Pages

Friday, June 25, 2010

ஒரு சாகசப்பயணம்...


(நன்றி:கூகிள்)

அவசரமாய்ப்போட்ட ஒப்பனையை
ஆங்காரமாய் கலைத்துவிட்டு
ஒன்றுமறியாததுபோல்
சிரித்துக்கொண்டிருக்கிறது மழை;

வேஷம் கலைந்த கோபத்தை
கையாலாகாத்தனமாய் வெளிப்படுத்தி
இளித்துக்கொண்டிருக்கிறது சாலை;
தேங்கிப்போன நினைவுகளுடன்
அடுத்த ஒப்பனையை எதிர்நோக்கி...

சுமையை இறக்கிவைக்கும்
இலக்கு தேடி..
விரைந்துசெல்கின்றன
மடிகனத்த மேகங்கள்;
பெருமூச்சு விட்டுக்கொண்டு...

விழுந்து எழுந்து,
விழுப்புண் பெற்று,
பூகம்ப பயணத்தின் இலவச இணைப்பாய்
முதுகுவலி வாங்கி,
யமதர்மனின் நிமிட தரிசனம்பெற்று,
அடுத்த நாளுக்கான நீட்டிப்புக்கு
உத்தரவாதம் பெற்ற உயிருடன்
வந்து சேர்கிறோம் நாம், வீடு நோக்கி..




Saturday, June 19, 2010

வலம் வரும் நினைவுகள்...

Photobucket

புரியாத புதிரொன்றில்
மூழ்கி முத்தெடுத்து
மூச்சு முட்டி வெளியே வந்தேன்;
மறுபடியும் சிரித்து வைக்கிறாயே!!
இன்னொரு புதிராக;
திக்குமுக்காடிப்போகிறேன் நான்....

கன்னம்தொட்டு நீர் துடைத்து,
மடி தந்த அக்கணத்தில்;
மகளே,
தாயுமானாய் நீ;
கரைந்து போகிறேன்...

உயிரைப்பிய்த்துக் கொடுத்தபின்னான
வலியின் காயத்திற்கு
புன்னகை மருந்திடும்
இறக்கைகளில்லா செல்லதேவதை நீ;
லேசாகிப்போகிறேன்...

பாசமுடன் பாசாங்கும்காட்டி
பிரிந்து சென்ற
உன் இருப்பை உணர்த்திச்செல்கிறது,
வெற்றுக்கூட்டில் எதிரொலிக்கும்
நிசப்தமான கொலுசொலி;
எனது வெறுமைக்கு துணையாக..
பெருமூச்செறிகிறேன்......


(படம்: சுட்டது:-))

Wednesday, June 16, 2010

சில பொழுதுகள்...




நானே நானாக,
அதுவும், நானாக
பிரதிபலிப்பில் இல்லை மாற்றங்கள்.

எதுவும் நீயில்லையென்று
கூக்குரலிடும் மனசாட்சியை,
குரல்வளையை பிடித்து
வாதிட்டு வென்றபின்;
நானேதான் என்று
ஆசுவாசமடைகிறேன்.

என்னைப்போலிருக்கும் நானுக்கும்
நானென்ற எனக்கும்
முரண்பாடுகள் இல்லாத பட்சத்தில்,
சேர்த்து வைத்த
பிம்பங்களையெல்லாம்
வழித்துப்போட்டுவிட்டு;
உயிரற்று நிற்கிறது நிலைக்கண்ணாடி.