Pages

Wednesday, January 26, 2022

நல்லாச்சி - 23

ஆத்திரமும் அழுகையுமாய்
அமர்ந்திருக்கும் பேத்தியிடம்
காரணம் வினவுகிறாள் நல்லாச்சி
உடற்தோற்றத்தையும் நிறத்தையும் 
குறிச்சொற்களாய்க்கொண்டு
உருவ கேலி செய்வதில் பெருமை கொளும் நட்பொன்று
வெள்ளாட்டு மந்தையில் செம்மறியாடாய் 
ஊடுருவியிருப்பதுவும்
பேசித்தீர்க்கவெண்ணியது தடம் மாறி
பேசிப்பேசியே 
விரோதமாய் முடிந்ததுவும்
கதைகதையாய் கொட்டப்பட்டதில்
கவலை கொள்கிறாள் நல்லாச்சி
விருட்சமாகுமுன் அழிக்கப்படவேண்டியது
அப்புத்தியில் முளைத்திருக்கும் பிஞ்சு முள்மரமேயன்றி
நட்பல்ல
என்னருமை கருநாவற்பழமே
நச்சை நீக்கிக்கொள்ள 
நட்புக்கு மேலும் உறுதுணையாயிருங்களென
பேத்தியை மேலும் இறுக்கிக்கொள்கிறாள் நல்லாச்சி
கன்னம் குழிய சிரிக்கிறது சிறுமலர்.

நல்லாச்சி -22


பசிக்கும்ல
பேத்திக்கும்
கண்ணாடித்தொட்டி மீனுக்கும்
அவரவர் உணவைப்
பரிமாறிச்செல்கிறாள் நல்லாச்சி
வெளிப்புறத்தில்
பேத்தி விரல் பதித்தெடுக்கும் இடமெல்லாம்
ஓடோடி வந்து
வாயைக் குவித்துக்குவித்து 
முத்துகிறதொரு சிறுமீன்
அதற்கும் அவளுக்குமான 
சிறுவிளையாட்டின் போது
தொட்டிச்சுவரில் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது
அன்பின் முகவரி
மனம் நிறைவதே
எல்லாம் நிறைந்தாற்போலிருக்கிறது
இருவருக்கும்.