Pages

Thursday, December 18, 2014

காலி முற்றம்..

இனி அந்த முற்றம்
எப்போதும் காலியாகவே இருக்கும்

உடைபடாத ஜன்னல்கள்
எறியப்படாத பந்துகள்
அமைதியைப்போர்த்துக்கொண்டு
மூலையில் முடங்கிய சைக்கிள்களுடன்
ஊர்ந்து கொண்டிருக்கிறது
ஓர் உயிரற்ற உலகம்
துருப்பிடித்து உடைவதன்றி
வேறு விமோசனமில்லை
நிசப்தமான மைதானங்களில் அசைவற்றிருக்கும்
அந்த ஊஞ்சல்களுக்கு

எப்பொழுதேனும் கரையும்
வேப்பமரக்காகம் தவிர்த்து யாருமில்லா
அந்த முற்றத்துடன்
இனி எப்பொழுதும்
துயரம் மட்டுமே துணையாய்..

Thursday, December 11, 2014

பச்சை வெயில்..

மலைகள் வரையப்படாத குழந்தைகள் ஓவியத்தில்
உதிக்க இடம் இல்லாமல்
அலைந்து கொண்டிருந்தான் சூரியன்
வெட்டப்பட்ட மரங்களின் பின்னே
சிதைக்கப்பட்ட மலையும்
அணிவகுத்துச் சென்றுவிட்டபின்
ஓவியத்தில் மட்டும்
சிறிதுகாலம் நினைவு கூரப்பட்ட அந்த மலை
இப்போது குழந்தைகளின் கற்பனையிலிருந்தும்
கரைந்து விட்டிருந்தது
அனாதரவாய் அலைந்து கொண்டிருந்த சூரியன்
இப்போது
கட்டடங்களின் பின்னிருந்து
உதிக்கப்பழகியிருந்தான்
மலையும் மரங்களுமில்லாப் பாழ்வெளியில்
பொழிந்த பச்சைவெயிலைக் குடித்து
பசியாற ஆரம்பித்தன உயிர்கள்
திசைக்கொன்றாய் நெளிய ஆரம்பித்திருந்தன  நட்சத்திரங்கள்
தீப்பிடித்திருந்த இன்னொரு மலையில்..

வால்: கவிதையை வெளியிட்ட சொல்வனம் இதழுக்கு நன்றி.

Sunday, June 22, 2014

அது.. இது.. எது..

சாலையோரக்கடையொன்றில்
கூனிக்குறுகி அமர்ந்திருந்தவை
ஒரு நாள் திறந்து விடப்பட்டன கூண்டிலிருந்து

அச்சத்தோடும்
சற்றே ஜாக்கிரதை உணர்வோடும்
தப்பித்தலை மறந்திருக்குமென்ற நம்பிக்கையில்
திறந்து விடப்பட்டிருந்த பிராய்லர் கோழிகள்
புகைச்சூழலில் ஒரு கணம்
தள்ளாடியபடி தங்கள் காலடிகளைப் பதித்தபின்
வலித்த விரல்கள் உதறி
இறக்கைகளில் மீதமிருந்த சோம்பல் முறித்தபின்
புனர்ஜென்ம வாசனையால் மண் கிளறி
சுதந்திரமும் கொண்டாடின

வெட்டு மேடையிலும் சுழலும் சக்கரங்களிலும்
காத்திருந்த
இருமுனை மரணத்தை வெறித்தபின்
சாவகாசமாய் மேய்ந்தபடி கொத்த ஆரம்பித்தன
அவைகளின் கடைசி உணவாயிருக்கக்கூடிய ஒன்றை

நேற்றும் இன்றும் அதுவாக இருந்த இது
நாளையே ‘எது’வாகக் கூடுமென்பதை அறியாமல்.

Tuesday, March 18, 2014

மௌனமே சொல்லாய்..

கனத்த அமைதியைப் பூசிக்கொண்டிருக்கும்
அந்த அறையினுள்
மௌனம் நிரம்பிக்கிடந்தது
பேச்சற்றுப்போன இருவரைச்சூழ்ந்து கொண்டு

தளும்பிய மௌனத்திலிருந்து
ஒவ்வொரு சொல்லாக வழிந்து
இன்னும் அவை
மௌனத்தைப்பூசிக்கொண்டிருப்பதை அறியாமல்
அறையை நிரப்பத்தொடங்கிய வேகத்திலேயே
மாறிவிட்டிருந்தன
வைராக்கியமாகவும் வாக்குறுதிகளாகவும்
குற்றச்சாட்டுகளாகவும் சமாதானங்களாகவும்

‘யார் ஆரம்பித்து வைத்தது?’ என்று
அவர்களாகவே கேட்டுக்கொண்டு
‘நானில்லை..’ என்று அவர்களாகவே மறுத்துக்கொண்டார்கள்
வழக்கம்போல் எதிர்தரப்புதானென்று
தீர்ப்பும் எழுதிக்கொண்டார்கள்

சிதறிக்கிடந்த சொற்களை அள்ளி வீசிவிட்டு
“அதிகப்பிரசங்கி..” என்றொரு முணுமுணுப்புடன்
விரல்கள் கோர்த்துக்கொண்டு
மனங்கள் மட்டும்
பேரிரைச்சலோடு பேசிக்கொண்டிருக்கையில்
மௌனம் கனத்துத் ததும்பும் இரவிலிருந்து தெறிக்கிறது
ஒற்றைப்பறவையின் அலறல்.

Thanks to  atheetham.com


Tuesday, February 4, 2014

அடுத்தடுத்து.. (அதீதத்தில் வெளியானது)

அமைதியாய் இருக்கத்தான் முயல்கிறது குளம்
காற்று வந்து சீண்டும் பொழுதிலும்
கற்கள் விழுந்து வைக்கும் போதுகளிலும்

கலங்கிக் கலைந்து அலைக்கழிப்புற்றாலும்
கோபத்தின் அடையாளமாய்
புருபுருவென்ற முணுமுணுப்போடு
அலைக்கரம் கொண்டு காயம் தடவி
தானாகவே சமாதானமாகியும் கொள்கிறது அது

அதன் பாட்டிற்கு இருந்ததைக்
கலைத்து விட்டு
“இனி அதன் பாடு” என்ற உதட்டுச்சுழிப்போடு
அடுத்த குளத்தைக் கலைக்க
போய்க்கொண்டிருக்கிறது காற்று

உடைந்த சூரியத்துணுக்குகளை அள்ளிக்கொண்டு
அலையலையாய்த் துரத்திக்கொண்டு வருகிறது குளம்.

பி.கு: கவிதையை வெளியிட்ட அதீதத்திற்கு நன்றி..

Sunday, January 19, 2014

உயிர்ப்பித்தல்.. (நவீன விருட்சத்தில் வெளியானது)

விளைநிலங்களிலும்
வளர்ந்து நிற்கும் கான்கிரீட் காடுகளில்
மொட்டைத்த(ரை)லையில்
கொஞ்சம்
பூச்செடிகளுடன் குறுமரங்களையும்
சூடிக்கொண்டிருக்கும்
கட்டிடங்களைக் கண்ணுறும்போது மட்டும்
ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது
எப்பொழுதோ கிரயம் செய்து கொடுத்துவிட்ட
மாந்தோப்பும் மல்லிகைத்தோட்டமும்.

சிந்திச்சிதறிக்கிடக்கும் சூரியச்சில்லறைகளில்
புரண்டெழுந்த அணிற்பிள்ளைகளுடனும்
பொந்துகளை ஆக்கிரமித்திருந்த கிளிகளுடனும்
பகிர்ந்துண்ட தித்திப்பு
இன்னும் ஒட்டிக்கொண்டுதானிருக்கிறது அடிநாக்கில்.

“செவ்வகப்பெட்டியினுள் அடைபட்டிருப்பது
என் தோப்புக்கிளியிலொன்றாக இருக்குமோ”
என்றெழும் எண்ணத்தைக் கடந்து செல்ல முயன்று
தோற்றுப் போகும் ஒவ்வொரு முறையும்.
விசும்பியழும் மனதைச் சமாதானப்படுத்த
தொட்டி ரோஜாவும், க்ரோட்டன்ஸுமாய்
வீராவேசத்துடன் உயிர்த்தெழுகிறான்
மனதுள் உறங்கும் விவசாயி.

பி.கு: கவிதையை வெளியிட்ட நவீன விருட்சம் இதழுக்கு நன்றி.