Pages

Monday, May 29, 2023

யானைப்பூச்சி


இத்தனை விகாரமாய்ப் படைத்திருக்க வேண்டாம்
நொந்து கொண்டபடி
ஆலமரத்தினடியில் சயனித்திருந்தது
மந்தையிலிருந்து பிரிந்து வந்துவிட்ட
புத்திளம் யானைக்கன்று

எதற்கென்றே தெரியாமல்
இரு பெரும் காதுகள்
இப்பிறவியில் மெலிய வாய்ப்பில்லா
மஹாகனம் கொண்ட பேருடல்
இடையிடையே இடையூறாய்
வந்து நெளியும் நீள்மூக்கு
தெண்ணீரில் தன்னுருவென 
தான் கண்டதையெண்ணி
இன்னும் மனம் கலங்கிற்று

தாவும் மான் தொடங்கி தோகை மயில் ஈறாக
அதன்
அழுத கண்ணீர் துடைத்தன
ஆறுதல் தோற்று நின்றன
தூக்கத்தைத் துக்கம் வென்றெடுக்க
துக்கத்தைக் கொடும்பசி தோற்கடிக்க
அலமுறையிட்டு அழுதது யானைக்கன்று

அழுகையின் வீரியம் கூடுந்தோறும்
படபடத்த காதுகள்
அடித்துக்கொண்டு வானேகின உச்சநொடியில்
இப்போதெல்லாம்
அந்த யானைக்கன்று கலங்குவதில்லை
மலருக்கு மலர் தாவிக்கொண்டிருக்கிறது
தும்பிக்கையால் தேனுறிஞ்சியபடி.

Tuesday, May 9, 2023

பூனையும் வினையும்..


நல்ல பூனைகளுக்கு இங்கே இடமுண்டா
வினவிக்கொண்டு வாசலில் நின்றதொரு பூனை
முகத்திலும்
பளிங்காங்குண்டுக்கண்களிலும்
சொட்டிய அப்பாவித்தனம் தவிர
இன்னொரு நற்சான்றிதழ் தேவையா என்ன
அதை உள்ளே அழைப்பதற்கு

வந்த நாள் முதலாய்
சிறு சோகமொளித்த அதன் சிரிப்பும்
ஏகாந்த வேளைகளில் எங்கோ வெறித்த
அதன் பெருமூச்சுகளும்
சமநிலை இழக்க வைத்தன என்னை
அறியும் ஆவலை ஊதிப்பெருக்கின
பற்றியெரிந்த ஓர் நாளில் வினவினேன் அதனிடம்
சுமந்தால் பாரம்
பகிர்ந்தால் தீரும்
என்னதான் உன் வேதனை என்றேன்
பழைய நண்பனைப் பிரிந்த வேதனை
சிந்தையைத் திருப்ப முயல்கிறேன் என்றது அது
ஆதிகாலம் முதலாய் 
எம்முன்னோர் சொல்லிச்சென்ற வழிமுறைகளில்
ஒன்றிரண்டை
நானும் அதற்கு எடுத்துரைத்தேன்

முதற்கட்டமாய்
களையெடுத்துத் தோட்டம் திருத்தியது
வன்னமாய்ப்பூத்தன வண்ண மலர்கள்
அல்லியும் தாமரையும் மண்டின குளத்தில்
பின் வந்த நாட்களிலோ
அல்லிக்குளத்தின் வண்ணமீன்கள்
தடயமில்லாமல் மறையத்தொடங்கின
ஒன்றும் நினைக்கவில்லை நான்

முற்றத்துச்சுவர் தாங்கிய செயற்கை வீடுகளில்
குஞ்சுகளைப்பறி கொடுத்த குருவிகள்
கதறிப்பதறின
சின்னாட்களில் குருவிகள் இல்லாத என் வீடு
நிசப்த பூமியானது 
பூனையின் முகம் தெளிந்திருந்தது இப்போது

சுவரிலிருந்த ஓவிய மீன்கள் 
எலும்புக்கூடுகளாய் மிஞ்சிய ஓர் நாளில்
விசாரித்தேன் பூனையை
எல்லாம் உனக்காகத்தான் என்றது அது
குளத்தின் அழகைக்கெடுத்த மீன்கள்
எச்சமிட்டும் சத்தமிட்டும்
வீட்டை அழுக்காக்கிய குருவிகள்
அத்தனையும் அகன்ற பின்
சுந்தரச்சோலையாயிருக்கிறது பார் உன் வீடு என்றது
அகற்றப்பட்டவை என்னானதோவென 
விசாரப்பட்டபோது
பாழாய்ப்போவதெல்லாம் பூனை வயிற்றிலே 
என்றபடி மீசையை நீவிக்கொண்டது
அமைதியும் அழகும் கொண்டதோர் இல்லம்
அமைத்திருக்கிறேன்
எனக்கென்ன பரிசு எனக்கேட்டபோது
வாசலை நோக்கி விரல் சுட்டி விரட்டினேன்

நல்ல பூனைகளுக்கு 
இங்கே இடமுண்டாவென வினவியபடி
உங்கள் வாசலிலும்
ஒரு பூனை தென்படக்கூடும்
தோற்றப்பிழையால் ஏமாறுவதும்
கும்பிடு போட்டு அனுப்பி வைப்பதும்
அவரவர் வினைப்பயன்.

Monday, March 27, 2023

குருவியும் சரக்கொன்றையும்


முதற் சரக்கொன்றை பூத்து விட்டது
அக்காக்குருவிகளைத்தான் காணவில்லை.
அலகு ஓய்ந்ததோ
அன்றி
களைத்து இளைத்ததோ
அக்காக்களைக் கண்ணுக்குள்ளேயே
வைத்திருக்கும் தங்கைகள்
தேடித்தட்டழிகிறார்கள்

இந்த மரத்தில் பூத்திருப்பது
சென்ற வருடம் கூவிய
அக்காக்குருவியின் 
கீதமாக இருக்கலாம்
தங்கைகளின் ஏக்கமாக வழிவது
ஏதோ ஒரு வருடத்தின்
பூக்குவியலாகவும் இருக்கலாம்

சுள்ளிக்குவியலாய் இருக்கும்
மரத்தின்
பூவின் தனிமையும்
வனம் முழுக்க அக்கக்கோவென
தேடும் தங்கையின் தனிமையும்
ஒன்றென்றால் ஒன்றுதான்
வெவ்வேறென்றால் வேறு வேறுதான்
சொட்டும் குரலும் மகரந்தமும்
பரவும்
மண் மட்டும் என்றும் ஒன்றே போல்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.

Monday, March 13, 2023

தேடல்

             
விழித்திருக்கும்
கைக்குழந்தைக்குத் துணையாய்
கொட்டக்கொட்ட
தானும் விழித்திருக்கிறார்
நோய்மை கிழித்துப்போட்ட ஒருவர்
புறப்புலன் மங்கி 
அகப்புலன் தெளிவின்றி
சுய கட்டுப்பாடுமற்ற உடலர் இருவரில்
வந்த பாதை நினைவில்லை ஒருவருக்கு
போகும் பாதையோ 
தெரியவில்லை இன்னொருவருக்கு
அகமும் புலனுமற்ற ஏதோவொரு
மாயவெளியில்
அளவளாவும் இரு ஆன்மாக்களும்
தத்தம் ரேகைகளை
அங்கே பரிமாறிக்கொண்டு பிரிகின்றன
ரேகையைப் பத்திரப்படுத்தும் பொருட்டு
கால் கட்டைவிரலை
வாயில் வைத்துக்கொள்கிறது குழந்தை
கையை இறுக்கிக்கொள்கிறார் வயதானவர்
ஒருவரையொருவர் அர்த்தத்துடன் நோக்கி
பொக்கைச்சிரிப்பைச் சிந்துகின்றனர் இருவரும்
அப்பிக்கிடக்கும் காரிருளில்
விரல்களைத்தேடுகின்றன ரேகைகள்.

கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.

Tuesday, March 7, 2023

வலி

ஒவ்வொரு முறையும்
ஒரு குளிர் அலையைப்போல்
வலி வந்து மூடும்போது
விதிர்விதிர்த்துத் துடித்தடங்கும் உடம்பில்
எங்கோதான் இருக்கிறது
உடல்நடுக்க மையம்
மெல்லெனக்கிளம்பி திடீர்க்கணத்தில்
பின்னந்தலையில் சொடுக்கும்
குரூர வலியிடம் இறைஞ்சுவதற்கு யாதுளது
கர்மாவோ கடனோ
அனுபவித்துக்கழிப்பதொன்றே செய்யக்கூடியது

ததும்பும் பேரன்புடன் வலி சொன்னது
நீ
எனக்கு அடிமையாயிரு
என்னை ஆராதி
தியானித்தாலோ கதி மோட்சம் கிட்டும்
முடிந்தால்
புண்பட்ட உடலோ மனதோ
இன்னுங்கொஞ்சம் கீறிக்கொள்
வலி கொண்ட மனதென்றால் எனக்குப்பிரியமதிகம்
உனக்கும் பொழுது போகும்
சிரங்குற்ற குரங்கின் கதையை
கேள்வியுற்றிருப்பாய்தானே நீ
ஆயுதங்களைப்போட்டு விட்டு
சரணடைந்து விடு
எதிரிகள் இல்லாவிடத்தில்
நாய்க்குட்டியாய்ச் சுருண்டிருப்பேன் நான்

இருப்பையுணர்த்தும் அவசியம் எனக்கு
உண்மையில்
உன்னை நானென்ன செய்ய வேண்டுமென்று
நீதான் தீர்மானிக்க வேண்டும்
கங்கையாய்த் தாங்குவாயா
அல்லது
முயலகனாய் அடக்கி வைப்பாயா
சட்டெனச்சொல்
காலம் சொட்டிக்கொண்டிருக்கிறது விரைவாக

யுகம் கழிந்தும் பதிலில்லாததால்
வலி
உடல்நடுக்கப்புள்ளியில் மையம் கொண்டது
ஒரு 
கருக்குழந்தையாய்.

டிஸ்கி: திண்ணையில் வெளியானது. திண்ணையில் வரிகள் நான் அனுப்பியது போல் இல்லாமல் கொஞ்சம் முன்னே பின்னே பிரசுரமாகியிருக்கிறது.

Wednesday, March 1, 2023

எல்லாத்துறையிலும் ஒரே கடல்..


எந்தக்குளத்தில் பூத்தாலென்ன
எல்லாத்தாமரைக்கும்
ஒரே மணம்
எந்த உலையில் வெந்தாலென்ன
எல்லா அரிசியிலும்
ஒன்று போல்தான் பசி தீர்கிறது
எல்லாத்தாய்களும் ஒருவளே
குழந்தையின் பசி உணர்வதில்
எந்தத்துறையில் முங்கினாலென்ன
எல்லாத்துறையிலும் ஒரே கடல்
எல்லாச்சாளரங்களின் வழியும்
நுழைகிறது காற்று
உன் என் வியர்வையை ஆற்ற
எல்லாமும் சேருமிடம்
ஒரு புள்ளியில்
பரந்து பிரிவதும் அங்கிருந்தே
பலவற்றிலிருந்து ஒடுங்கியிணைந்தவையெலாம்
சிதறிப்பறக்கின்றன
ஒன்றுதான் ஒன்றுதான் என்றபடி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.



Friday, February 24, 2023

நல்லாச்சி - 50


அன்னையின் செல்வமா 
நீ தந்தையின் செல்லமா
அம்மையா அப்பனா
உன் விருப்பம் யாரோ
பல்லாண்டுகளாய் குழவிகளிடம்
வைக்கப்படும் கடுவினா
பேத்தியின் முன்னும் 
வைக்கப்பட்டது அன்றைய தினம்
சேவை செய்தே பொழுது கழித்து
உளம் களிக்கும் 
நானே அவள் தேர்வு
என்கிறாள் அன்னை
விரும்புவனவெல்லாம் காலடியில் கொட்டும்
பெரும்பக்தன் என்னையே 
தேர்வாள் என் தெய்வம்
என்கிறான் அப்பன்
திருவுளச்சீட்டு தேர்ந்த முடிவை
எதிர்நோக்குவதுபோல்
பேத்தியின் திருவாய்மொழிக்காய் 
ஆவலுடன் ஊரார் காத்திருக்க
நல்லாச்சியைச் சுட்டுகிறாள் அவள்
அன்னையும் அப்பனும்
பேசும் தெய்வங்கள்
அணைத்தலும் இலைமறைகாயாய் சினத்தலும் 
அவ்வியல்பே சிறுகோடாய் இடைநிற்பதும்
தேர்வுக்குத் தடை நிற்கிறதாம்
நல்லாசிரியையாய் பக்தையாய்
அடைக்கலம் தரும் மடியாய்
மனம் திறக்கும் சாவியாய்
யாவரிலும் மேலான களித்தோழியாய்
ஏதும் எதிர்பாரா பெருவுள்ளத்தாளாய்
அன்னையிலும் மேலான பேரன்னை 
அவளே என் தேர்வு என்கிறாள் பேத்தி
நெக்குருகி நிற்கிறாள் மூதன்னை.

Saturday, January 28, 2023

நல்லாச்சி - 49


தொழுவம் நிறைந்த மாடு கன்றுகளும்
தோட்டம் நிறைந்த செடிகொடிகளுமாய்
செழித்துப் பொங்கியிருக்கிறது நல்லாச்சி வீடு
தோட்டத்தில் பூத்தவை போக
முல்லை மல்லி செண்பகம் ரஞ்சிதமென
தொழுவத்திலும் பூத்து கன்றுடன் நிற்பவற்றில்
கருப்பில் வெள்ளை தெளித்த
பிச்சிவெள்ளை மட்டும் பேத்தியின் பெருவிருப்பம்
மந்தையிலிருந்து வீடுபுகுந்ததும்
பேத்தியின் வாசம் தேடுவது அதற்கு வாடிக்கை
துணியோ சோப்போ
வாயிலகப்பட்டதைக் சவைத்துத் துப்புவதும்
ஹமாமை மட்டும் மென்று விழுங்குவதும் கூட
அதற்கு வாடிக்கையே
மூவந்தி மயங்கியும் வீடு சேராத பிச்சிவெள்ளைக்காய்
வாசல் நெடுக நடந்து தேய்கிறாள் நல்லாச்சி
முன்னங்கால் வீங்கி வந்து சேர்கிறது பிச்சிவெள்ளை
பயிர்பச்சை நாடிப் படுவப் பத்திலிறங்கிய பசுவை
பக்குவமாய் மீட்ட கதை சொல்கின்றனர் மீட்பர்
கனத்த மனதுடன் வைது கொண்டே 
பண்டுவம் பார்க்கிறாள் நல்லாச்சி
செங்கரும்புத் தோகை மென்முள் அப்பிய கையை
முதுகின் பின்னொளித்துத் திருதிருக்கிறாள் 
தன் முறை வரக் காத்திருக்கும் பேத்தி.

Friday, January 20, 2023

நல்லாச்சி - 48


கழுத்து கொள்ளா சம்பங்கி மாலைகளோடு
அவளுக்குப்பிடித்த மல்லிகை ஆரங்களும்
தாள் தோயும் ரோஜாமாலையுமாக
இறுதிப்பயணம் கிளம்பிவிட்டாள் பெரியாச்சி
அன்னையின் கை தொட்டு கால் தொட்டு
முகம் வருடி தலை கோதி
முன்னுச்சியிலோர் முத்தமும் பதித்தபின்
தன்னுயிரை ஊட்டி வளர்த்தவளை
ஆறா உள்ளத்துடன் வழியனுப்புகிறாள் நல்லாச்சி
தூரா ஊற்றென விழிநீர் கொப்பளிக்க
பாசத்தில் வழுக்கி நினைவுகளில் தோய்ந்து
கிடக்கிறாள் ஒரு மூலையில்
அன்னையின் பழம்புடவையுடன் பிதற்றியபடி 
சகலமும் மங்கி
மெல்லடி வைத்து வரும் பேத்தி
மடியேந்திக்கொள்கிறாள் நல்லாச்சியை
'பூட்டியாச்சி கடவுளின் வனத்தில்
பூக்கொய்யச் சென்றிருக்கிறாள்
நற்பூ கொண்டு அவள் வரும்வேளை
கூம்பியிருத்தலாகுமா உன் முகமலர்'
சொற்பூ கொண்டு ஒத்தடமிட்டு 
ஒரு வாய்ச்சோறூட்டும் பேத்தியிடம்
அடைக்கலமாகிறாள் நல்லாச்சி
'என்னப் பெத்தாரு
எங்க அம்மையில்லா'
இனியாங்கே
உதிராது கண்ணீர்ப்பூக்கள்
பற்றிக்கொள்ளவோர் சுண்டுவிரல்
வாய்த்து விட்டது நல்லாச்சிக்கு.

நல்லாச்சி - 47


வேப்பிலைப்பொடியும் மாவிலைப்பொடியும்
கலந்தெடுத்துத்
தூபம் போடுகிறாள்
வேப்பெண்ணெய் நிறைந்த சிற்றகல்களை
ஒவ்வோர் அறையிலும் ஏற்றுகிறாள்
அண்டைஅயலார் உரைத்தபடியெலாம்
உபாயங்கள் கைக்கொண்டு
எதற்கும் இருக்கட்டுமென
துளிச்சொட்டு மருந்தையும்
பேத்தியின் ஆடையோரம் தெளித்து
வீட்டையே அதகளப்படுத்துகிறாள்
பேத்தியின் கன்னத்தில் 
சிறு தடிப்பு கண்ட நல்லாச்சி
அத்தனைக்கும் தப்பி
காதோரம் ரீங்கரித்துப்பாடும் கொசுவை
ஏதும் செய்யமாட்டாமல் குமையும்
நல்லாச்சியிடம்
கூட்டாக எசலுகின்றனர் தாத்தாவும் பேத்தியும்
இந்தக் கொசுத்தொல்லை தாங்கவில்லையென.

நல்லாச்சி - 46


பச்சரிசிப் பொங்கலும் பல காய்க் குழம்புமாக
முதல்நாள் கொண்டாடியாயிற்று
தவுனுக்கு வாயூறிய பேத்தியின் மனதை
சுட்ட பனங்கிழங்கு கொண்டு
ஆற்றுகிறாள் நல்லாச்சி
துள்ளும் செல்லக்கன்றின்
கழுத்தணைத்துக் கொஞ்சி
அடக்கிவிட்டதாய் ஆர்ப்பரிக்கும்
பேத்திக்குப் பரிசாய் விரலில் விழுகிறது 
ஆச்சியின் நெளிமோதிரம் இரண்டாம் நாளில்
கடவம் நிறைந்த கரும்புச்சக்கைகளை
அடுப்பெரிக்க ஆகுமென்று
வெயில் நனைக்கும் முற்றத்தில்
பரப்பும் நல்லாச்சியிடம்
காதல்மணம் கொண்டதால் ஆகாதவர்களான
மாமனையும் அத்தையையும் கண்டால்தான்
காணும்பொங்கலும் நிறைவுறுமென
சொல்ல வந்தவை திக்கி
நிலைகொள்ளாமல் நிற்கிறாள் பேத்தி
அறியாத நல்லாச்சி
உடைத்து நீட்டுகிறாள் இன்னொரு கரும்புத்துண்டை
வழக்கம்போல் இவ்வருடமும்
காணாமலேயே கழியப்போகிறது
காணும் பொங்கல்

Saturday, January 7, 2023

நல்லாச்சி - 45

முத்துப்பந்தலின் கீழ்
ஒரு வைரமென
நட்சத்திர விதானத்தின் கீழ்
சயனித்திருக்கிறாள் பேத்தி
நல்லாச்சியின் மேல் கால் போட்டுக்கொண்டு
முல்லை வாசனை சுமந்து வரும்
மந்தமாருதத் துணையுடன்
சின்னவளைத்தூங்க வைக்க
எடுத்து விடும் கதைகளெல்லாம் 
ஒவ்வொன்றாய்த் தோல்வியுற
உம் கொட்டியபடி சின்னவளும்
கொட்டாவியை மென்றபடி பெரியவளும்
மேலும் பல கதைகளைக் களமிறக்குகின்றனர்
தானும் சொல்லப்போவதாக
அறிவித்த பேத்தி
இடைவெளியில்லாக் கதைகளை
இஷ்டத்துக்கு அளந்து விடுகின்றாள்
சொல்லடுக்கி அடுக்கி அவள் சமைத்த கதைகளில்
கற்பனா ரசம் பொங்கியோட
வானம் வரை பெரிய ஆப்பிள் காய்க்கும் மாமரமொன்று
தம் தோட்டத்திலிருப்பதை
ரகசியமாய் அவள் சொன்ன சமயம்
விழிகள் விரியக் கேட்டுக்கொண்டிருந்தது நிலவு.
நல்லாச்சியும் தென்றலும் உறங்கி 
இரு ஜாமங்களானபடியால்
அவ்விருவரும் அதை அறியக்கூடவில்லை
ரகசியங்களை 
ஒரு செல்லப்பூனையைப்போல் பராமரித்து வரும்
குழந்தைகளே
அவற்றைப் பிறரிடம் காட்டிப் பெருமையும் கொள்வர்
ஆகவே
நீங்களும் சொல்லி விடாதீர்கள்.

நல்லாச்சி - 44

"ஓரி உலகெலாம்.... உலகெலாம் சூரியன்"
நல்லாச்சி கற்றுத்தந்த பாடலை
மனனம் செய்தபடி
ஏழாங்கல் விளையாட முயல்கிறாள் பேத்தி
பாடல் வரிகள் வசப்படும்போது
கற்கள் நழுவுவதும்
கற்களை அள்ளும்போது
பாடல் மறப்பதுமாக
கவனப்பிசகில் தவிப்பவளிடம்
கவனக்குவிப்பிற்கு 
விளையாட்டுமொரு பயிற்சியே என அறிவுறுத்துகிறாள் நல்லாச்சி
பயிற்சி வகுப்புகளின்றி
ஆயிரக்கணக்கில் கட்டணமுமின்றி
ஆங்கோர் முன்னேர்
பின்னத்தி ஏரைத் தயார் செய்கிறது
கடமையில் கருத்தாய்.

நல்லாச்சி - 43

வெண்டையை நுனி ஒடிக்காமல்
புடலை சுரைகளை நகத்தால் அழுத்தாமல்
காளையைக்கூட சாட்டையின்றி
தட்டிக்கொடுத்து
பக்குவமாய்க் கையாளும் தாத்தா
வீட்டு மனிதர்களிடம் மட்டும்
வன்முகத்தைக் காட்டுவது
ஏனெனக் குமைகிறாள் பேத்தி
பேச்சற்று தாத்தா நழுவி விட
பதிலற்று நல்லாச்சி ஊட்டிய பால்கஞ்சி
அன்று 
சற்றே உப்புக்கரித்தது.

நல்லாச்சி - 42

தர்க்கம் விழாமல்
பசுவும் நிறைகுழியுமாக
முத்துக்களை அள்ளும் நல்லாச்சியை
அதிசயித்துப் பார்க்கிறாள் 
பல்லாங்குழியை முன்பின் கண்டிராத பேத்தி
ஆட்டம் துவங்கிய சில நொடிகளிலேயே
எதிராளியை
வெறும் குழிகளுடன் நிற்கச்செய்த 
நல்லாச்சியின் சாமர்த்தியத்தை
வியக்கும் பேத்தியிடம்
ஆச்சி ஒருநாளும் சொன்னதேயில்லை
வியாபார காந்தங்களாக
மாற நினைத்த மகன்களிடமிருந்து
பெரும்பான்மை சொத்தைக்
காப்பாற்றவியலா
தன்னுடைய கையறுநிலையை.

Friday, January 6, 2023

நல்லாச்சி - 41


நல்லாச்சியின் முந்தானை பிடித்து
தோட்டந்துரவெங்கும் சுற்றிவருகிறாள் பேத்தி
ஒவ்வொன்றையும் ரசிப்பதோடு
இதென்ன அதென்ன
எங்கிருந்து வந்தவை இவையென்ற 
கேள்விகள் வேறு அவளிடம்
ஒவ்வொன்றின் பிறவி வரலாற்றையும்
அலுக்காமல் கேட்கும் பேத்திக்கு
சலிக்காமல் பதிலிறுக்கிறாள் நல்லாச்சி
விதையிலிருந்து முளைப்பவை
கொப்பிலிருந்து தளிர்ப்பவை
என்பவற்றோடு
ஈன்று பெருகுபவை குறித்தும் விளக்கிய நல்லாச்சி
இப்போது
சோதிக்கிறாள் பேத்தியை
கீரை விதையும் முருங்கம் போத்தும்
எளிதில் இனங்கண்ட பேத்தி
தக்காளி கத்தரி நாற்றுகளை
சற்றே குழம்பி கண்டறிகிறாள்
இவையென்ன என்ற 
ஆச்சியின் கேள்வியைத் தொடர்ந்த பேத்தி
கண்கொட்டாமல் பார்த்தபடி சொல்கிறாள்
'கோழிவிதைகள்' என
பொரிந்து வெளிவர ஆரம்பித்திருந்த குஞ்சுகள்
கீச்சுக்கீச்சென்று ஆமோதிக்கின்றன.