை
தேர்ந்தெடுப்பதிலேயே;
என் ஜென்மம் கழிந்துவிடுகிறது.

தேனும் விஷமும்
தடவப்பட்ட அம்புகளாய்,
வார்த்தைகள்
வந்து விழும்போது;
தேனென்று நம்பி
தேர்ந்தெடுப்பவையெல்லாம்,
விஷக்கொடுக்கையும்
ஏன் சேர்த்து சுமக்கின்றன?.

ஆச்சரியம்தான்;
வார்த்தைகள் ஏற்படுத்திய
காயங்களுக்கு,
அதே வார்த்தைகளே
மருந்தாகின்றன.
ஏற்படுத்திய வலி,
அவற்றுக்குத்தான்
இன்னும் புரியவில்லை.

துப்பப்பட்டவற்றைவிட
மென்று விழுங்கப்பட்ட
வார்த்தைகளுக்குத்தான்
வீரியம் அதிகமாம்.
என்றாலும்;
விஷம் சுமக்கும் நாவை மட்டும்,
எந்த மகுடியாலும் அடக்கமுடிவதில்லை.

Sunday, May 2, 2010

இன்று மட்டுமாவது.....

இன்னுமொரு விடுமுறைதினம்.
திட்டம் போட்டாயிற்று,
விடிந்தபின்னரும்
இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்க;
நினைத்த சீரியல் பார்க்க;
விதவிதமாய் விருந்துண்ண;
மதியத்தூக்கத்துக்கப்புறம்
காலாற நடந்துவர....

கீச் கீச் என்னும் குருவியும்,
மெல்ல வீசும் காற்றும்,
தலையாட்டும் இலையும் பூவும்,
கூவிக்கொண்டு செல்லும்
காய்க்கார அம்மாவும்,
அவரவர் உழைப்பில் கவனமாக
இருப்பதைக்காட்டி,
உழைப்பின் மதிப்பைச்சொல்லி
சுட்ட சூரியன்
மேற்கில் மறைந்தான்,
நாள்முழுதும் உழைத்த களைப்பில்.

விடுமுறை கிடைத்த ஆனந்தத்துடன்
சேர்ந்து கொண்டது,
மெல்லிய உறுத்தல்
உள்மனதில்;
வீட்டுப்பணிப்பெண்ணுக்கு
விடுமுறை அளித்திருக்கலாமே!
இன்று மட்டுமாவது.....பெயர் தெரியா மரம்.


விருட்சங்களாய்
நிமிர்ந்து நின்றவை
விறகுகளாய் நிற்கின்றன.

இந்த இடத்தில்தானே இருந்தது
எனக்கு நிழல் கொடுத்த
அந்த
பெயர் தெரியா மரம்.

உபயோகமற்றுப் போய்விட்டால்
அல்லவா
உயிர் நீப்பதற்கு...

வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கையில்
ஏனிந்த அவசரப்பாடை என்று
புலம்பும் மனதை
சூழ்ந்து கொள்கிறது
ஏதோ ஒரு வெறுமை.


எங்கோ ஒரிடத்தில்,
உயிர் வாழும் இச்சை
ஒட்டிக்கொண்டிருக்கிறது எச்சமாய்...
வெந்தவிந்த உடம்பில்.


டிஸ்கி: என்னுடைய இன்னொரு வலைப்பூவில் வெளிவந்த கவிதையின் மீள்பதிவு.