Pages

Saturday, April 30, 2022

பிள்ளைத்தனம்..

ஆனாலும் உனக்குக் கல்மனசுதான்
விசும்பியது என் யானை
என் மேல் பாசமற்றுப்போனாய்
என கூசாமல் குற்றமுரைத்தது
வெள்ளிக்கொலுசுகளும் கழுத்து மணிகளும்
சப்திக்க
குலுங்கிக்குலுங்கி அழுதது
வராத கண்ணீரையும் துளிர்க்காத வியர்வையையும்
ஒற்றிக்கொண்டு
கலையாத முகப்பூச்சைக்
கவனத்துடன் நோக்கிக்கொண்டது
என்னதான் பிரச்சினையுனக்கு?
சற்றே எரிச்சல் எட்டிப்பார்த்தது எனக்குள்
கேளடா மானிடா..
உன் வீட்டில் 
பூனைக்கென தனி வாயில்
உன் படுக்கையில் அதற்கோர் இடம்
அல்லும் பகலும் கைகளில் சுமக்கிறாய்
எனக்கென ஏது?
என்னை ஒருநாளும் சுமந்ததில்லை நீ
கட்டில் இல்லாவிடில் போகிறது
ஒரு தொட்டிலாவது தரலாம் நீ
மீசை முறுக்கித்திரியும்
உன் பூனையின் முன்
மனமொடுங்கி வாழாமல்
மானத்துடன் வாழ விடு என்றது
உருவத்தால் யானையாயிருந்த அப்பூனை.

சின்ன மூக்குத்தி.


ஸ்ரீதேவி மூக்குத்தியில் ஆரம்பித்து
எட்டுக்கல் பேசரி வரை
விதவிதமாய் ஆசைப்பட்டு
கடைசியில்
ஒற்றைக்கல் மூக்குத்தியில் நின்றது
அவர்களது கனவு

மகள்களின் எதிர்பார்ப்பைத்
தள்ளித்தான் போட முடிந்தது
கையாலாகாத பெற்றோரால்
நீலமும் பச்சையும் சிவப்புமாய்
கல் பதித்த
வண்ணக்கனவுகளில் மிதந்தவர்களை
அம்பாளாய் மீனாட்சியாய் 
தன்னை உருவகித்துக்கொண்டவர்களை
தங்கமொட்டு மூக்குத்திகளாய் அவதரித்த
அம்மாவின் தேய்ந்த மோதிரம்
தரைக்கு அழைத்து வந்தது

ஒரு சுபயோக நன்னாளில் 
அவை
அக்காள் குழந்தையின் காதுகளை அலங்கரித்தபோது
ஏழையாய்ப்பிறந்த வெம்பலுடன்
இரகசியமாய்த் துடைத்தெறிந்தனர் அவர்கள்
கண்ணீருடன் கனவுகளையும்

Thursday, April 28, 2022

பாவனைகள்..


சற்றே இடறி விழுந்தான்
அடிபட்ட பாவனையில் கோணியது முகம்
வலித்திருக்க வேண்டும்
ஆதரவாய் 
தன் பூனையை அணைத்துக்கொண்டான்
முகத்தோடு முகம் வைத்துக்
கொஞ்சியது அதுவும்
ஆறுதலாய் ம்யாவியது
தோளுறங்கித் தேற்றியது
கூரிய மீன்முள் பற்களைக்காட்டி
நீண்ட கொட்டாவி விட்டபின்
மடியிலிருந்து குதித்திறங்கி
எனக்கொன்றும் ஆகிவிடவில்லை பார்
என்ற பாவனையில் 
தோளை நிமிர்த்திக்கொண்டு
நீளமாய் நடந்து போனது
ஆழுறக்கத்தில் வீழுமுன்
கடைசியாய் கனவிலென
அவன் நினைவுக்கு வந்தது
இடறி விட்ட அதன் வால். 

Friday, April 22, 2022

எல்லாம் மாயை..

நீண்டதொரு புகார்ப்பட்டியலுடன்
காத்திருந்தது அவன் நாய்
வெளியே அடிக்கடி கூட்டிச்செல்லாததிலிருந்து
கழுத்துப் பட்டையின் நிறம் 
பிடிக்கவில்லை என்பது வரை
வாசித்து முடித்தபின்
இப்போதெல்லாம்
பக்கத்து வீட்டுப்பூனையின் மேல்தான்
பாசம் பொங்குகிறதுனக்கு
எனக்கேவியது
நாய்களைப்போலொரு
பாவப்பட்ட ஜென்மம் ஏதுண்டு?
நானொன்றும் 
முழுநேரக் குற்றவாளியல்ல
என் பற்களும் நகங்களுமே குற்றவாளிகளன்றி
நானெப்போதுமில்லை
பழிகளைச்சுமந்தே
வளைந்த என் முதுகு
இற்றுவிடும் படி இன்னும் ஏற்றாதே
என்றெல்லாம் பிலாக்கணம் வைத்தபின்
கைக்குள் சிறை வைத்திருந்த 
சிட்டுக்குருவியுடன்
மரண விளையாட்டைத் தொடர்ந்தது
அது 
கீறிக்கிழித்து ஒளித்த சட்டையைத் 
தேடிக்கொண்டிருக்கிறான் அவன்.

இவ்விடம் நல்ல பூனை கிடைக்கும்


என் பூனை இரக்கசுபாவி
உறிப்பாலைத் திருடுவதில்லை
கறிச்சட்டிகளை உருட்டுவதில்லை
என் மதியஉறக்கம் கலையாவண்ணம்
காலடியில் சுருண்டு கொள்ளும்
என்னவொன்று
தொட்டியிலிருக்கும் மீன்கள்தான்
அவ்வப்போது
காணாமற் போய்விடுகின்றன
மீசை வைத்த மீனை
என் பூனை
குரோதத்துடன் பார்த்தபோதே
புரிந்திருக்க வேண்டுமெனக்கு
என் கண்ணிலிருந்து அதன் நகங்கள்
ரத்தம் வழியவிட்டபோதும்
நானே குற்றவாளியென ஆவதில்
அதற்குப் பெரும்மகிழ்ச்சி
என் பூனை
உடனடியாகக் கொல்லாது
ஏனெனில்
அது இரக்கசுபாவி.

Friday, April 15, 2022

இவற்றுக்காகவும்தான்..


செய்திகள் கடத்தும் தூதுவராய்
வகுப்பறையிலும்,
கடிதம் சுமக்கும் தபால்காரராய்
காதலரிடையேயும்,
வகுப்புக்குச்செல்லாத மாணவன் உறங்கும்
பசும்புல்வெளியில்
தலையணையாகவும்

பட்டியல் கணக்கில் சிலவற்றைக் கூட்டவும்
அலமாரிகளை நிரப்பும்பொருட்டும்
அடுக்கி வைத்து
அழகு பார்க்கவும்
வாசிப்பின் ஆழ அகலங்களைப்
பறை சாற்றிக்கொள்ளவும்
மட்டுமன்றி,
வெப்பமிகு மதிய வேளைகளின்
காத்திருப்புப் பொழுதுகளிலும்
கை கொடுக்கின்றன
புத்தகங்கள்
விசிறிக்கொள்வதற்காகவும்.

நல்லாச்சி - 30


பழங்கள் பலகாரங்கள் படையலிட்டு
பூவும் தூபமும் கமழ
பூஜித்துக்கொண்டிருக்கிறாள் நல்லாச்சி
கிண்கிணிச் சதங்கை குலுங்க
கை பூட்டிய வளையல்கள் பேச
பட்டும் பூவும் சாற்றி
கைகூப்பி பிரார்த்தித்து நிற்கிறது
பேத்தியாய் வந்த தெய்வம்
ஒரு கண் படைத்தவன்மேல்
மனசெல்லாம் படையல்மேல்
பாயசமும் நல்திராட்சையும்
கற்கண்டும் செவ்வாழையும்
வேண்டுவன எல்லாம் நீ கொள்
வடைகளை மட்டும் எனக்கே தா.

Wednesday, April 13, 2022

போலச்செய்தல்..


தனக்குப் போட்டியாக
கல்லைக்கொத்திக்கொண்டிருப்பவனை 
முறைத்து விட்டு
கொத்துவதைத்தொடர்கிறது 
மரங்கொத்தி
சற்று நிதானித்துவிட்டு
கொத்துவதைத் தொடர்கிறான் சிற்பி
கல்லைக் குடைந்து
புழுபூச்சிகள் தேடுகிறான் அவன்
மரத்திலோர் சிற்பத்தை
வடித்து வைத்திருக்கிறது மரங்கொத்தி
கண்ணொடு கண் நோக்கியபின்
மௌனமாய்ப்பிரிகின்றனர் இருவரும்.

வாழ்க ..


என்னைப்பற்றிப் பேசுவதென்றால்
எல்லா நாக்குகளும்
புரள்கின்றன
என்னைப் பற்றிக் கேட்பதென்றால்
எல்லாக்காதுகளும்
திறந்து கொள்கின்றன
ஆன்றோர்நாள்
ஒரு மன்றாட்டுடன்
உங்கள் மன்றில் வந்து நின்றபோது
உங்கள் ஐம்புலன்களும்
இன்றுபோல் திறந்திருக்கவில்லை
நான் வந்துசென்ற பாதை
தூர்க்கப்பட்டு
இனியெப்போதும் அணுகாவண்ணம்
அகழிகள் அமைந்தபோது
அத்தனையையும் சிரித்துக்கடந்தேன்
சூரியப்புயலாய்ச் சினந்தெழுந்து சாம்பலாக்கி
நீறு பூசி நிற்குமென்னைக் குறித்து
ஓராயிரம் வார்த்தைகளுண்டு உங்களிடம்
அன்று பசித்து வந்தபோது
முகம் திரிந்து நோக்கிய நீங்கள்தான்
இன்று செத்தபின் பாலூற்றும் நீங்களும்
கையறு நிலையென்பதும்
ஓர் தருணமே
கடந்துவிட்டால் 
நானே சக்தியின் மாஊற்று
விஸ்வரூபம் எடுத்த என்முன்
தொழுத கையும் துடிக்கும் உதடுகளுமாய்
முழுவுடல் கிடத்தி வணங்கும்
உங்களுக்குச்சொல்ல ஏதுமில்லை என்னிடம்
வாழ்க எம்மக்காள்.

Thursday, April 7, 2022

தீராப்பசி.


துக்கம்
ஒரு விருந்தாளியைப்போல்
வந்தமர்கிறது
நீங்கள்
அதை பலமாக உபசரிக்கிறீர்கள்
பல்வேறு விதமாய்ப் போஷிக்கிறீர்கள்
அதற்கு எவ்விதக் குறையும் ஏற்படாவண்ணம்
அதன்
பழம்பெருமை பேசி வளர்க்கிறீர்கள்
உங்களிடமே தக்க வைத்துக்கொள்கிறீர்கள்
அணுவளவாய் நுழைந்தது 
மெல்ல மெல்ல
அத்தனையையும் ஆக்கிரமித்துக்
கபளீகரம் செய்கிறது
நீங்கள் உட்பட
பின் எண்ணத்துவங்குகிறது
நீங்கள் எத்தனையாவதென.

அம்மாவின் தம்ளர்.


தம்ளரின் பக்கவாட்டில்
நெருடுகிறது
செதுக்கப்பட்டிருக்கும் அம்மாவின் பெயர்
விரலால் நீவுகையில்
அம்மாவின் 
பழம்புடவை வாசம்
சிலருடன் ஆடை அணிகலன்களாய்
சிலருடன் புகைப்படமாய் 
சிலருடன் வெற்று நினைவுகளாய்
இருக்கும் அம்மா
தம்ளராய்த்தான்
வாசம் செய்கிறாள் எங்களுடன்
ஆறி ஆடை படர்ந்திருக்கும்
ஏதோவொரு திரவம்
கொண்ட தம்ளரை
நடுங்கிய கைகளில் ஏந்தி
கொல்லைப் படிக்கட்டிலமரும்போது
நுரைத்துச் சுடுகிறது காப்பி
அது
அம்மா டம்ளர்
கண்மூடி லயித்து அருந்துவதும்
அவள் கொடுத்ததுதான்.