Pages

Wednesday, December 29, 2010

வரவறிவித்தல்.

விருந்தினர் வரவை
கரைந்தறிவிக்கும் காக்கை
தானே ஒரு
விருந்தினரானது;
அப்பாவின் திதியன்று..
*************************
எந்தவொரு
இசைக்கருவியையும்விட
இனிமையாகவே ஒலிக்கிறது,
'அம்மா' என்ற
மழலைச்சொல்...

*****************************

நிரம்பியபடியே இருக்கிறது
ஒவ்வொரு துளிகளாய்
என்றாலும்;
சொந்தமில்லாதவற்றை
உமிழ்ந்துவிடும்
கடலாய்,
ஒதுக்கியபடியே இருக்கிறது மனம்,
ஒவ்வொன்றாக.. கசடெனக்கருதி;
சஞ்சலங்களையும் தடுமாற்றங்களையும்.
சோதனைகளை
உரமாய்க்கொண்டு
உருவாகின்றன நம்பிக்கைகள்..
சிப்பிக்குள் முத்தென.


Friday, December 17, 2010

விடிந்த நம்பிக்கை...ஒவ்வொரு தினமும்
புது நம்பிக்கையொன்றை
தன்னுடனேயே சுமந்து வரும்
ஒவ்வொரு விடியலும்!.

உதயமாகியிருப்பது
புது விடியலா;
புது தினமா;
இல்லை,.. புது வாழ்வா??
என்ற மயக்கங்களுடன்
தயக்கங்களையும் கட்டறுத்து;
தன்னைத்தானே செதுக்கிக்கொண்டிருக்கும்
அந்தக்கல்லினுள்ளே..
இருப்பது மூர்த்தமா, வேறொன்றாவென்று
அறியும் ஆவலில்,
நின்று கவனித்துப்போகின்றன;
நம்பிக்கையும் விடியலும்.

கவிந்த துயரமேகங்களை
விரட்டிச்சிரிக்கும்
புன்னகைச்சூரியனின் வெதுவெதுப்பில்,..
ரோஜாக்களாய் மலர்ந்த முட்களின் வாசத்தில்
கிறங்கிவிழுகிறது
ஒரு பனித்துளி..

Monday, December 13, 2010

வெறிச்சோடிய முற்றம்...

முற்றத்துத்தூணில் சாய்ந்துகொண்டுதான்
கீரை ஆய்வாள்,
பொன்னம்மாச்சி..
வெயில் காயும் நெல்லில் சிறிதில்
பசியாறும் புறாவுக்கு,
முற்றத்து தொட்டியில்
தண்ணீரும் கிடைக்கும்.. அவள் புண்ணியத்தில்.
அவளமைத்த
கலயவீடுகளில்
நிம்மதியாய் குடும்பம் நடத்துகிறது குருவி
நன்றி சொல்லியபடி..
பேச்சும் சிரிப்புமென
தோழிகளில் ஒருவராகிப்போன
அந்த முற்றத்தில்தான்
பொரணியும் ஆவலாதியும்
சேர்ந்தரைபடும் அரிசியுடன்..
கானகமும் இல்லமுமாய்
அனைவரும் போய்ச்சேர்ந்தபின்..
வெயிலாடிக்கொண்டிருக்கிறது
துவைத்த கல்லும், வளர்த்த முருங்கையும்;
காலியான முற்றத்தில்...


டிஸ்கி:  வெளியிட்ட வார்ப்புக்கு நன்றி..

Friday, December 10, 2010

எழுதிச்செல்லும்..


நூலறுந்த பட்டமாய்
உயரப்பறக்கும் கற்பனைகளுடன்
எழுதிச்செல்கிறது
கவிதையொன்று.. தன்னைத்தானே;
ஊர்ந்து செல்லும் எழுத்தெறும்புகள் ..
சுமந்து செல்லும்,
கொஞ்சம் கனவுகளையும்
ஓய்வெடுத்துச்செல்லும்
சில வண்ணத்துப்பூச்சிகளையும்..
ஒருசில நெருப்பூக்களையும்.
சிலசமயங்களில்
கவிதைகளாகவே இருக்கின்றன;
போகிறபோக்கில் குழந்தை
சிந்திச்செல்லும் புன்னகைகளும் ..
அள்ளிச்சேர்த்தபின்னும்
மீதமிருக்கும்
மழைமுத்துக்களாய்..
பிரபஞ்சமெங்கும்
நிரம்பிச்சொரிந்துகொண்டே
இருக்கின்றன கவிதைகள்..Wednesday, December 8, 2010

விஷவிருட்சம்...


கூரையில் விழுந்த
சிறுபொறியொன்று,
விழுங்கிடத்துடிக்கும் பெருநெருப்பாகி,
தீவிரவாதமென்ற பேர்கொண்டதுவோ??
புரையோடிப்போனதை
பூச்சிட்டு அழிக்காமல்,
எம்மக்கள் வாளாவிருப்பதுவோ!!
சோதரர்களிடையே
பிரிவினை கண்டு
துடித்திடாத தாய்,
இன்னும் பிறந்திடவில்லை.
குறைவிலா வேதனைகள்
சுமந்துதிரியும்,.. ஒவ்வொரு மனங்களிலும்,
வாழ்வே சுமையாகிப்போன
ரணமொன்றுண்டு, உதிரம் கசிந்தபடி..
வேருடன் கல்லாது 
செந்நீரூற்றி வளர்த்த விஷ விருட்சத்தில், 
கிளைத்துக்கனிந்து காத்திருக்கிறான்
சாத்தானொருவன்
மனிதனென்றழைத்துக்கொள்பவர்களால்
புசிக்கப்படவென..
ஆயுதமாய் மனிதனே மாறிப்போனபின்
தக்கவைத்துக்கொள்வோம்
மனிதத்தை.... 
அழியும்முன்.
காட்சிப்படுத்திடவென்றல்லாமல்
சுவாசமாய்.. உயிர்மூச்சாய்!!.


Monday, December 6, 2010

மகிழ்வின் நிறம்..


எந்தவொரு
புதினத்தையும்விட
சுவாரஸ்யமாகவேயிருக்கிறது;
ஜன்னல்களினூடே விரியும்
யாருமற்ற ஏகாந்தவெளியில்,
ஒன்றையொன்று துரத்தும்
ஜோடி மைனாக்களின்
கொஞ்சல்களுடன் கூடிய சிறகடிப்பும்,..
காற்றில் வழிந்துவரும்
ஒரு
புல்லாங்குழலென
மழலையின் நகைப்பும்...
வானுக்கும் பூமிக்குமான நீர்ப்பந்தலில்
உற்சாகப்பூங்கொத்துடன்
மகிழ்வானதோர் உலகத்தை அறிமுகம் செய்து,
சில்லென்று குளிர்வித்துப்
போகிறபோக்கில்
வானவில்லில்
இன்னொரு நிறத்தையும் செருகி
மற்றொரு அற்புதத்தையும்
தெளித்துப்போகிறது மழை...

டிஸ்கி:  வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.


Wednesday, December 1, 2010

ஓயாதகடலொன்று...

வீட்டை நிறைக்கும்
மழலைப்புன்னகையென
சிதறிக்கிடக்கும் சிப்பிகளினூடே,
கண்ணாமூச்சியாடும் குழந்தைகளாய் 
ஓடிச்சென்று மறைகின்றன 
கொழுத்த நண்டுகள்..
ஆதரவான தகப்பனைப்போல் 
கேசம் கலைத்துச்செல்லும் காற்று;
கொண்டு வந்து சேர்க்கிறது 
கடலின் வாசத்தை..
இன்னொரு நாளை 
முடித்த நிறைவில்
 நாள் முழுதும் உழைத்த களைப்பில்;
மறைந்த ஆதவன்,
உதிக்கிறான் ஒரு குழந்தையின் கையில்
பலூனாய்..
வீடு வந்து சேர்ந்தபின்னும் 
அலையடித்துக்கொண்டிருக்கிறது 
கடல்,
உடையிலிருந்து உதிரும்
குறுமணலுடன்..
கால் நனைக்கவென்று மட்டுமல்லாமல்
எல்லாவற்றுக்குமான விருப்பமாய்...

இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி...