Pages

Thursday, December 30, 2021

நல்லாச்சி - 21


துருவியைத் தொங்கவிட்டுக் கொண்டு
தன் பாட்டுக்குத்
தேமேயென நின்றிருக்கும் 
ஜேசிபி இயந்திரத்தின் ஊடே புகுந்துசெல்லும் 
பேத்தி சொல்கிறாள்
ஒரு யானையின் துதிக்கையினூடே
கடப்பதையொத்திருக்கிறதென
உப்பக்கம் நிற்கும் நல்லாச்சி
சிரித்துக்கொள்கிறாள்
என்றாவது
ஆசீர்வாதம் வழங்கும் 
ஒரு யானையைக் கண்ணுறும்போது
அவளுக்கு 
இயந்திரத்தின் சாயல் தென்படக்கூடும்
வாரியெடுக்கும் அவ்விரு உறுப்புகளுக்கு மட்டும்
தத்தம் சாயல் குறித்து
கிஞ்சித்தும் சிந்தனை 
என்றுமே வரப்போவதில்லை.

Saturday, December 18, 2021

அவரவர் எல்லை..


எல்லாவற்றையும் மறந்துவிட்டு
புதிதாய் ஆரம்பிக்கலாம் என்கிறீர்கள்
மறப்பதை விட
அத்தனையையும் அழித்து விட முடிந்தால்
அது மிக இனிதாயிருக்கும்
இருப்பினும்
பதிந்த நினைவுகளின் ரணம்
தழும்புகளாய் உறுத்தியபடிதானிருக்கும்
எதையெல்லாம் மறப்பதென்பதையும்
எங்கிருந்து அழிக்கப்பட வேண்டுமென்பதையும்
அறுதி செய்து விட்டு
புத்தம் புதிய வானின் கீழ்
புதுக்கருக்கழியாத பூமியின் மடியில்
புது மலர்களாய்ப் பூக்கலாம்
அது வரை
அவரவர் எல்லை அவரவர்க்கு.

Saturday, December 11, 2021

இசைமணம்..


சலித்துவிட்டதாம் அவனுக்கு
சுச்சு போட்டால் இயங்கும்
இயந்திர மேளதாளம்
அருகிருக்கும் கோலவார் குழலியின்
நெடுநேர விளி கூட
விழவில்லை தோடுடைய செவிகளில்
அலுப்புடன் அமர்ந்திருக்கிறான் பரமன்
நடைபாவாடையென 
உதிர்ந்து பரந்திருக்கும் பன்னீர்ப்பூக்களின் மீது
பைய நடைபயின்று
ஒரு நொடி தாமதிக்கும் பிஞ்சுச்சீரடியாள்
ஒரு பூவெடுத்தூத
மெல்லத்தவழ்கிறது இசைமணம்
நர்த்தனம்புரிய எழுகிறார்கள் அம்மையும் அப்பனும்.

தீர்த்துவிட்டுப் பேசலாம்.


உனது கனிகளை நீ பறிகொடுத்தமைக்கு
நானெப்படிப் பொறுப்பாவேன்
வேலியிட்டுப் பாராட்டிச்சீராட்டி
காத்து வளர்த்தது நீயெனினும்
வாசனை விடு தூதனுப்பி
பிறர் கை வீழ்ந்த
அவற்றைக் கடியாத
உன் பாரபட்சம் 
இதோ பல்லிளித்துவிட்டதே
அகராதியிலில்லாத வார்த்தைகளைக்கூட
சம்மன் அனுப்பி வரவழைத்து
என்னை அர்ச்சிக்கிறாயே
அத்தனை கல்நெஞ்சமா உன்னுடையது
இதோ
கையிலிருக்கும் கவண்கல்லையும்
சாறுபடிந்த கத்தியையும்
கை விட்டு வருகிறேன்
தீர்த்துவிட்டுப் பேசலாம் வா..

Tuesday, December 7, 2021

ஏகாந்தம் இனிது


மலருந்தோறும்
கொய்து கொண்டு போய்விடுகிறாயே சின்னக்குருவியே
உன் பின்னவன் உறும் ஏமாற்றம்
உணர்வாயா நீ
பொறுமையாய் ஊர்ந்து வந்துகொண்டிருக்கும்
இந்த வெயில் புசிக்கவென
ஒன்றிரண்டோ
துழாவித்துழாவி பரிதவிக்கும்
வண்ணத்துப்பூச்சிகளுக்கென சிலவோ
எதுவுமின்றி
கொறித்துச் சிதறடிக்கும் நீ
நானுமொரு தாவரமென
எண்ண விடாது
துளிர்க்குந்தோறும் துடைத்துச்செல்
ஏகாந்தமாயிருப்பேன்.

நினைவுள்ள வரை..


நினைவிலும் கனவிலும் அங்குசத்தைக் கொண்டுள்ள
ஒரு யானையை
அனிச்சைச்செயலாய் துதிக்கையுயர்த்தி
ஆசியளித்தும்
பாகனிடம் சில்லறைகளை
பிறழாதொப்படைத்தும்
கடனேயென வலம் வரும் அதை
அதற்கே உணர்த்துவதற்கென
ஏதும் செய்ய வேண்டியதில்லை
எங்கோ ஓர் ந்யூரான் முடிச்சின்
பாற்பட்டிருக்கும் விதைக்கு
சற்றே நீர் வார்க்கலாம்
மெல்ல நீளத்தொடங்கும் கானகத்தைப்
பற்றிக்கொண்டு
மத்தகம் குலுக்கி அது கிளம்பும் பொழுதில்
கால்களில் அரைபடா வண்ணம்
சற்றே விலகுவோமாக.

Sunday, December 5, 2021

பொறுமை


வயலின் உள்ளங்கையிலொரு
ரேகையைப்போல் 
நெளிந்து கிடக்கிறது
ஒற்றையடிப்பாதை
அழித்து சமனாக்கும் தீர்மானத்துடன்
ஆர்ப்பாட்டமாய் 
பெய்து தோற்கிறது மழை
பல்கிப்பரவி
அமைதியாய் வெல்கிறது புல்வெளி

Monday, November 22, 2021

நல்லாச்சி - 20


வரிகளைத் தொலைத்த பாடலொன்று
வண்டாய் ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது 
நல்லாச்சி மனதில்
ஒன்றுக்கொன்று தொடர்பிலாத வரிகள்
தம்மைத்தாமே பற்றியிழுத்து
ரயில்பெட்டிகளாய்க் கோர்க்க முயன்று
மேலும் சிதறி மூலைக்கொன்றாய் விழுகின்றன
எங்கோ ஒலிக்கும் மாங்குயிலின் கீதம்போல்
அவளைப் பின்தொடர்ந்து கொண்டேயிருக்கிறது அப்பாடல்
தடத்தை மிஞ்ச விட்டுச்சென்ற பாம்பாய்
தன்னை உருக்காட்டி மறையும் அதன்
நுனி பற்றிழுத்து
குடத்திலடைத்து விட ஆவேசமாய் 
முயல்கிறாள் நல்லாச்சி
நொடியில் அதன் பிம்பத்தையள்ளி
இதோவென சேர்ப்பிக்கிறாள் பேத்தி
கை கோர்த்த பாடல் 
கொண்டாடிக்குதூகலிக்கிறது ஆச்சியின் இதழ்களில்
ஆச்சர்யப்படும் பேத்திக்கு
விசிலில் பதிலளிக்கிறாள் நல்லாச்சி
டேக் இட் ஈஸி ஊர்வசியென..

நல்லாச்சி - 19


ப்ப்போ..
கசியும் கண்களை புறங்கையால் சிறையிட்டு
உதடுகளை அழுத்திக்குவித்துச் சொன்னபடி
காய் விடுகிறாள் பேத்தி
எவ்விக்குதித்தும் எட்டாத செம்பருத்திப்பூவிடம்
முக்கிமுக்கி முதுகு வளைத்தும்
முன் நகரவியலாத ஆற்றாமையுடன்
தத்தளிக்கிறது செடி
ஒருவர் முகம் நோக்கி இன்னொருவர்
எத்தனை யுகங்களாய்க் கடந்தனவோ நொடிகள்
ஆற்றாமையும் இயலாமையும் இரு கரைகளாய்
பெருக்கெடுத்தோடுகிறது ஆசைவெள்ளம்
ஒரு தேன்சிட்டோ
மெல்லிய தென்றலோ
கடந்து சென்ற நல்லாச்சியோ
யாரோ ஒருவர்
ஏதோவொன்று
பேத்தியின் கைகளில் தாழ்கிறது பூங்கிளை
பழம் பழம் பழம்...

நல்லாச்சி - 18

ஓடைக் குறுமணல் சோறாய் மின்ன
உருவிய இலைகள் கீரையாய் ஒதுங்க
கிள்ளிய பூக்கள் காயாய் அமைய
நட்சத்திரம் பொரித்து
செங்கமங்கல் குழம்பூற்றி
கழுவித்துடைத்த நிலாத்தட்டில்
உணவூட்டுகிறாள் நல்லாச்சிக்கு
தொட்டும் துளாவியும் கதைகளோடும்
பேத்தி ஊட்ட
கதைகளில் மயங்குகிறாள் நல்லாச்சி
உண்ண மறந்து
தனக்குமோர் கவளமென
கைநீட்டுகின்றன தெய்வங்கள்
கதை கேட்க மறந்து.

நல்லாச்சி - 17

பயிர்பச்சை செழிக்கணும்
கன்றுகாலி பெருகணும்
புயல்மழையே கதியென்றிலாமல்
பருவமழையும் பொழியவேணுமென
வேண்டியுருகுகிறாள் நல்லாச்சி
விஸ்வரூபடெுத்திருக்கும்
சொக்கப்பனையின் முன் கைகூப்பி
ததாஸ்து என்றருளுகிறாள் பேத்தி
ஃபைவ்ஸ்டார் சாக்லெட் 
நாலைந்து படைத்தாயெனில்
அனைத்தும் சித்திக்கும் மகளே என
குறுஞ்சிரிப்புடன் அபயக்கரம் காட்டும்
பேத்தியின் கையில் 
தெரளியும் அப்பமும் பொரியுருண்டையும் திணித்து
வெச்சுக்கடி ஆத்தா எங்கூர் சாக்லெட்டை
எனப்படைக்கிறாள் நல்லாச்சி
சடசடத்துச் சிலிர்க்கும் சொக்கப்பனை
ஆசீர்வதிக்கிறது இருவரையும்
தேவதைகள்
பேத்திகளாகவும் பிறப்பதுண்டு.

Friday, November 5, 2021

நல்லாச்சி - 16

வடை கிடைக்கப்பெறாத காகங்களுக்கென்றே
நிலவில் வடை சுடுகிறாள்
பாட்டியொருத்தி
சோறுண்டவாறே பேத்தி சொல்லும் கதைக்கு
உம் கொட்டிக்கொண்டிருக்கிறாள் நல்லாச்சி
பாவப்பட்ட நரிகளையெலாம்
முகத்தில் விழிக்கத்தோதாய்
தம் முற்றங்களில் தளைத்துவிட்டு
பாடச்சொல்லி
காகங்களிடம் கெஞ்சும் பேராசை மனிதர்களை
அண்டவொட்டாமல்
நட்சத்திரங்களையெறிந்து விரட்டுகிறாளாம் பாட்டி
வானத்தைச்சுட்டி நீளும்
பேத்தியின் விரல்நுனித் திசையில்
பொழிகிறது நட்சத்திரமழை
அள்ளிக்கொள்கிறாள் நல்லாச்சி.

Tuesday, August 24, 2021

நல்லாச்சி - 15


அரக்கியுட்டாத்தான் அடர்த்தியா வளரும்
கூறிய தாத்தா
கிளைகளைக் கழித்துத் தள்ளுகிறார்
ஒட்டடைக்குச்சிகள்போல் சிலவும்
பாப்கட் சிறுமிகள்போல் பலவும்
திட்டுத்திட்டாய்ப் பசுமை பூசிய இரண்டொன்றுமென
வேறு முகம் போர்த்தியிருக்கிறது தோட்டம்
சின்னாளில் அவை பலவாய்க் கிளைக்கும்
பல்கிப் பலன் தருமெனின்
தென்னைக்கும் பனைக்கும் மட்டும்
ஏனிந்த ஓரவஞ்சனையென்று கேட்டு
நல்லாச்சியின் ஒக்கலில் அமர்ந்தவாறு
பூவரசம்பீப்பியை ஊதியபடி செல்கிறாள் பேத்தி
யோசனையிலாழ்கிறார் தாத்தா
அரக்கிவிடாததால் அடர்த்தியிழந்த
வழுக்கைத்தலையைச் சொறிந்தபடி

Wednesday, August 18, 2021

நல்லாச்சி - 14


இரவுணவிற்கு உப்புமாதான்
எனக்கேள்விப்பட்ட கணத்திலிருந்து
வயிற்றுவலி தொடங்கியது பேத்திக்கு
தாத்தாவுக்கோ உப்புசமாம்
வழக்கம்போல் தாத்தாவுடன்
வழக்கமான மருத்துவரிடம் போவதாய்
வழக்கமான பொய்யைச்சொல்லி
வழக்கமான உணவகத்தில்
வழக்கம்போல் புரோட்டாவை விழுங்குகிறார்கள்
வழக்கம்போல் முனகி நடிக்கும் பேத்தியிடம்
நல்லாச்சி நீட்டுகிறாள் 
கசக்கும் கஷாயத்தை
வழக்கமில்லா வழக்கமாக
தாத்தாவுக்கில்லையா என்றா கேட்டீர்கள்
அவர் 
அறிதுயில் கொண்டு அரைஜாமம் ஆயிற்று.

நல்லாச்சி - 13

முல்லை மருதாணி நெல்லியெனப்
பலவுண்டு நல்லாச்சித் தோட்டத்தில்
காடாய் மண்டிய கனகாம்பரங்களுக்கும்
ஊடே பூத்திருக்கும்
டிசம்பர்பூக்களுக்குமிடையே
ஒட்டில் புட்டவித்தாற்போல்
தென்னையும் வாழையுமுண்டெனினும்
பேத்தி காவலிருப்பதென்னவோ
கொடுக்காப்புளி மரத்துக்குத்தான்
பச்சையும் நீலமும் பாரித்த காய்கள்
குங்குமத்தில் குளிக்கும்வரை
அவள்
பார்த்து ரசிக்க கணங்களுண்டு
கைமுறுக்கு அவிழ்ந்தாற்போல்
சுழன்றிறங்கும் அவற்றின் வயிற்றில்
கருமுத்து விளைந்தபோது
அம்மரம் 
ஒரு சரணாலயத்தையொத்திருந்தது
உச்சி நோக்கி நீண்டதொரு கிளையில்
கூட்டையும் இரு நீலமுட்டைகளையும்
கண்டதினத்திலிருந்து
அவற்றுக்கும் காவலானாள் பேத்தி
நல்லாச்சி கூட
அங்கே அனுமதியற்ற எதிரியே.

நல்லாச்சி - 12

சூரியனின் திசையினின்று 
விழிநோக்கு திருப்பாத
சூர்யகாந்திகள் எங்குமுண்டு
இங்கோ..
இந்த சூர்யகாந்தியையே 
எப்பொழுதும் நோக்கியிருக்கும்
முதற்சூரியன் நான்
என் துணைக்கோள் நீதானடியென
கன்னம் வழித்து 
கண்ணேறு கழிக்கிறாள் நல்லாச்சி
எனில் உங்களை விட்டலகலா தாத்தா 
யாரென வினவிய பேத்தியிடம்
'அது ஒரு கெரகம்' என
குறும்புச்சிரிப்புடன் பகன்றாள் சூரியஆச்சி
அசட்டுச்சிரிப்புடன் நழுவுகிறார் தாத்தா.

Friday, August 6, 2021

நல்லாச்சி - 11

"வாசலுக்கு மங்கலமூட்டுவதோடு
பிற உயிரினங்களுக்கும் உணவாகும்"
ஏனென்று கேட்ட பேத்திக்கு
விளக்கியபடி
அரிசி மாக்கோலமிடுகிறாள் நல்லாச்சி
பேத்தியின் சிறு கை அள்ளிய நீரெலாம்
கோலத்தின் வழி இழியக் கண்டு
பதறிய ஆச்சியை
அமர்த்தி நவில்கிறாள் பேத்தி
"எறும்புக்கு விக்கலெடுப்பின் என் செயும்?
ஆகவே நீரும் வைத்தேன்"
ஞே..யென மயங்கிச் சாயும்
ஆச்சியின் முகத்தில்
ஆரேனும் நீர் தெளிப்பீராக.

நல்லாச்சி - 10

எண்ணங்களைத் தடையின்றிப் பகிர
இடுக்கண் வருங்கால் 
தோள்கொடுக்க
சுகதுக்கங்களை சேர்ந்து அனுபவிக்க
அமையும் நட்புகள் 
உறவாய் மலர்வதுண்டு
உறவுகளுக்குள் நட்பு பூப்பதுமுண்டு
இழையும் மூச்சென என்னுடனிருக்கும்
நீயுமென் தோழமையே
என்றுரைத்த நல்லாச்சியை
அதிசயித்த பேத்தி
ஆச்சியின் விளக்கத்தால்
ஆச்சர்யங்கொள்கிறாள்
தோழமையை ஆசீர்வதித்துத் தூவுகிறது
பொன்னந்திச்சாரல்.