Pages

Wednesday, November 24, 2010

தீர்வும், தெளிவும்..

சிக்கித்தவிக்கும் நினைவுகள்
மனதின் இடுக்குகளில்,
பிய்த்தெறியமுடியா சிடுக்குகளாய்;
எங்கோ ஓர் ஓரத்தில் ஒட்டிக்கொண்டு.

இனம்புரியா சஞ்சலங்கள்,
விடாது பின்வரும் நிழலைப்போல்
கேள்விகள்,
துரத்திக்கொண்டிருக்கும்;
இன்னவென்று புரிபடாத பதில்களை..

புரிந்துகொள்வதற்கும்
புரியவைப்பதற்குமான இடைவெளியில்,
நூலாம்படையுடன் காலம்..
விழுங்கக்காத்திருக்கும் வாய்பிளந்த சிலந்தியென.

கனவுக்கும் நனவுக்குமான போராட்டத்தில்
கனவில் கிடைத்த தீர்வில்,
கழுவி விடப்பட்ட வானமாய்
மனம்..

டிஸ்கி: இந்தக்கவிதை திண்ணையில் வெளிவந்துள்ளது.. 
Friday, November 19, 2010

ஒளிமழையில்...

மழையாய்ப்பொழியும்
நட்சத்திரங்கள்...
இருகரம் நீட்டி ஏந்தணும்;
ஊற்றுக்கண் திறந்த நெருப்பூற்றின்..
ஆரவாரத்தில் மகிழணும்..
காதுவலிக்க வெடிக்கவில்லை,
கந்தகப்புகை உண்டென்றாலும்;..
கவனமாய்க்கொஞ்சம் இருக்கணும்.

மூணாம் மாடியில் பாய்ந்ததினால்
மறுக்கப்பட்டது
ராக்கெட்டேயன்றி,..
எங்கள் மகிழ்ச்சியல்ல;
சிறுபொறியில்தான் ஆரம்பிக்கிறது
எந்தவொரு ஆர்ப்பரிப்பும்..

சூழலைமட்டும் கவனித்து
பட்டாசாய் வெடிக்கும் கனவான்களே..
எங்களையும்
ஒரு நிமிடம் நினையுங்களேன்.
காணாமற்போய்க்கொண்டிருக்கின்றன,
ஒவ்வொரு சந்தோஷமாய்;
எங்களுக்கான உலகத்திலிருந்து
பாம்புமாத்திரையாய்..

நாளைய கவலையில்
இன்றை மறந்திடாமல்,..
ஒளிமழையில் நனைந்திடவே,
நானும்தான் வாரேன்..
ஆட்டத்தில் என்னையும் சேர்த்துக்கோ...

Thursday, November 18, 2010

இன்னுமொரு தினமல்ல..(கவிதைப்போட்டி)


அல்லன கண்டால் விலகிட வேண்டும்..
அன்னை பூமியை காத்திடல் வேண்டும்..
தேனீபோல் உழைத்திட வேண்டும்..
ஒற்றுமையும் இங்கு வளர்த்திட வேண்டும்..


மூடமை கண்டு எதிர்த்திட வேண்டும்..
முதுமையை என்றும் மதித்திட வேண்டும்..
இளமையில் கல்வி கற்றிட வேண்டும்..
எளியோருக்கு இரங்கிடல் வேண்டும்..


வேற்றுமையிங்கே களைந்திடல் வேண்டும்..
பிரிவினை செய்தால் பொங்குதல் வேண்டும்..
பெற்றவர்தன்னை பேணிடல் வேண்டும்..
சோதரமிங்கே வளர்ந்திடல் வேண்டும்..


மனிதத்தையும் கூட வளர்த்திட வேண்டும்..
பதர்களை வேருடன் ஒழித்திடல் வேண்டும்..
ஆணிவேராய் நாங்களிருக்க;
ஆலமரமாய் நீவிர் வளர்வீர்..


நாளைய உலகின் நாற்றங்கால்களே..
வாழ்த்துச்சொல்லி முடிப்பதல்ல..
வாழவைப்பதில் தொடங்கும் இத்தினம்..
பூத்துச்செழிப்பீர் அனுதினம்..

டிஸ்கி: இது பாரத்.. பாரதி நடத்திய கவிதைப்போட்டிக்காக எழுதினது :-))

Tuesday, November 16, 2010

பதிலைத்தேடும் கேள்விகள்...

உன்னிடமிருந்து
கற்றதும் பெற்றதும் ஏராளமாயிருப்பினும்,
இழந்துமிருக்கிறோம்..
விலைமதிப்பற்ற பொழுதுகளை;

நீ,.. வேலை நிறுத்தம் செய்தால்தான்
சிலவீடுகளில்
அடுப்பே எரிகிறதென்றபோதிலும்;
என்னருமை தோழமையே!!
பல வயிறுகளுக்கு,
நீயே அட்சயபாத்திரமாவும் விளங்குகின்றாய்..

நட்பாய் நுழைந்து..
உறவாய் மாறி..
இன்று,
உரிமையாளனாய் உருவெடுத்தபோதிலும்;
கோலுக்கு வசப்பட்ட குரங்காய்
சபித்தும், சகித்தும்
வாழப்பழகினோமேயன்றி...
ஒற்றைச்சுட்டுவிரல்
நீட்டியதில்லை.. உனை நோக்கி!!

அறிவுரைகள் பல பகன்றாலும்
அபத்தங்களையும் சேர்த்தே..
நீ,.. சந்தைப்படுத்தும்போது..
ஆற்றாமைதாளாமல்,
என்னருமை தொலைக்காட்சியே!!
உனை நோக்கி
விரல் நீட்டுகிறேன்;
ரிமோட் சகிதம்...
உனை ஆற்றுப்படுத்த..

செங்கோலை
எங்களிடம் பறிகொடுத்தபின்னும்,
எப்பொழுதிலும்
கவிழ நேரும் கூட்டணியாட்சியாய்..
பரிபாலனம் செய்யும் இம்சையரசரே....
நீவிர்,
நல்லவரா!!!... கெட்டவரா!!!..டிஸ்கி:  இந்தக்கவிதை இந்தவார திண்ணையில் வெளிவந்துள்ளது.
அப்புறம், இது எனது 25-ஆவது கவிதை.