தொலைபேசி, கைபேசி
குறுஞ்செய்திகளின் வழிபெரும்பாலும் அகாலங்களிலேயே நுழையும்
அமங்கலச்செய்திகள்
பெறுநரின் பதற்றத்தை உணர்வதேயில்லை
சிசுவோ வயதான சருகோ
யாரேனும் உதிர்ந்த சேதியைச்சுமந்து
அழையாவிருந்தாளியாய் நுழைந்து விடுகின்றன
தந்திக்கிணையாக
பதட்டமுண்டாக்குவதில்லையெனினும்
சற்றே இதயத்துடிப்பைக் கூட்டிக்குறைக்கும்
அகால அழைப்புகள் ஒலித்து முடியுமுன்
வயதான உறவுகளத்தனையையும்
வரிசையில் நிறுத்திக் கலங்கும் மனதில்
எதிர்பார்த்த சேதி இல்லாத
நிம்மதி படரும் அதே கணத்தில்
சேதியொன்றும் வாரா
ஏமாற்றமும் முளைப்பது விசித்திரமான ஒன்றுதான்
சிறு செடிகளையும் பழமரங்களையும்
கசங்கிய இதயத்துடன் வழியனுப்பிவிட்டு
தன் முறைக்காய்க் காத்திருக்கும் பட்டமரங்கள் நடுவே
ஒவ்வொரு விடுமுறை விஜயங்களின்போதும்
"கடைசி முறையாய் உன் கையால் கங்காதீர்த்தம் கொடு' எனக்கேட்டபடி
இருபது வருடங்களுக்கு மேலும்
படுத்த படுக்கையாக உயிரோடிருந்த
நல்லம்மாச்சியின் மூச்சு நின்ற தினத்தன்று
என் கைபேசியும் உயிர் விட்டிருந்தது.
அதன்பின் வந்த நாட்களில்
கலவரமூட்டும்படி
எப்போதும் அது ஒலித்ததேயில்லை.
வால்: சமீபத்தில் தனது நூறாவது இதழை வெளியிட்டிருக்கும் நவீன விருட்சம் மேலும் சிறக்க வாழ்த்துகளும் கவிதையை வெளியிட்ட அவ்விதழுக்கு நன்றியும்.
No comments:
Post a Comment