Pages

Monday, August 29, 2022

நல்லாச்சி - 35


"இரவும் பகலும் 
எப்படி வருகிறது ஆச்சி"
நல்லாச்சி மடியில் மல்லாக்கப்படுத்துக்கொண்டு
கேட்கிறாள் பேத்தி
"கடவுள் ஊட்ல 
சுச்சு போட்டா பகலு
அமுத்துனா ராவு அவ்வளவுதான்"
பதிலுறுத்தாள் நல்லாச்சி
இருள்பிரியாது நீண்ட
குளிர்கால இரவொன்றில்
பொறுமையிழந்த பேத்தி சொல்கிறாள்
"கடவுள் வீட்லயும்
பீசுகட்டய புடுங்கிட்டாவோ போலுக்கு
பில்லு கட்டலயோ"
ஞேயென விழிக்கிறாள் நல்லாச்சி
வெளிச்சம் வரக் காத்திருக்கிறாள் பேத்தி.

Sunday, August 28, 2022

நல்லாச்சி - 34


"ஆக்கறவனுக்குப் பல நாள் வேலை
அழிக்கறவனுக்கு ஒரு நிமுசந்தான்"
சொலவம் சொல்லியவாறு
வெற்றிலை போடத்துவங்குகிறாள் நல்லாச்சி
பாக்கு இடிபடுகிறது உரலில்
செத்தோல இழுவுகிறாள் சுண்ணாம்பை
காம்பும் நுனியுமற்ற வெற்றிலையின் முதுகில்
மூன்றையும் வாய்க்குள் அடக்கிய
ஒரு நிமிடத்தில்
சிவக்கிறது வாய்
நிறைவுறுகிறது நெஞ்சம்
கண்கொட்டாமல் கவனித்திருந்த பேத்தி
ஆமாமென ஆமோதிக்கிறாள் ஆச்சியின் கூற்றை
வெற்றிலை விளைய எத்தனை நாளோ
கமுகு பழுக்க எத்தனைக் காலமோ
சுண்ணாம்பு பக்குவப்பட எத்தனைப் பொழுதோ
அத்தனையையும் ஒரு நிமிடத்தில் மென்றுவிட்டாயே
வாய்க்குழம்பு சிதறாதிருக்க அடக்கிய சிரிப்பால்
புரையேறுகிறது ஆச்சிக்கு
நமுட்டுச்சிரிப்புடன் அகல்கிறாள் பேத்தி

Thursday, August 18, 2022

கேட்டதும் கிடைத்ததும்..


முந்நூறு கிராம் சர்க்கரைப்பொங்கலும்
மூன்று முழம் பூவும் படைத்து
வேண்டிநிற்கிறான் பக்தன்
மூன்றுலட்ச ரூபாய் லோன் பாசாக
தொகையைக்கேட்டு திகைத்த தெய்வம்
காணிக்கையை யோசிக்கவாரம்பித்தது
சுற்றுப்பட்டு நகரத்துசாமிகள் தம் பெருமையாய்
உருள்பெருந்தேரும் 
பூப்பல்லக்கும் சப்பரமும் கொண்டிருக்க
பின்னிருக்கும் காட்டுச்சுனையில்
தானோர் தெப்பஉலாவேனும் காண வேண்டாமா?
தெய்வத்தின் பட்டியல் நீண்டுசென்ற பொழுதில்
இடைமறித்தது பக்தையின் குரல்
"லோனு பாசானாத்தான்
புள்ளைக்கி மால பூக்கும்
கருணை காட்டப்பா"
ஆசையும் பரிவும்
துலாக்கோலில் நின்றாட
சட்டென பரிவின் கனத்தைக் கூட்டியது தெய்வம்
"பெண்ணடி பாவத்தைக் கையேந்தி
இன்னும் தும்பம்படவா இந்தக் காட்டுக்குள்ள?
பல்லக்கும் தெப்பமும் 
பசையுள்ள பக்தனைச் செய்ய வைப்போம்"
சிரசில் சூட்டிய மலரை வீழ்த்தி
நற்சகுனம் காட்டிய தெய்வத்திடம்
காணிக்கையாய்
கூரை போட்டுத் தருவதாய் வாக்களித்த பக்தனை
வாஞ்சையுடன் நோக்குகிறது
பழம்பட்டைப் போர்த்தி கூதலில் 
நடுங்கியமர்ந்திருக்கும் தெய்வம்.

நல்லாச்சி - 33


வெகுநாளாய் ஆடிக்கொண்டிருந்த
நல்லாச்சியின் பல்லொன்று 
விழுந்துவிட்டதாம்
சோகத்தில் ஆழ்ந்திருக்கிறாள் பேத்தி
பல்லைத்தொலைத்த நல்லாச்சி
பண்டம் சாப்பிடுவதெப்படி
கரும்பின் தோலுரித்துத் தனக்குத்
தருவதுதானெப்படி
பேத்தியின் அவஸ்தை கண்டு
நகையடக்கவியலா நல்லாச்சி
வயதானால் பல்லும் சொல்லும்
நலிவது இயல்பே எனப்புகன்றும்
ஆச்சியின் முதுமை
ஏற்பில்லை பேத்திக்கு
தொலைந்ததைத் திரும்பப்பெற
உபாயங்கள் தேடுகிறாள்
சாணகத்தில் பொதிந்து கூரை மேல் வீசுவது முதல்
டூத்ஃபெய்ரியிடம் வேண்டுவது வரை
சின்னஞ்சிறு மூளைக்குள்
மொட்டு விடுகின்றன உபாயங்கள்
சட்டெனப் பூக்கிறது வழியொன்று
இனி
அத்தனைப் பற்களும் உதிர்ந்தாலும் கவலையில்லை
நவீன டூத்ஃபெய்ரியாம் பல்மருத்துவர்
செவ்வனே கட்டித்தருவார் பொய்ப்பற்களை
இறுதிவரை புன்னகைஅரசியாய்
கோலோச்சலாம் நல்லாச்சி
பெருமிதம் மீற அணைத்துக்கொள்கிறாள் அரசி
புன்னகை இளவரசியை.