Pages

Monday, August 29, 2011

மழலை நிலா..


அமாவாசையன்றும் பட்டுத்தெறிக்கின்றன
பௌர்ணமிச்சிதறல்கள்..
ஜன்னலில் பூத்த
மழலையின் மிழற்றல்களில்..

சோறூட்டவென்று
துணைக்கழைக்கப்பட்ட நிலா...
இடுப்பிலிருக்கும் தன் பிம்பத்தை, தானே ஒப்பு நோக்கி
வெட்கித் தலைகுனிகிறது..

சாட்சிக்கழைக்கப்பட்ட
நட்சத்திரங்களோ,.. சிதறியோடி
மண்ணில் ஒளிந்துகொள்கின்றன,
ஒருவாய்ச்சோற்றுருண்டையிலிருந்து..

தீர்ப்பு சொல்லவந்து
தோற்றுச்சரணடைகின்றன
இசைக்கருவிகள்,
தென்றலெனத் தழுவும்,....
'அம்மா' என்ற மழலைச்சொல்லின் முன்...

டிஸ்கி: இந்தக் கவிதை வல்லமையில் வெளியானது.

Friday, August 19, 2011

சுயமும்..சுதந்திரமும்.

கூண்டுக்கு வெளியே
பெருங்காடொன்று இருக்கும்
என்றெண்ணி,
சுதந்திரமாய் வாழும் கனவில்
தப்பி வந்தது வரிக்குதிரையொன்று..
காடாய்க்கிடந்த
நிலமெல்லாம்
மக்கள் முளைத்துக்கிடப்பதையும்,
மாக்களாய் நடந்துகொள்வதையும் கண்டு
தலைசுற்றியமர்ந்த வரிக்குதிரையிடம்,
தும்பிக்'கையை' நீட்டியது யானையொன்று..
பழக்கதோஷத்தில்...
யானையே
பூனையாய் அடங்கிய இடத்தில்,
அடையாளங்களை இழந்து
கழுதையாய் குதிரையாய் வாழவிழையாமல்,
சுதந்திரமற்ற அடிமைவாழ்வெனினும்
சுயமாய் வாழ்வதே மேலென்றெண்ணி,
கூண்டுக்குள் ஓடி
இறுகத்தாழிட்டுக்கொண்டது வரிக்குதிரை..
சுதந்திரமில்லாத சுயமும்
சுயமில்லாத சுதந்திரமும்
கெக்கலி கொட்டிச்சிரித்துக்கொண்டிருந்தன..


டிஸ்கி: இந்தக்கவிதை வல்லமையின் சுதந்திர தின சிறப்பிதழில் வெளியாகியிருக்கிறது.

Wednesday, August 17, 2011

அறிதுயில்..

                                             

ஆயிரம் முறை சொல்லியனுப்பியும்

இனிப்புடன் வரமறந்த
தந்தையின் மீதான நேற்றைய கோபத்தை
ஒரு கண்ணிலும்; ..
உடன் விளையாட வரமறுத்த
அன்னையின் மீதான இன்றைய கோபத்தை
இன்னொரு கண்ணிலும்
சுமந்துகொண்டு;
கட்டிலிலேறி கவிழ்ந்துகொள்கிறாய்..

என்னுடைய எல்லா
சமாதானமுயற்சிகளையும் புறந்தள்ளிவிடுகிறது….
உன்னுடைய செல்லக்கோப
கன்னஉப்பல்…

அம்மாசித்தாத்தாவின் பஞ்சுமிட்டாய்வண்டி
தூதனுப்பிய மணியோசையும்கூட
உனது பொய்த்தூக்கத்தை
கலைக்கமுடியாமல் வெட்கி;
முகம் மறைத்தோடுகிறது இருளில்..

தாயின் குரலும்
தந்தையின் சீண்டலும் பலனளியாமல்..
ஊர்ந்துவந்த நண்டும் நரியும்கூட
விரல்விட்டு இறங்கியோடிவிடுகின்றன..

இனிப்புப்பெட்டியின் கலகலச்சத்தம் ஏற்படுத்திய
இமைகளுக்குள்ளின் மெல்லிய நடமாட்டத்தை,
அவசரமாய் தலையணையில் முகம்புதைத்து
கைதுசெய்கிறாய்..

கொஞ்சலும் கெஞ்சலும் பயனற்றபொழுதில்;
மிட்டாய்ப்பெட்டி திரும்பக்கொடுக்கப்பட்டுவிடுமென்ற
செல்லமிரட்டலுக்கு உடனே பலனிருக்கிறது!!..
‘தூங்கும் பிள்ளைக்கு காலாடுமே’யென்ற
பல்லாண்டு பழைய அங்கலாய்ப்புக்கு
உடனே பதில்சொல்கிறாய் ‘தற்செயலாய்’ விரலசைத்து..

பொய்த்தூக்கமேயெனினும்
அவ்வழகும் ரசிக்கக்கூடியதேயன்றோ!!!!!..
இதற்காகவென்றேனும், அடிக்கடி ,
அறிதுயில் கொள்ளடா..
என்,
அனந்த பத்மநாபனே………


டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி. ஏற்கனவே அமைதிச்சாரல் தளத்தில் பகிர்ந்திருந்தாலும் ஒரு கணக்குக்காக இங்கேயும்.