Pages

Wednesday, December 26, 2012

வலி மிகுந்த நேரம்....

சுயத்தை தொலைத்த
செயற்கை பூச்சுகளின் பின்னான முகம்
மறந்துதான் போகிறது.

எப்போதும் தயாராய்
சில முகமூடிகள்
மாட்டிக்கொள்ள தோதாய் .
தேர்ந்தெடுக்கும் குழப்பம்
எப்போதும் இருந்ததில்லை .

இருப்புக்கு தகுந்தாற்போல்
நொடிப்பொழுதில் மாறிவிடுகிறது,
பச்சோந்தியைவிட வேகமாக...;
எப்போதும் கிடைப்பவை
மலிவுவிலை புன்னகைகள் மட்டுமே.

சுமந்து திரியும் முகமூடிகள்
கழன்றுகொள்ளும் நேரங்கள்,
வலிமிகுந்ததாகவே இருக்கிறது
எப்போதும்!!!!

பொய்முகங்கள் தேவையில்லா
யாருமில்லா தனிவெளியில்,
கோரமாய் பல்லிளிக்கும் ;
ஒப்பனை கழுவப்பட்ட முகம்.

Monday, October 15, 2012

இடப்பெயர்ச்சி..


இணையத்தில் சுட்ட படம்..
பக்கத்து வீட்டுத் தாத்தா
திரும்பாப்பயணம் புறப்பட்டு விட
சலனமின்றி
இடம் பெயர்ந்தது சாவிக்கொத்து
முன்னுரிமைப்படி..

சாய்வு நாற்காலிக்கு அடுத்த தலைமுறையும்
சொகுசு நாற்காலிக்கு மூன்றாம் தலைமுறையும்
அவசரமாய் அடித்துக்கொண்டு
ஆரவாரமாய் இடம் பெயர
அமைதியாய் நிகழ்ந்ததோர் இடப்பெயர்ச்சி..
துணி மூட்டையுடனும் தட்டுடனும்
திண்ணையில் பாட்டி.

டிஸ்கி: வல்லமையில் வெளியானது.

Wednesday, October 10, 2012

கையறு நிலையில்..

இணையத்தில் சுட்ட படம்..
“எப்போதான் கண் திறந்து 
பார்க்கப்போறியோ?”
அங்கலாய்த்த பக்தனுக்குக்
கூரையைப்பிய்த்துக்கொண்டாவது
உதவிடும் துடிப்பில்
ஓடி வந்த கடவுள்
பேச்சற்று நின்றார்..
பிய்ப்பதற்குப்
பொத்தல் கூரைக்கும் வழியின்றி
வானமே கூரையாய்
உறங்கும்
நடைபாதை வாசியாய்க்கண்டு.

Wednesday, September 26, 2012

வாழ்வியலும் இன்னொன்றும்.. (கவி ஓவியாவில் வெளியானது)

சிக்கல்களை விடுவித்துக்கொண்டே
மேலும்
சிக்கலாக்கிக்கொண்ட பாதையொன்று
புதிர்களைப் புதைத்துக்கொண்டு
காத்திருக்கிறது
ஒரு திடுக்கிடலுக்காய்..

சரியானதென்று நம்பிச்சென்ற
பாதைகளெலாம் கை விட்டு விட
தயக்கத்துடன் கையிலெடுத்தவையோ
முன்னெடுத்துச்செல்கின்றன நம்பிக்கையுடன்.

சுற்றிச்சுற்றி,
ஆரம்பப்புள்ளியிலேயே மறுபடியும் குவிந்து,
இன்னும் இன்னுமென்று
மனதின் விரல்பிடித்து அடைந்த இலக்குகள்
பொக்கிஷமாய்த் தம்முள் வைத்திருந்த
உலைக்குமிழி உற்சாக நொடிகளில்
வாழ்ந்து முடித்துவிட்டு,
இலை மறைத்த வெற்றிக்கனியை
இனம்காணும் சூட்சும ருசி காண
மறுபடியும் புறப்படுகிறேன்
வேட்டைக்கு..

டிஸ்கி: இக்கவிதையை ஆகஸ்ட் 2012 இதழில் வெளியிட்ட கவி ஓவியா இதழுக்கு நன்றி.

Saturday, September 8, 2012

யுத்தவாணம்..

படத்தை இரவல் தந்த இணையத்துக்கு நன்றி
வென்று விட்டதாய்ப்
பேரிகை கொட்டும் தருணங்களில்தான்
ஆரம்பிக்கவே செய்கின்றன
பெருவாரியான யுத்தங்கள்.
வீழ்த்தி விடும் முனைப்புடன்,
கனிந்தெரியும் அகம்பாவத்தில்
கூர் தீட்டப்பட்ட
வாணங்களனைத்தும்
பசி மீறிய நொடிகளில்
படைத்தவனையும் சேர்த்தே புசித்து விட,
சன்னதம் கொண்டாடும் யுத்த குண்டத்தில்
ஆகுதியாய்ப் பெய்த வார்த்தைகளனைத்தும்
பொசுங்கிய சாம்பலினின்று
உயிர்த்தெழுகிறது ஓர் வெள்ளைப்புறா..

டிஸ்கி: ஆகஸ்ட்-2012 இதழில் இக்கவிதையை வெளியிட்ட வடக்கு வாசல் இதழுக்கு நன்றி.

Wednesday, September 5, 2012

துளியில் மலர்ந்த பூக்கள்..

படம் அளித்த இணைய வள்ளலுக்கு நன்றி


மலர்தலும் உதிர்தலும்
இயல்பெனினும்
காலக்கணக்கில் கட்டுண்டு நிகழாமல்
சிறு தூறலிலும்
உடன் மலர்ந்து விடுகின்றன
சாலைச்சோலையில்
பூக்கள்... குடைகளாய்;
தேனருந்தும் வண்டுகள்தாம்
மூக்குடைந்து திரும்புகின்றன
முயற்சியில் தோற்று.

ஊன்றுகோலாகவும் ஒத்தாசை செய்யும்
முதுகு வளைந்த
முதிய தலைமுறையினர் முன்
வெட்கிப் பதுங்கிய
இளைய தலைமுறைகள்
அடைக்கலம் தேடுகின்றன
கைப்பைகளுக்குள்,
மூன்று சாண் உடம்பை
ஒரு சாணாய்க் குறுக்கியபடி.

ஆரவாரத்துடன் நாட்டு வளம் காண
பாய்ந்து வந்த நொடியில்
சரேலென்று பறந்த
கறுப்புக்கொடிகள் கண்டு
திரும்பி விட எத்தனித்தாலும்
குடை மடக்கி உடல் நனைத்து
நா நீட்டி மழை ருசித்த
ஈர மனதை மேலும் குளிர்விக்கத்
திரும்பி வருகிறான்
வருண தேவன்.

டிஸ்கி : வல்லமையில் எழுதுனதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்.

Wednesday, August 15, 2012

கனவு சாம்ராஜ்யத்தில்..


இணையத்தில் சுட்ட படம்
அனைவரும் சுபிட்சமாக வாழ்ந்தனர்
எனது சாம்ராஜ்யத்தில்.

பசிப்பிணி முற்றாய் அகன்றதனதால்
கழுவிக்கவிழ்த்து விட்ட
மணிமேகலையின் அட்சயபாத்திரம்
சிலந்திகளின் உறைவிடமாகிவிட,
சுமையற்ற கல்வியாலயங்களில்
குடி புகுந்த சரஸ்வதி
நிரந்தரக்கொலுவீற்றிருந்தாள்
சிறார்களின் புன்னகைகளில்..

பேராசையுடனலைந்த
வரதட்சணைப்பேயின் தலை
சுக்கு நூறாகச்சிதறி விட
பெண் சிசுக்களுக்கென்று மட்டும்
மடி சுரந்த
எருக்கிலமும் கள்ளியும்
அடிமாடுகளாய்ப்போய்க்கொண்டிருந்தன
அடுப்படியில் பலியிடப்படுவதற்கென்று..

கேட்டுப்பெறாமல்
தானாய்க்கிடைத்த சுதந்திரக்காற்றில்
கொல்லைப்புற மருதாணியும்
முற்றத்துத் துளசியும் வாசம் பரப்பி வர
அனைவரும் சுபிட்சமாக வாழ்ந்து கொண்டிருந்தனர்
எனது கனவு சாம்ராஜ்யத்தில்..

டிஸ்கி: வல்லமையின் சுதந்திர தினச் சிறப்பிதழில் எழுதியதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.

அனைவருக்கும் இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்

Sunday, July 15, 2012

நட்ட ஈடு

படம் தந்த இணையத்திற்கு நன்றி
பொருள் வழிப்பிரிந்ததினால்
சேர்ந்து களிக்காமல்
மகன் கணக்கில்
இளமையில் எழுதிய நட்டத்திற்கெல்லாம்
ஈடு செய்து கொண்டிருக்கிறார்
முதுமையில்,
பேரனுடன் விளையாடும் தாத்தா.
மேலும் கடனாய்
முத்தங்களை வாங்கியபடி.
லேசான மனங்களைப்போல்
உயரே பறக்கிறது காற்றாடி
வாலை வீசி... வீசி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.

Friday, July 6, 2012

மந்திரச்சொல்..


இணையத்தில் சுட்ட படம்..
தாள முடியாமற் போகிறது
உனதன்பைச்
சில சமயங்களில்..
மெல்லிய நீரோடையாய்ச் சலசலக்குமது
காட்டாறாய்ப் பொங்கிப் பிரவகிக்கும்போது
மூச்சுத்திணறி நிற்கும் பொழுதுகளில்
அருவியாய்ப்பொழிந்து
உருட்டிச்செல்கிறாய் என்னை..
பூனைப்பாதம் வைத்துப் பின் வந்து
மெல்லக் கண்பொத்தி
கன்னம் கடித்த தருணங்களில்
சீறிச்சினந்ததைப் பொருட்படுத்தாமல்
சில்லறையாய்ச் சிதற விடும் சிரிப்பால்
தண்ணீர் பட்ட பொங்கிய பாலாய்
அமிழ்த்தி விடுகிறாய் என் மனதை..
சுமக்க இயலாமல்
எங்கேனும் எவரிடமேனும்
இறக்கி வைக்க முயலுந்தோறும்
பேரன்பாய்ப் பல்கிப்பெருகுவதும்
ஓராயிரம் வலிகளையும்,
சுமைகள் தந்த காயங்களையும்
துடைத்துப்போடும் மாமருந்தாய்
இருப்பதுவும்
அன்பெனும் மந்திரச்சொல்லுக்கே சாத்தியமென்று
என்றுமே நிரூபிக்கிறாய்
என் தேவதையே..
என் வானிற் பூக்கச்செய்த வானவிற்களின் மூலம்..

டிஸ்கி: வல்லமையில் எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்..

Friday, June 29, 2012

இன்னும் தீருதிலையே..


இணையத்தில் சுட்ட கிளி..
தலையைத்தலையை
ஆட்டிக்கொண்டு உட்காந்திருக்கிறது
அந்தப்பறவை
தன்முன் இறைந்து கிடக்கும்
கேள்விகளைக்கொறித்தபடி..

எதிர்காலக்கேள்விகளை இறைப்பவர்க்கு
இறந்தகாலக்கேள்விகளைச் சாமர்த்தியமாய்ப் பதிலளித்து
கேள்விக்குறிகள் நிரம்பிய
தன் நிகழ்காலச்சிறையில்
முடங்கிக்கொள்ளும் அப்பறவை
இரண்டு நிமிடச் சுதந்திரக்காற்றில்
சிறகு விரித்துப் பறக்கிறது விர்ர்ர்ரென,

புதிதாய் முளைத்திருந்த
இறகுகளிலிருந்து சிதறி மிதக்கின்றன
கேள்விகள்
காற்றுவெளியெங்கும் எண்ணிலடங்காதவையாய்..
இறுக மூடியிருக்கும் என் கைகளில்
இன்னும் மீதமிருக்கும்
கேள்விகளைக் கேலி செய்தபடி..

டிஸ்கி: ஜூன் 15-30 அன்று வெளியான இன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது.

Wednesday, June 27, 2012

தீராத விளையாட்டுப்பிள்ளை..


இணையத்தில் பிடித்து வந்த காற்று..
சிறைப்படும்
ஒவ்வொரு தருணங்களிலும்
குதித்துக் கூத்தாடுகிறது காற்று
குழந்தைகள் கைகளில்
பலூன்களாய்..

ஊழிக்கூத்தாடியதும்
ஊரையே புரட்டிப்போட்டதும்
வேறெதுவோ என்று மறுதலித்து விட்டு
கட்டிச்சமர்த்தாய்ப்
புல்லாங்குழற்சிறுவன் பின்
ஆட்டுக்குட்டியென வந்த தென்றல்

பரிந்தூட்டும் தாயென
வியர்த்த முகங்கள் துடைத்தபின்
கலைத்து விளையாடுகிறது மேகங்களை
தீராத விளையாட்டுப்பிள்ளையாய்..

டிஸ்கி: வல்லமையில் எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.

Wednesday, June 13, 2012

உருக்கொண்ட எண்ணங்கள்..

இணையத்தில் சுட்ட படம்..
தினம் வந்து கொண்டிருந்த
கனவுப்புலியொன்று
நனவில் வந்தது ஓர் நாளில்.

மூளைக்கனுப்பிய
நியூரான் சமிக்ஞைகள்
தொடர்பில் இல்லையென்று திரும்பி வந்து விட
திகைத்து மூச்சடைத்துத்
தடுமாறி நின்ற எனை நோக்கி
மெல்லக் கொட்டாவி விட்டபடி
திரும்பிப் படுத்துக் கொண்டது,
வாலசைவில்
தன் இருப்பைத் தெரிவித்தபடியே
தன் கட்டுக்குள் பிறரை வைக்க
நன்றாகக் கற்றிருந்த அந்தப்புலி.

எங்கணும் எதிலும் வாலின் நாட்டியத்தரிசனமளித்தும்
அற்ற பொழுதுகளில்
கூர் பல்லால் ஆசீர்வதித்தும்
என் பொழுதுகளை ஆக்கிரமித்திருந்த ஓர் போதில்
பயம் கொன்று திரும்பி
அதன் கண்களைச் சந்தித்தேன்.
பிரபஞ்சப் பேரொளி சுடர் விட்ட அதன் கண்களில்
கருணையின் தரிசனமும் தாண்டவமாட
சுருங்கிய கோடுகள் புள்ளிகளாயின.

உண்மையுரு எதுவென்று மயங்கி நின்ற
என்னிடம்,
‘உன் எண்ணங்கள் கொள்ளும் வடிவம்தானடி சகியே நான்,
திண்ணமாய் எதிர் கொள் மலைக்காமல்,
புலியோ,.. புள்ளிமானோ எதுவுமே நீ வளர்ப்பதுதான்’ என்றுரைத்து,
இளந்துளிர்க் கொம்புகளை
மெல்லக்குலுக்கியபடி
அசை போட ஆரம்பித்தது எண்ணப்புற்களை..


டிஸ்கி: கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.

Wednesday, May 30, 2012

அந்த இரவில்..

இணையத்தில் சுட்ட படம்..
மணிக்கொருதரம் உற்று நோக்குகிறேன்
ஆழ்ந்துறங்கும் அந்த முகத்தை.
‘மூச்சு சீராக வருகிறது’.. எனக்கும்.
கதகதப்பான கை தேடிப்பற்றிக்கொள்கிறேன்
நடை பழகச்சொல்லித்தந்த
அந்தச் சுட்டு விரலை.
உடல் புரளும் சிறு சலனத்திற்கும்
குடல் புரண்டுப் பதறியெழுமெனக்குப்
பரிசாய்த்தருகிறார்..
வாஞ்சையுடன்
ஒரு தலை கோதலை,
என் தகப்பன்..
நண்பனின் தந்தைக்கு
இறுதியாய் விடை கொடுத்து
நான் வீடேகிய அந்த இரவில்..

டிஸ்கி: வல்லமையில் எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.

Thursday, May 3, 2012

சமர்க்களம்..


(இணையத்தில் சுட்ட படம்)
வீடெங்கும்
ஒழுங்கற்றிருப்பதாக நினைத்து
அடுக்கிட முனையும் போதுதான்
பரபரக்க ஆரம்பிக்கிறது அதுவும்.
'நானும்..நானும்..' என்றபடிப் பாய்ந்தோடி வந்து
ஒழுங்குபடுத்திடுவதாய் எண்ணிக்
கலைத்து விடுகிறது
பிஞ்சு விரல்களால்..

குழந்தையின் இடுப்பிலேறிக்கொண்ட
குழந்தைப்பொம்மையை நோக்கியபடி
ஒவ்வொரு பொம்மையும்
விடை பெற்றுச் சென்று கொண்டிருக்கின்றன
சற்றே பொறாமையுடனும்
மறுபடியும் விளையாட வருவதாய்
வாக்குறுதிகளுடனும்

குதிரைச்சவாரி செய்ய நேர்ந்த யானையும்
வண்டியிலேறிய ஓடமும்
முன்வினைத்தவத்தால்
தெய்வஸ்பரிசம் பெற்றுப்
புனிதம் பெற்ற சமர்க்களத்தை
ஒழுங்குபடுத்தியதாய் நினைத்து
ஒதுக்கி நிமிர்ந்த பின்னர்
அழகாகவே இருக்கின்றன.
மறுபடியும் இறைந்து கிடக்கும் பொம்மைகளும்
களைத்துறங்கும் குழந்தையும்.

டிஸ்கி: வல்லமையில் எழுதுனதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்..

Friday, April 20, 2012

பரஸ்பரம்..


அலிபாகிலிருந்து சுட்டுட்டு வந்தது..
மதுபானக் கடையினின்றும்
கசிந்த கோடி சூரிய ஒளிவெள்ளம்
குளிப்பாட்டி விட்டது
அருகிருக்கும் கோவிலையும்,
கொஞ்சம்..
போனால் போகிறதென்று.

இருண்டிருந்த கோயிலில்
நிவேதனத்துக்கும் வழியின்றி,
வெகு நாட்களாய்ச்
சோர்ந்தமர்ந்திருந்த கடவுள்,
நிதானம் தப்பிய நிலையிலேனும்
எவரேனும் வருவரோவென்று
விழி பூத்துக் காத்திருக்கிறார்
நம்பிக்கையுடன்..
பரஸ்பரம்
குறைகளைச் சொல்லியழ..


டிஸ்கி: வல்லமையில் எழுதுனதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்..

Saturday, March 31, 2012

வேரிலும் பூக்கலாம் வசந்தங்கள்..

படம் இணையத்தில் சுட்டது :-)
பெருவெளியெங்கும் பரந்து விரிந்திருந்த
கூட்டுக்குடும்ப விழுதுகள்
அற்றும் இற்றும் போன பின்
தனிமை கொன்று கொண்டிருக்கும்
அந்த ஒற்றை மரத்தில்
மிச்சமிருக்கிறது பசுமை.. இன்னும்,
மனித நேயத்தைப் போலவே.

சென்றவர்களெல்லாம்
மீண்டும் வரக்கூடுமென்ற
மீதமிருந்த நம்பிக்கையுடன்
ஆகாயத்துடன் உரையாடியபடி
மேகங்களை எதிர் நோக்கும் பொழுதுகளிலும்
ஊமையாகி விடாமல் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது
பறவைகளின் தாலாட்டுக்குரல்,
இன்னும் வெட்டப்படாத கிளைகளில்.

தனிமைக்கடத்தியாய்
ஏகாந்தம் கலைத்த தென்றலோ
வனமெங்கும் பூச்சொரிகிறது
ஏக்கம் சுமந்த வேர்களில்..
கானல் நீருக்காய்க் காத்திருந்த ஏக்கத்தில்
வேரடி வசந்தத்தை மறந்ததையெண்ணி
நெகிழ்ந்து சிரிக்கிறது
ஒற்றை மரம்.
டிஸ்கி: வல்லமையில் எழுதுனதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்.

Tuesday, March 20, 2012

பிழைத்துக் கிடக்கிறோம்..

என்னோட காமிராவுக்கு நன்றி சொல்லிக்கிறேன்
மனிதம் விற்று நடத்திய
சுயநல வியாபாரத்தில்
மிஞ்சியவை
மனிதனின் கணக்கில் லாபமாகவும்
இயற்கையின் கணக்கில் நட்டமாகவும்
வரவு வைக்கப்பட்டு விட.

கதிர்வீச்சு அழித்திட்ட
எங்கள் குழந்தைகளின் நினைவுகளைச்
சுமந்து கொண்டு..
சோலைகளிலும் வீட்டு முற்றங்களிலும்
விட்டு விடுதலையாய்த்திரிந்த
நாட்களை அசை போட்டபடி
அலைந்து திரிகின்றோம் அங்குமிங்கும்
பகடைகளாய்,
நீங்கள் ஆடும் சதுரங்கத்தில்..

சொந்த மண்ணிலேயே அகதிகளான
எங்கள் அபயக்குரல்கள்
எதிரொலிக்க வழியின்றி
என் அலகினுள்ளேயே
உங்கள் செவிகளை எட்டாவண்ணம்.
உறைந்து போய் விட

எங்களுக்கான வாழ்வாதாரங்கள்
கலைக்கப்பட்டு விட்ட பின்னும்
பிழைத்துக் கிடக்கிறோம்
ஒரு பிடி உணவிலும் ஒரு துளித் தண்ணீரிலும்
பச்சையம் மறந்த
இரும்புக்கிளைகளிலுமாக..

டிஸ்கி: குருவிகள் தினத்திற்காக வல்லமையில் எழுதுனதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்.


Thursday, February 2, 2012

வாசனையாய் ஒரு வானவில்..


படம் எடுத்த என்னோட காமிராவுக்கு நன்றி :-)
உதிரா இலைகளுடனும் அசையா மரங்களுடனும்
தானும் சோகத்தில் கலந்து கொண்ட
முதிராப் பூக்களை
நலம் விசாரிக்க வந்த பட்டாம்பூச்சி
வண்ணங்களையெல்லாம் உதிர்த்து நின்றது
குழந்தைகள் விளையாடாதிருந்த
பூங்காவில்..

சிறு நடை போட்டு வந்த
பிஞ்சுக்கூட்டத்தின்
விரல் பிடித்து வந்த தென்றல்,
கூத்தாடிக் கூத்தாடி உதிர்த்த இலைகளில்
ஒட்டிக் கொண்ட உற்சாக வர்ணங்களில்
புரண்டெழுந்த பூக்களைத்
தூரிகையாக்கித்
தீற்றிப் போகிறது வானவில்லை
பட்டாம்பூச்சியின் இறகுகளில்.

பிரபஞ்சமெங்கும் குளித்தெழுகிறது
வானவில்லின் நறுமணத்தில்.

டிஸ்கி: வல்லமையில் எழுதுனதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன் :-)


Monday, January 9, 2012

விடுதலையைச் சுவாசித்தபடி..


படம் கொடுத்த இணையத்துக்கு நன்றி..
என் ஒற்றைச் சொல்லொன்று
உரசிப் பார்த்ததால்
கொப்பளித்துத் துப்பிய
உன் ஆழ்மனக் கசடுகளையெல்லாம்
இதழோரம் கசியவிட்ட
தேய்பிறைப் புன்னகை மூலம்;
கழுவிச் சுத்தப் படுத்த முயன்று,
இன்னும் அழுக்காகி நிற்கிறாய்.
மதர்ப்புடன் விளையாடிக் கொண்டிருக்கும்
உன் பேதமை எழுப்பிய
அவநம்பிக்கை அலைகளில்
கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கலந்து
காணாமலே போய்க்கொண்டிருக்கிறாய் நீ
ஆட்டத்திலிருந்து
நீக்கி விட்டதை அறிந்து கொள்ளாமலேயே..
உன் மனப்பூட்டைத்
திறந்த சாவி
இப்போதேனும் கிடைத்ததேயென்ற
பூரிப்புடன்
அகல விரித்த என் கைகளில்
நிரம்பிய.. புத்தம் புதியதோர் உலகத்தின்
நிர்மலமான நீல வானில்
இறக்கையற்றுப் பறக்கிறோம்
நானும்
என் தக்கை மனசும்,
விடுதலையைச் சுவாசித்தபடி..


டிஸ்கி: வல்லமையில் எழுதியதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்..