Pages

Sunday, November 22, 2020

நல்லாச்சி - 9



மந்தையில் மேயச் சென்ற செவலைப்பசு
அந்தி மயங்கியும் வீடடையவில்லை
காடுகரை மேய்ந்ததோ
கால் வழுக்கித்தான் விழுந்ததோ
பயிர் பச்சை கடித்ததோ
பவண்டில்தான் அடைபட்டதோவென
எதிர்படுவோரிடமெல்லாம் 
புலம்பித் தீர்க்கிறாள்
காத்துச்சலித்த நல்லாச்சி
செய்தித்தாளில் 
விளம்பரம் தரலாமென அறிவுறுத்தும்
பட்டணத்துப் பேத்தி அறியாள்
உள்ளூரில் அலமுறையிடுவதும்
பத்திரிகையில் பகிர்வதும்
வெவ்வேறென்றாலும்
பலனொன்றே என்பதையும்
இரண்டொரு நாளில் 
தேடல் தீர்ந்து விடுமென்பதையும்.

நல்லாச்சி - 8



மேனி குலையாதிருக்கும் கதிரவனை விட
தினம் தேய்ந்து வளரும் நிலவின் மேல்
தனிப்பிரியம் பேத்திக்கு
நாளுக்கு நாள் அது மெலிவது குறி்த்து
ஆயிரம் கேள்விகள் அவளிடம்
எல்லாவற்றையும்
நல்லாச்சியை நோக்கி வீசினாலும்
"அதுக்கு மேலுக்குக் கெதியில்லை"
என்றொரு பதிலை
அவளாகவே சொல்லிக்கொள்வாள்
நிலவில்லா ஒரு அமாவாசை வானில்
தேடி ஏமாந்த பேத்தியிடம் 
"அது ஆசுத்திரிக்கிப் போயிருக்கு" என
நல்லாச்சி இயம்பியதிலிருந்து
பூரணப் பிரகாசத்துடன் வரவிருக்கும்
நிலவுக்காகக் காத்திருக்கிறாள் பேத்தி
இன்னொரு நிலவாக.

நல்லாச்சி - 7

தங்க அரளி செம்பருத்தி பிச்சி அலமெண்டா என
பல வண்ணப்பூக்களுண்டு
பூஜைக்கென 
நல்லாச்சியின் தோட்டத்தில்
புலருமுன் அத்தனையும் பறிக்கப்பட்டு
தாத்தாவின் கைங்கர்யத்தால்
இறைவனைச்சென்றடையும் 
விடியலில் வந்த தேன்சிட்டொன்று
ஏமாந்து புலம்பியதையும்
வண்ணத்துப்பூச்சிகளெல்லாம்
தோட்டமெங்கும் தேடி அல்லலுற்றதையும்
பேத்தி கவனித்த தினத்திலிருந்து
செடிகொடிகள் இழக்காமலிருக்கின்றன
இறைவனுக்கு மானசீகமாகச் சமர்ப்பிக்கப்பட்ட
தத்தம் பூங்கிரீடத்தை
ஆலோசனை சொன்ன நல்லாச்சிக்கு
நன்றி நவின்றபடி.

Friday, August 14, 2020

நல்லாச்சி - 6

ஈ பாஸில் ஊர் வந்த
பேத்தி அளித்த முகக்கவசத்தோடு
ஆயிரத்தெட்டு அறிவுரைகளையும்
செவியிலணிந்து கொண்டிருக்கிறாள் நல்லாச்சி
சமூக விலகல் மிக அவசியமென்று
தொழுவத்து மாடுகளைக்கூட
விலக்கிக் கட்டச்சொன்ன
பேத்தியின் ஆணையை
சிரிப்புடன் சிரமேற்கொண்டு
நிறைவேற்றியவள்
அவளின் ஒரு கேள்வியால்
தடுமாறிக்கொண்டிருக்கிறாள்.
கோவில் யானையை
முகக்கவசமணியச்சொன்னால்
என்ன செய்யும்? எப்படி அணியும்?

எரிந்த வீடு..

வாசற்கோலத்தின் மேல் இழையிட்டிருக்கும் கரிநீரும்
எரிநாக்குகள் தீண்டித் தீய்த்த சுவர்களும்
பொசுங்கிய பொம்மைகளும்
கருகிய பொருட்களுமாய்
தீக்காயங்களுடன் நிற்கும் அவ்வீட்டின்
கருகிய மேற்கூரை
வழி இறங்கிய மழைத்தாரைகள்
அணைந்தும் கனன்ற அடுப்பை
மொத்தமாய் அவித்தன
ஆறுதலாய் அழுத்தி விட்டு
பல கரங்கள் நழுவிக்கொணடாலும்
கொண்டு வந்து ஊட்டும் சில கரங்கள்
தோழமையுடன் படிந்து கொண்டன.
உயிர் தப்பித்தலின் ஆசுவாசம் படியுமுன்னரே
நாளை என் செய்வேமென்ற
பாதுகாப்பின்மை தன்னை நிறுவிக்கொண்டது.
நட்சத்திரங்களையே கூரையாய்க்
கொண்டிருக்கும் இவ்விரவில்
கண்ணீர்க்கறை துடைக்கவொட்டா கைகளொடும்
காற்றே தூளியாய்க்கொண்டுறங்கும் சிசுவோடும்
எங்ஙனம் உறங்கும்
தீக்குத் தன்னைத்
தின்னக்கொடுத்த அவ்வீடு.