Pages

Monday, May 6, 2013

காகிதக்குறிப்புகள்.. (வல்லமையில் வெளியானது)


காற்தடம் பதியாப்பாதையெனவும்,
எழுதப்படாத வெற்றுக்காகிதமெனவும்
முன் நீண்டு கிடக்கிறது
இன்றைய தினம்.

புட்களின் அதட்டலுக்குப் பயந்த
விடிகாலைச்சூரியன்
மேகப்போர்வை விலக்கி
மெல்ல முகம் காட்டவும்
தலையசைத்துப் பூமழை சொரிந்து
பச்சையம் சுமந்த பயிர்களெலாம்.
வரவேற்பு அளிக்கவுமென
நன்றாகத்தான் ஆரம்பிக்கின்றன
ஒவ்வொரு தினமும்,
வெற்றுக்காகிதமென.

ஏதேனும் சில வரிகளாவது கிறுக்கப்படலாம்,
மனங்களை வெல்லும்
வண்ண ஓவியமொன்று வரையப்படலாம்,
வரலாற்றைப் புரட்டிப்போடும்
சகாப்தங்கள் எழுதப்படலாம்,
அல்லது
எதற்குமே உபயோகப்படுத்தப்படாமல்
கசக்கி வீசப்படவும் கூடும்.
எதற்குமே அது கோபித்துக் கொள்வதில்லை.
மீண்டும் மீண்டும் வந்து
காலைக்கட்டிக்கொள்ளும்
செல்லக்கோபத்திற்குப் பயப்படாத குழந்தையாய்
வந்து கொண்டுதான் இருக்கிறது நம்மிடம்.

தான் சுமந்திருக்கும் பூக்களின் நறுமணத்தில்
தன்னை மறந்து
பால்வெளியில் உயரப்பறக்கும்
மிதவைத்தருணங்களில்
சேற்றிலும் விழுந்து தொலைத்து விடுகிறது,
சட்டென இழுபட்டு.
கருப்புக்கறைகளைக் காலம் முழுக்கச் சுமக்க நேரிட்ட
அவலத்தையெண்ணி,
அவை நினைவு கூரப்படும்போதெல்லாம்
மவுனத்தைப் பூசிக்கொண்டு விடுகிறது.

அற்புதமானதாகவோ சாதாரணமாகவோ
ஏதேனும் ஒரு
கிறுக்கலையாவது பரிசளிப்பது மிக நன்று.
அதை
வெறுமையாகவே விட்டுச்செல்வதை விட.

டிஸ்கி: வல்லமையில் எழுதியதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.