Pages

Showing posts with label நவீன விருட்சத்தில் வெளியானவை. Show all posts
Showing posts with label நவீன விருட்சத்தில் வெளியானவை. Show all posts

Tuesday, November 22, 2016

ஒவ்வொரு முறையும்.. (நவீன விருட்சம் 100ஆவது இதழில் வெளியானது)



தொலைபேசி, கைபேசி
குறுஞ்செய்திகளின் வழி
பெரும்பாலும் அகாலங்களிலேயே நுழையும்
அமங்கலச்செய்திகள்
பெறுநரின் பதற்றத்தை உணர்வதேயில்லை
சிசுவோ வயதான சருகோ
யாரேனும் உதிர்ந்த சேதியைச்சுமந்து
அழையாவிருந்தாளியாய் நுழைந்து விடுகின்றன

தந்திக்கிணையாக
பதட்டமுண்டாக்குவதில்லையெனினும்
சற்றே இதயத்துடிப்பைக் கூட்டிக்குறைக்கும்
அகால அழைப்புகள் ஒலித்து முடியுமுன்
வயதான உறவுகளத்தனையையும்
வரிசையில் நிறுத்திக் கலங்கும் மனதில்
எதிர்பார்த்த சேதி இல்லாத
நிம்மதி படரும் அதே கணத்தில்
சேதியொன்றும் வாரா
ஏமாற்றமும் முளைப்பது விசித்திரமான ஒன்றுதான்

சிறு செடிகளையும் பழமரங்களையும்
கசங்கிய இதயத்துடன் வழியனுப்பிவிட்டு
தன் முறைக்காய்க் காத்திருக்கும் பட்டமரங்கள் நடுவே
ஒவ்வொரு விடுமுறை விஜயங்களின்போதும்
"கடைசி முறையாய் உன் கையால் கங்காதீர்த்தம் கொடு'  எனக்கேட்டபடி
இருபது வருடங்களுக்கு மேலும்
படுத்த படுக்கையாக உயிரோடிருந்த
நல்லம்மாச்சியின் மூச்சு நின்ற தினத்தன்று
என் கைபேசியும் உயிர் விட்டிருந்தது.
அதன்பின் வந்த நாட்களில்
கலவரமூட்டும்படி
எப்போதும் அது ஒலித்ததேயில்லை.


வால்: சமீபத்தில் தனது நூறாவது இதழை வெளியிட்டிருக்கும் நவீன விருட்சம் மேலும் சிறக்க வாழ்த்துகளும் கவிதையை  வெளியிட்ட அவ்விதழுக்கு நன்றியும்.

Sunday, January 19, 2014

உயிர்ப்பித்தல்.. (நவீன விருட்சத்தில் வெளியானது)

விளைநிலங்களிலும்
வளர்ந்து நிற்கும் கான்கிரீட் காடுகளில்
மொட்டைத்த(ரை)லையில்
கொஞ்சம்
பூச்செடிகளுடன் குறுமரங்களையும்
சூடிக்கொண்டிருக்கும்
கட்டிடங்களைக் கண்ணுறும்போது மட்டும்
ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது
எப்பொழுதோ கிரயம் செய்து கொடுத்துவிட்ட
மாந்தோப்பும் மல்லிகைத்தோட்டமும்.

சிந்திச்சிதறிக்கிடக்கும் சூரியச்சில்லறைகளில்
புரண்டெழுந்த அணிற்பிள்ளைகளுடனும்
பொந்துகளை ஆக்கிரமித்திருந்த கிளிகளுடனும்
பகிர்ந்துண்ட தித்திப்பு
இன்னும் ஒட்டிக்கொண்டுதானிருக்கிறது அடிநாக்கில்.

“செவ்வகப்பெட்டியினுள் அடைபட்டிருப்பது
என் தோப்புக்கிளியிலொன்றாக இருக்குமோ”
என்றெழும் எண்ணத்தைக் கடந்து செல்ல முயன்று
தோற்றுப் போகும் ஒவ்வொரு முறையும்.
விசும்பியழும் மனதைச் சமாதானப்படுத்த
தொட்டி ரோஜாவும், க்ரோட்டன்ஸுமாய்
வீராவேசத்துடன் உயிர்த்தெழுகிறான்
மனதுள் உறங்கும் விவசாயி.

பி.கு: கவிதையை வெளியிட்ட நவீன விருட்சம் இதழுக்கு நன்றி.

Monday, July 29, 2013

தூதும்,, சமாதானமும்.

கல்லெறிபட்ட தேன் கூடாய்க்
கலைந்து கிடந்த வீட்டில்
இரு வேறு கட்சிகளாய்ப்
பிரிந்து நின்று
உப்புப் பெறாத விஷயத்துக்காய்,
விஷவார்த்தைகளால் சுட்டுக் கொண்டார்கள்
தலைவனும் தலைவியும்.

பறக்கும் தட்டுகளும், கண்ணீர்க் குண்டுகளும்
இறைந்து கிடந்த போர்க்களத்தில்,
சட்டென்று ஏற்றப்பட்டது
சமாதானக்கொடி
ஓடிச் சென்று கட்டிக் கொண்ட
மழலைத்தூதுவர்களால்..

எவர்க்காய்ப் பரிவதென்றறியாமல்
மருண்டு நின்றவர்களுக்காய்
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட
முதுகுக்குப்பின் கைகுலுக்கிக்கொண்ட
தூதுவர்களால்
நிரம்பி வழிந்தது மனக்கருவூலம்
வற்றாத அன்பால்..

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட நவீன விருட்சம் மின்னிதழுக்கு நன்றி..

Wednesday, January 30, 2013

ரயிலோடும் வீதிகள்.. (நவீன விருட்சத்தில் வெளியானது)

(இணையத்தில் சுட்ட படம்)
கயிற்று வளையத்துள்
அடைபட்டிருந்த பெட்டிகளெல்லாம்
அலுத்துக்கொண்டனர்,
ரயில் மெதுவாகச்செல்வதாக..
குதித்துக் கும்மாளமிட்டுச்
சூறாவளியாய்க் கிளம்பிய ரயில் பெட்டிகள்
ஒன்றுக்கொன்று இடித்துத் தள்ளியதில்
தடம்புரண்டோடிய
உற்சாக ஊற்று
சற்றுச்சுணங்கிற்று அவ்வப்போது.
பிள்ளையார் கோவில் நிறுத்தம்
இந்நேரம்
தாண்டப்பட்டிருக்க வேண்டுமென்ற
மூன்றாவது பெட்டி காளியப்பனை
ஆமோதித்தாள்
ஐந்தாவது பெட்டியான வேலம்மாள்.
“வெரசாத்தான் போயேண்டா”
விரட்டிய குரலுக்குத்தெரியாது,
ரயிலோட்டுனருக்கு
அன்றுதான்
காலில் கருவை முள் தைத்ததென்பது.
அலுத்துப்போன கடைசிப்பெட்டி
சட்டென்று திரும்பிக்கொண்டு இஞ்சினாகியதில்
வேகம் பிடித்த ரயிலில்
இழுபட்டு அலைக்கழிந்து வந்தது
முன்னாள் இஞ்சின்
வலியில் அலறிக்கொண்டு..

டிஸ்கி: வெளியிட்ட நவீன விருட்சத்திற்கு நன்றி.

Thursday, January 24, 2013

தொலைந்த நிழல்..(நவீன விருட்சத்தில் வெளியானது)

மதிய வெய்யில் உறங்கிக்கொண்டிருந்த வீதிகளில்
தேடலுடன் நகர்ந்து கொண்டிருந்தது அந்த நிழல்.
பூவரச மரத்தின் கீழ் துயின்ற
பூச்சருகுகளின்
உறக்கம் கலைக்காமல்
வார்த்தைக்குள் வராத சங்கீதத்தை
வாய்க்குள் மென்று கொண்டே
தான் தொலைந்த இடத்தைத்
தேடிக்கொண்டிருந்தது.

கலகலப்புகளிலும்
சின்னக்கொலுசுகளின் கிணுகிணுப்புகளிலும்
ஆலமர ஊஞ்சல்களிலும்
தன்னைத்தேடிச் சலித்த அது
ஜவ்வு மிட்டாய்க்காரனின் பின்னே
போய்க்கொண்டிருந்தது
தானும் கைதட்டிக்கொண்டு.

பல்லாயிரம் வாசனைகளுக்கிடையே
மிதந்து வந்த தன்னுடைய வாசனை
கால்களைக்கட்டியிழுக்க
தொலைந்த இடம் சேர்ந்த மகிழ்வுடன்
ஓடிச்சென்று விரல் பற்றிக்கொண்டு
பாண்டியாடத்தொடங்கியது
பாவாடை பறக்கப் பறந்து கொண்டிருந்த சிறுமியுடன்.

டிஸ்கி: நவீன விருட்சத்திற்கு நன்றி :-)