Pages

Thursday, April 29, 2010

எதிர்காத்து.

வரதட்சணையா
வாங்கியதெல்லாம்;
வட்டிக்கடைக்கு போயாச்சு.
ஆசைப்பட்டு கொடுத்ததெல்லாம்
ஆடம்பரமா தீர்த்தாச்சு..

மாமனார் வீட்ல
பசை கொஞ்சம் கூடுதல்.
கொஞ்சம்போல வழிச்சுக்க,
வழியென்ன இருக்கு?????...

'ஒன்னோட பொறந்த வீட்ல
பாகப்பிரிவினையாமே??.
ஒம்பங்கையும் வாங்கியா...'

கழுத்தைப்பிடித்து
வெளியே தள்ள;
கதவைத்திறந்தவன் திகைத்தான்.

'வந்தா சொத்தோட வான்னு
விரட்டீட்டாரு எம்புருசன்'
நின்றிருந்தாள் தங்கச்சிக்காரி,
கண்ணைக்கசக்கியபடி.

காற்று எப்போதும்
ஒரே திசையில் வீசுவதில்லை.

Thursday, April 8, 2010

மழை...


சட்டென
ஏதோ ஒர் நிசப்தம்
புரிபடுகிறது...

காற்றுக்கு விடை கொடுத்த
இலைகள்,
மோனத்தவத்தில் ஆழ்ந்து விட்டன போலும்;

நீராவிப்பெருமூச்சுடன்
பெருகும் அருவி,
வாய்க்கால்தேடி பயணிக்கையில்;
சபிக்கப்படுகிறது வெங்கோடை...

பளீரெனச்சிரிக்கும்
மழலையென,
வானம் கண்சிமிட்டுகையில்,
பொக்கைவாய் புன்னகையென,
காற்று வந்து தழுவுகையில்;

எதிர்பாராமல்
மண்ணில் வந்துஇறங்குகிறது..
ஒரு துளி உயிர்.