Pages

Thursday, September 22, 2011

அரைகுறையாய்ப் போன கனவுகள்..

மேகத்தில் சற்று தலைதுவட்டிக்கொள்ளும்
ஆவல் கொண்டு,
ஆயிரம் மூங்கில் கால்களூன்றி
ஆஹாவென்றெழுந்த
அலங்கார மாளிகைகள்,
விதிகளை மீறிவிட்டதாய்
அவசரமாய் பிறப்பித்த அரசாங்க தடையுத்தரவால்,
அப்படியே நின்றன அரைகுறையாய்..

செங்கற்தோல் போர்த்தாத
இரும்பு எலும்புக்கூடும்,
முகப்பூச்சு காணாத கற்சுவரும்,
பரிதாபமாய்ப்பொலிவிழந்து,
பல்லிளித்துக்கொண்டு நிற்கின்றன.. மௌனமாய்,
ஆயிரமாயிரம் கதைகள் சொல்லிக்கொண்டு.

தோற்ற மாறுதல்களை உள்வாங்கிக்கொண்டு
காரை பெயர்ந்து நிற்கும் சுவர்கள்,
பாசிகளின் பலத்தில்
தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முயன்று தோற்று நிற்க,
சலனமில்லாமல் நிகழ்கின்றன
காட்டுச்செடிகளின் குடியேற்றங்கள்..

கனவு இல்லத்தை
கனவில் மட்டுமே கண்டுகொண்டிருக்கும்
எளியவனின்
ஏக்கப்பெருமூச்சில் படபடக்கின்றன,
தளங்களில் கொட்டப்பட்டு
கல்லாய் மணலாய் உருமாறி,
பளிங்குக்கற்களாய் உறைந்து கிடக்கும்,..
முதலீடு செய்த சலவை நோட்டுகள்..

டிஸ்கி: வல்லமைக்காக எழுதியதை இங்கியும் பகிர்ந்து கொள்கிறேன்.

Monday, September 12, 2011

வாடா மலர்கள்..

என் மீதான உன் காதலை
தவிப்புடன் அடைகாத்த நெஞ்சை
உதடுகளிலிருந்து உதிரும் சொற்களை முந்திக்கொண்டு
காட்டிக் கொடுத்துவிடுகின்றன...
அலைபாயும் உன் கண்கள்;
இறுமாந்து போகிறேன் நான்...

நிராகரிக்கப்படாமல், உனக்கென நிச்சயிக்கப்பட்டதும்
மழையெனப்பொழிந்த உனதன்பால்
நமக்கென ஓர் கனவுலகை படைப்பிக்கிறாய்..
உன் கண்கள் வழியே காணும் கனவும்கூட
சுகமாய்த்தான் இருக்கிறது;
பெருமிதப் படுகிறேன் நான்...

குறுகியும் நீண்டும் கடந்துசென்ற
ஊடலும் கூடலுமான ஒற்றையடிப் பாதைகள்
நமக்கென செதுக்கி வைத்த
ராஜபாட்டையில்
உன் கைத்தலம் பற்றிய உரிமையுடன்
உன் மனதருகே கிசுகிசுக்கிறேன்..
'உனக்கான கடமைகளை எனக்கும் பங்கிடு' என்று..
இம்முறை வியப்பது உன் முறையாயிற்று..

வாழ்ந்த காலங்களின் சுவை
அடிமனதில் இன்னும் தித்தித்திருக்க,
பற்றிய கைத்தலத்தை இன்னும் இறுக்குகிறாய்;
முட்களையெல்லாம் பூவாக்கும் வித்தையை
வயோதிகத்திலும் கைவிடாமல்..
ஏதும் மிச்சப்படாமல்
கரைந்துபோகிறேன் நான்..

உணர்வதற்கும்
உணர்த்தப்படுவதற்குமான இடைவெளியில்
உயிர்ப்புடனும்,
களவுக்கும்
கைத்தலத்துக்குமான பெருவெளியில்
கனவுகளுடனும்,
தலம்பற்றியபின் கடமையுடனும்
வாழ்ந்த காதல்..
வயோதிகத்தின் வாசல்படியில்
சொரிந்து நிற்கும்
ஊவாமுட்களையும்
மலரச்செய்து வாசமாய்;
சொரிந்து நிற்கிறது பன்னீர்ப்பூக்களை,
பிணைந்திருக்கும் இரு நெஞ்சங்களில்..

டிஸ்கி: வல்லமைக்காக எழுதியதை இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன். இந்தத் தளத்தில் இது என்னோட ஐம்பதாவது படைப்பு. தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி :-)