Pages

Tuesday, August 24, 2021

நல்லாச்சி - 15


அரக்கியுட்டாத்தான் அடர்த்தியா வளரும்
கூறிய தாத்தா
கிளைகளைக் கழித்துத் தள்ளுகிறார்
ஒட்டடைக்குச்சிகள்போல் சிலவும்
பாப்கட் சிறுமிகள்போல் பலவும்
திட்டுத்திட்டாய்ப் பசுமை பூசிய இரண்டொன்றுமென
வேறு முகம் போர்த்தியிருக்கிறது தோட்டம்
சின்னாளில் அவை பலவாய்க் கிளைக்கும்
பல்கிப் பலன் தருமெனின்
தென்னைக்கும் பனைக்கும் மட்டும்
ஏனிந்த ஓரவஞ்சனையென்று கேட்டு
நல்லாச்சியின் ஒக்கலில் அமர்ந்தவாறு
பூவரசம்பீப்பியை ஊதியபடி செல்கிறாள் பேத்தி
யோசனையிலாழ்கிறார் தாத்தா
அரக்கிவிடாததால் அடர்த்தியிழந்த
வழுக்கைத்தலையைச் சொறிந்தபடி

Wednesday, August 18, 2021

நல்லாச்சி - 14


இரவுணவிற்கு உப்புமாதான்
எனக்கேள்விப்பட்ட கணத்திலிருந்து
வயிற்றுவலி தொடங்கியது பேத்திக்கு
தாத்தாவுக்கோ உப்புசமாம்
வழக்கம்போல் தாத்தாவுடன்
வழக்கமான மருத்துவரிடம் போவதாய்
வழக்கமான பொய்யைச்சொல்லி
வழக்கமான உணவகத்தில்
வழக்கம்போல் புரோட்டாவை விழுங்குகிறார்கள்
வழக்கம்போல் முனகி நடிக்கும் பேத்தியிடம்
நல்லாச்சி நீட்டுகிறாள் 
கசக்கும் கஷாயத்தை
வழக்கமில்லா வழக்கமாக
தாத்தாவுக்கில்லையா என்றா கேட்டீர்கள்
அவர் 
அறிதுயில் கொண்டு அரைஜாமம் ஆயிற்று.

நல்லாச்சி - 13

முல்லை மருதாணி நெல்லியெனப்
பலவுண்டு நல்லாச்சித் தோட்டத்தில்
காடாய் மண்டிய கனகாம்பரங்களுக்கும்
ஊடே பூத்திருக்கும்
டிசம்பர்பூக்களுக்குமிடையே
ஒட்டில் புட்டவித்தாற்போல்
தென்னையும் வாழையுமுண்டெனினும்
பேத்தி காவலிருப்பதென்னவோ
கொடுக்காப்புளி மரத்துக்குத்தான்
பச்சையும் நீலமும் பாரித்த காய்கள்
குங்குமத்தில் குளிக்கும்வரை
அவள்
பார்த்து ரசிக்க கணங்களுண்டு
கைமுறுக்கு அவிழ்ந்தாற்போல்
சுழன்றிறங்கும் அவற்றின் வயிற்றில்
கருமுத்து விளைந்தபோது
அம்மரம் 
ஒரு சரணாலயத்தையொத்திருந்தது
உச்சி நோக்கி நீண்டதொரு கிளையில்
கூட்டையும் இரு நீலமுட்டைகளையும்
கண்டதினத்திலிருந்து
அவற்றுக்கும் காவலானாள் பேத்தி
நல்லாச்சி கூட
அங்கே அனுமதியற்ற எதிரியே.

நல்லாச்சி - 12

சூரியனின் திசையினின்று 
விழிநோக்கு திருப்பாத
சூர்யகாந்திகள் எங்குமுண்டு
இங்கோ..
இந்த சூர்யகாந்தியையே 
எப்பொழுதும் நோக்கியிருக்கும்
முதற்சூரியன் நான்
என் துணைக்கோள் நீதானடியென
கன்னம் வழித்து 
கண்ணேறு கழிக்கிறாள் நல்லாச்சி
எனில் உங்களை விட்டலகலா தாத்தா 
யாரென வினவிய பேத்தியிடம்
'அது ஒரு கெரகம்' என
குறும்புச்சிரிப்புடன் பகன்றாள் சூரியஆச்சி
அசட்டுச்சிரிப்புடன் நழுவுகிறார் தாத்தா.

Friday, August 6, 2021

நல்லாச்சி - 11

"வாசலுக்கு மங்கலமூட்டுவதோடு
பிற உயிரினங்களுக்கும் உணவாகும்"
ஏனென்று கேட்ட பேத்திக்கு
விளக்கியபடி
அரிசி மாக்கோலமிடுகிறாள் நல்லாச்சி
பேத்தியின் சிறு கை அள்ளிய நீரெலாம்
கோலத்தின் வழி இழியக் கண்டு
பதறிய ஆச்சியை
அமர்த்தி நவில்கிறாள் பேத்தி
"எறும்புக்கு விக்கலெடுப்பின் என் செயும்?
ஆகவே நீரும் வைத்தேன்"
ஞே..யென மயங்கிச் சாயும்
ஆச்சியின் முகத்தில்
ஆரேனும் நீர் தெளிப்பீராக.

நல்லாச்சி - 10

எண்ணங்களைத் தடையின்றிப் பகிர
இடுக்கண் வருங்கால் 
தோள்கொடுக்க
சுகதுக்கங்களை சேர்ந்து அனுபவிக்க
அமையும் நட்புகள் 
உறவாய் மலர்வதுண்டு
உறவுகளுக்குள் நட்பு பூப்பதுமுண்டு
இழையும் மூச்சென என்னுடனிருக்கும்
நீயுமென் தோழமையே
என்றுரைத்த நல்லாச்சியை
அதிசயித்த பேத்தி
ஆச்சியின் விளக்கத்தால்
ஆச்சர்யங்கொள்கிறாள்
தோழமையை ஆசீர்வதித்துத் தூவுகிறது
பொன்னந்திச்சாரல்.