Pages

Tuesday, February 6, 2018

நிலை..

ஆடிக்கொண்டிருக்கிறது ஊஞ்சல்
இப்பக்கமோ அன்றி அப்பக்கமோ
அல்லால் எப்பக்கமோ
ஊழைக்கடந்து உப்பக்கம்
நுழையப்போந்தவன்
தன்னிலை மயங்கிச்சோர்ந்து
ஒத்திசைந்தாடிக்கொண்டிருக்கிறான்
நிலைக்கு வந்தபின் அவ்வூஞ்சல்
எப்பெயரைச் சூடிக்கொள்ளுமோ!

பிரிமுறுக்கின் விசை தளரும்வரை
சுழலும் பம்பரத்தை
ஆட்டுவிக்கும் சாட்டையின்
தப்பாத தாளத்துக்கேற்ப
தப்படிகள் வைத்தாடுபவனிடமிருந்து
உருவி உருண்டோடும் ஒரு சலங்கை மணி
நிறுத்துகிறது ஆட்டத்தை
இயங்கும் வரைதான் இயந்திரம்
சும்மா இருந்தால் சவமென்பர்.

Tuesday, January 30, 2018

வரமொன்று கேட்பேன்.

பிறவாமலிருந்திருந்தால் இறவாமலிருந்திருக்கலாம்
பிறந்து தொலைத்தபின்
வளராமலிருந்திருந்தால்
பிஞ்சாகவேனுமிருந்திருக்கலாம்

காம குரோதங்களுக்காட்பட்டு
அண்டத்துக்குள் பிண்டமாய் உழன்றுலைந்தோ
பற்றறுத்து
பாரந்தொலைக்கும் தினத்துக்காய்
தவமிருந்தோ
பிறவிப்பெருங்கடல் நீந்திக்
கரையேறும் நொடி வரையான
களத்தில் உலுக்கப்படுவதுதான்
வாழ்வெனில்
பிண்டமாய் வந்து விழுவதைக்காட்டிலும்
அண்டத்தில் ஓர் துகளாய்
மின்னி மறைவது வரம்.

Tuesday, December 12, 2017

வாசனைகளைச் சுமந்தவள்..


செண்பகமும் பன்னீர் ரோஜாவும் கிடைத்தால்
பள்ளிப்பிராய நினைவுகளின் வாசனை
சூழ்ந்துகொள்ளும் பொன்னாக்காவை.
பால்யத்தை மீட்டுக்கொணரும் வாசனைகள்
அவ்வப்போது அவளை உயிர்ப்பித்தபோதும்
இன்ன பிற வாசனைகள் அவளைக் கைவிடவில்லை
அவளும் அவற்றைக் கைவிட்டு விடவில்லை.
அவற்றின் பின்னொரு
பைத்தியத்தைப்போல் அலைந்து
ஒவ்வொன்றாக நுரையீரலில் சேகரிப்பாள்
அக்கணங்களில் அவள் முகம்
புத்தனின் மோன நிலையை ஒத்திருக்கும்
என அங்கலாய்த்துக்கொள்ளும் வீட்டாரை
சட்டை செய்ததேயில்லை அவள்
பூநாகமென ஒவ்வொரு வாசனையிலும்
கிறங்கிக்கிடந்தவள்
ஒரு வெயில் நாளில்
மண்ணெண்ணெய் வாசத்துடன் கருகிக்கிடந்தாள்
அவளுக்குச் சற்றும் பிடிக்காத வாசனை அது
என்பதை
 அன்று நினைவு கூரத்தவறவில்லை அத்தனை பேரும்.


வால் : ஆகஸ்ட் மாத இதழில் கவிதையை வெளியிட்ட  அகநாழிகை இதழுக்கு நன்றி.

Saturday, July 1, 2017

வேறேதுமில்லை..

(இணையத்தின் படக்கொடைக்கு நன்றி)


நினைவுகளாய் மட்டுமே வாழ்ந்து
நினைவுகளாகவே இவ்வுலகில் எஞ்சுபவர் மீது
மரணத்தின்
விரல் கூட படிவதில்லை
அவர் மரணித்த பின்னும்
அவரை உயிர்த்தெழச்செய்ய
எங்கோ ஒரு பருப்பொருளில் ஒட்டியிருக்கும்
நினைவுகள் போதும்
ஒரு புகைஓவியம் போல் 
மெல்ல உருக்கொண்டு மீண்டெழும்
அவர்கள்
இதோ நிற்கிறார்கள்
தொட்டு விடும் தூரத்தில்
பிரியமானவர்களின் நினைவுகளில்
நீந்துபவர்களுக்கும்
அந்நினைவுகளின் ஆதாரக்கோட்டில்
வாழ்பவர்களுக்குமிடையேயான
கண் சிமிட்டும் தூரத்தில்
இதோ எங்கோ 
இருக்குமந்த திரிசங்கு சொர்க்கத்திற்கு
போகவும் மீளவும் விருப்பங்கொண்டு
நீண்ட வரிசையின் கடைக்கோடியில் நிற்பது
நீங்களாகவோ நானாகவோ
எதுவாகவோ இருப்பினும்
நினைவுகளின் நதிக்கப்பால் கை நீட்டும் 
படகோட்டிக்குக் கொடுத்திட எதுவுமில்லை
நினைவுகளைத்தவிர.

Tuesday, November 22, 2016

ஒவ்வொரு முறையும்.. (நவீன விருட்சம் 100ஆவது இதழில் வெளியானது)தொலைபேசி, கைபேசி
குறுஞ்செய்திகளின் வழி
பெரும்பாலும் அகாலங்களிலேயே நுழையும்
அமங்கலச்செய்திகள்
பெறுநரின் பதற்றத்தை உணர்வதேயில்லை
சிசுவோ வயதான சருகோ
யாரேனும் உதிர்ந்த சேதியைச்சுமந்து
அழையாவிருந்தாளியாய் நுழைந்து விடுகின்றன

தந்திக்கிணையாக
பதட்டமுண்டாக்குவதில்லையெனினும்
சற்றே இதயத்துடிப்பைக் கூட்டிக்குறைக்கும்
அகால அழைப்புகள் ஒலித்து முடியுமுன்
வயதான உறவுகளத்தனையையும்
வரிசையில் நிறுத்திக் கலங்கும் மனதில்
எதிர்பார்த்த சேதி இல்லாத
நிம்மதி படரும் அதே கணத்தில்
சேதியொன்றும் வாரா
ஏமாற்றமும் முளைப்பது விசித்திரமான ஒன்றுதான்

சிறு செடிகளையும் பழமரங்களையும்
கசங்கிய இதயத்துடன் வழியனுப்பிவிட்டு
தன் முறைக்காய்க் காத்திருக்கும் பட்டமரங்கள் நடுவே
ஒவ்வொரு விடுமுறை விஜயங்களின்போதும்
"கடைசி முறையாய் உன் கையால் கங்காதீர்த்தம் கொடு'  எனக்கேட்டபடி
இருபது வருடங்களுக்கு மேலும்
படுத்த படுக்கையாக உயிரோடிருந்த
நல்லம்மாச்சியின் மூச்சு நின்ற தினத்தன்று
என் கைபேசியும் உயிர் விட்டிருந்தது.
அதன்பின் வந்த நாட்களில்
கலவரமூட்டும்படி
எப்போதும் அது ஒலித்ததேயில்லை.


வால்: சமீபத்தில் தனது நூறாவது இதழை வெளியிட்டிருக்கும் நவீன விருட்சம் மேலும் சிறக்க வாழ்த்துகளும் கவிதையை  வெளியிட்ட அவ்விதழுக்கு நன்றியும்.

Wednesday, October 26, 2016

மெல்லென நகரும் சாலை

சீரான இரத்த ஓட்டம் போல்
ஓடிக் கொண்டிருந்த வாகனங்கள்
காவலர் தன் பணி செய்யத்தொடங்கிய கணத்திலிருந்து
முடிச்சிட்டுக்கொண்ட நாளங்களில்
தேங்கத்தொடங்கியதும்
உறுமீன் வரும் வரை வாடியிருந்த ஒருத்தி
மல்லிகைப்பூ விற்கத்தொடங்குகிறாள்
அவள் முடிக்கற்றைகளை அணிசெய்த சாரல் துளிகள்
சிறுவைரங்களையொத்திருப்பதை அவளறியாள்
இதோ இச்சாலையோரத்தில் முளைத்திருக்கும்
பூ நாற்றுப் பண்ணைச்செடிகள்
வானவில்லை கரைத்துக்குடித்து விட்டு
அத்தனை வண்ணங்களிலும் பூத்திருக்கின்றன.
புற்றீசல்களாய்ப் புகுந்து புறப்பட்டு
தத்தம் வயிற்றுப்பிழைப்பிற்கு
வழி தேடிக்கொண்டிருக்கும் சாலையோர வியாபாரிகளின்
கண்களிலும் பிரதிபலிக்கின்றன
பண்டிகைக்கால தேவைகள்
என்ன அவசரம்?
மெதுவாய்த்தான் நகரட்டுமே இப்போக்குவரத்து.

Monday, October 17, 2016

கரையும் துளி


கோபம் ஏற்படுத்தும்போது
விலகி நடக்கவும்
பிரியத்தைக்கொட்டும்போது
ஏந்திக்கொள்ளவும்
தனிமைத்தவத்தில்
நிச்சலத்துடனிருக்கவும்
மகிழ்வில் ஆர்ப்பரிக்கவும்
பிரிவேற்படும்போது சகித்துக்கொள்ளவுமென
எல்லாம் பழகிக்கொண்டாயிற்று
ஆயினும்,
ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அசந்தர்ப்பமாய்
துளிர் விடும் கண்ணீரை
என்ன செய்வதென்றுதான்
இன்னும் பிடிபடவில்லை
போகட்டுமென அதில் கரைந்து விடுவதைத்தவிர..