Pages

Thursday, December 30, 2021

நல்லாச்சி - 21


துருவியைத் தொங்கவிட்டுக் கொண்டு
தன் பாட்டுக்குத்
தேமேயென நின்றிருக்கும் 
ஜேசிபி இயந்திரத்தின் ஊடே புகுந்துசெல்லும் 
பேத்தி சொல்கிறாள்
ஒரு யானையின் துதிக்கையினூடே
கடப்பதையொத்திருக்கிறதென
உப்பக்கம் நிற்கும் நல்லாச்சி
சிரித்துக்கொள்கிறாள்
என்றாவது
ஆசீர்வாதம் வழங்கும் 
ஒரு யானையைக் கண்ணுறும்போது
அவளுக்கு 
இயந்திரத்தின் சாயல் தென்படக்கூடும்
வாரியெடுக்கும் அவ்விரு உறுப்புகளுக்கு மட்டும்
தத்தம் சாயல் குறித்து
கிஞ்சித்தும் சிந்தனை 
என்றுமே வரப்போவதில்லை.

Saturday, December 18, 2021

அவரவர் எல்லை..


எல்லாவற்றையும் மறந்துவிட்டு
புதிதாய் ஆரம்பிக்கலாம் என்கிறீர்கள்
மறப்பதை விட
அத்தனையையும் அழித்து விட முடிந்தால்
அது மிக இனிதாயிருக்கும்
இருப்பினும்
பதிந்த நினைவுகளின் ரணம்
தழும்புகளாய் உறுத்தியபடிதானிருக்கும்
எதையெல்லாம் மறப்பதென்பதையும்
எங்கிருந்து அழிக்கப்பட வேண்டுமென்பதையும்
அறுதி செய்து விட்டு
புத்தம் புதிய வானின் கீழ்
புதுக்கருக்கழியாத பூமியின் மடியில்
புது மலர்களாய்ப் பூக்கலாம்
அது வரை
அவரவர் எல்லை அவரவர்க்கு.

Saturday, December 11, 2021

இசைமணம்..


சலித்துவிட்டதாம் அவனுக்கு
சுச்சு போட்டால் இயங்கும்
இயந்திர மேளதாளம்
அருகிருக்கும் கோலவார் குழலியின்
நெடுநேர விளி கூட
விழவில்லை தோடுடைய செவிகளில்
அலுப்புடன் அமர்ந்திருக்கிறான் பரமன்
நடைபாவாடையென 
உதிர்ந்து பரந்திருக்கும் பன்னீர்ப்பூக்களின் மீது
பைய நடைபயின்று
ஒரு நொடி தாமதிக்கும் பிஞ்சுச்சீரடியாள்
ஒரு பூவெடுத்தூத
மெல்லத்தவழ்கிறது இசைமணம்
நர்த்தனம்புரிய எழுகிறார்கள் அம்மையும் அப்பனும்.

தீர்த்துவிட்டுப் பேசலாம்.


உனது கனிகளை நீ பறிகொடுத்தமைக்கு
நானெப்படிப் பொறுப்பாவேன்
வேலியிட்டுப் பாராட்டிச்சீராட்டி
காத்து வளர்த்தது நீயெனினும்
வாசனை விடு தூதனுப்பி
பிறர் கை வீழ்ந்த
அவற்றைக் கடியாத
உன் பாரபட்சம் 
இதோ பல்லிளித்துவிட்டதே
அகராதியிலில்லாத வார்த்தைகளைக்கூட
சம்மன் அனுப்பி வரவழைத்து
என்னை அர்ச்சிக்கிறாயே
அத்தனை கல்நெஞ்சமா உன்னுடையது
இதோ
கையிலிருக்கும் கவண்கல்லையும்
சாறுபடிந்த கத்தியையும்
கை விட்டு வருகிறேன்
தீர்த்துவிட்டுப் பேசலாம் வா..

Tuesday, December 7, 2021

ஏகாந்தம் இனிது


மலருந்தோறும்
கொய்து கொண்டு போய்விடுகிறாயே சின்னக்குருவியே
உன் பின்னவன் உறும் ஏமாற்றம்
உணர்வாயா நீ
பொறுமையாய் ஊர்ந்து வந்துகொண்டிருக்கும்
இந்த வெயில் புசிக்கவென
ஒன்றிரண்டோ
துழாவித்துழாவி பரிதவிக்கும்
வண்ணத்துப்பூச்சிகளுக்கென சிலவோ
எதுவுமின்றி
கொறித்துச் சிதறடிக்கும் நீ
நானுமொரு தாவரமென
எண்ண விடாது
துளிர்க்குந்தோறும் துடைத்துச்செல்
ஏகாந்தமாயிருப்பேன்.

நினைவுள்ள வரை..


நினைவிலும் கனவிலும் அங்குசத்தைக் கொண்டுள்ள
ஒரு யானையை
அனிச்சைச்செயலாய் துதிக்கையுயர்த்தி
ஆசியளித்தும்
பாகனிடம் சில்லறைகளை
பிறழாதொப்படைத்தும்
கடனேயென வலம் வரும் அதை
அதற்கே உணர்த்துவதற்கென
ஏதும் செய்ய வேண்டியதில்லை
எங்கோ ஓர் ந்யூரான் முடிச்சின்
பாற்பட்டிருக்கும் விதைக்கு
சற்றே நீர் வார்க்கலாம்
மெல்ல நீளத்தொடங்கும் கானகத்தைப்
பற்றிக்கொண்டு
மத்தகம் குலுக்கி அது கிளம்பும் பொழுதில்
கால்களில் அரைபடா வண்ணம்
சற்றே விலகுவோமாக.

Sunday, December 5, 2021

பொறுமை


வயலின் உள்ளங்கையிலொரு
ரேகையைப்போல் 
நெளிந்து கிடக்கிறது
ஒற்றையடிப்பாதை
அழித்து சமனாக்கும் தீர்மானத்துடன்
ஆர்ப்பாட்டமாய் 
பெய்து தோற்கிறது மழை
பல்கிப்பரவி
அமைதியாய் வெல்கிறது புல்வெளி