Pages

Tuesday, November 22, 2016

ஒவ்வொரு முறையும்.. (நவீன விருட்சம் 100ஆவது இதழில் வெளியானது)



தொலைபேசி, கைபேசி
குறுஞ்செய்திகளின் வழி
பெரும்பாலும் அகாலங்களிலேயே நுழையும்
அமங்கலச்செய்திகள்
பெறுநரின் பதற்றத்தை உணர்வதேயில்லை
சிசுவோ வயதான சருகோ
யாரேனும் உதிர்ந்த சேதியைச்சுமந்து
அழையாவிருந்தாளியாய் நுழைந்து விடுகின்றன

தந்திக்கிணையாக
பதட்டமுண்டாக்குவதில்லையெனினும்
சற்றே இதயத்துடிப்பைக் கூட்டிக்குறைக்கும்
அகால அழைப்புகள் ஒலித்து முடியுமுன்
வயதான உறவுகளத்தனையையும்
வரிசையில் நிறுத்திக் கலங்கும் மனதில்
எதிர்பார்த்த சேதி இல்லாத
நிம்மதி படரும் அதே கணத்தில்
சேதியொன்றும் வாரா
ஏமாற்றமும் முளைப்பது விசித்திரமான ஒன்றுதான்

சிறு செடிகளையும் பழமரங்களையும்
கசங்கிய இதயத்துடன் வழியனுப்பிவிட்டு
தன் முறைக்காய்க் காத்திருக்கும் பட்டமரங்கள் நடுவே
ஒவ்வொரு விடுமுறை விஜயங்களின்போதும்
"கடைசி முறையாய் உன் கையால் கங்காதீர்த்தம் கொடு'  எனக்கேட்டபடி
இருபது வருடங்களுக்கு மேலும்
படுத்த படுக்கையாக உயிரோடிருந்த
நல்லம்மாச்சியின் மூச்சு நின்ற தினத்தன்று
என் கைபேசியும் உயிர் விட்டிருந்தது.
அதன்பின் வந்த நாட்களில்
கலவரமூட்டும்படி
எப்போதும் அது ஒலித்ததேயில்லை.


வால்: சமீபத்தில் தனது நூறாவது இதழை வெளியிட்டிருக்கும் நவீன விருட்சம் மேலும் சிறக்க வாழ்த்துகளும் கவிதையை  வெளியிட்ட அவ்விதழுக்கு நன்றியும்.

Wednesday, October 26, 2016

மெல்லென நகரும் சாலை

சீரான இரத்த ஓட்டம் போல்
ஓடிக் கொண்டிருந்த வாகனங்கள்
காவலர் தன் பணி செய்யத்தொடங்கிய கணத்திலிருந்து
முடிச்சிட்டுக்கொண்ட நாளங்களில்
தேங்கத்தொடங்கியதும்
உறுமீன் வரும் வரை வாடியிருந்த ஒருத்தி
மல்லிகைப்பூ விற்கத்தொடங்குகிறாள்
அவள் முடிக்கற்றைகளை அணிசெய்த சாரல் துளிகள்
சிறுவைரங்களையொத்திருப்பதை அவளறியாள்
இதோ இச்சாலையோரத்தில் முளைத்திருக்கும்
பூ நாற்றுப் பண்ணைச்செடிகள்
வானவில்லை கரைத்துக்குடித்து விட்டு
அத்தனை வண்ணங்களிலும் பூத்திருக்கின்றன.
புற்றீசல்களாய்ப் புகுந்து புறப்பட்டு
தத்தம் வயிற்றுப்பிழைப்பிற்கு
வழி தேடிக்கொண்டிருக்கும் சாலையோர வியாபாரிகளின்
கண்களிலும் பிரதிபலிக்கின்றன
பண்டிகைக்கால தேவைகள்
என்ன அவசரம்?
மெதுவாய்த்தான் நகரட்டுமே இப்போக்குவரத்து.

Monday, October 17, 2016

கரையும் துளி


கோபம் ஏற்படுத்தும்போது
விலகி நடக்கவும்
பிரியத்தைக்கொட்டும்போது
ஏந்திக்கொள்ளவும்
தனிமைத்தவத்தில்
நிச்சலத்துடனிருக்கவும்
மகிழ்வில் ஆர்ப்பரிக்கவும்
பிரிவேற்படும்போது சகித்துக்கொள்ளவுமென
எல்லாம் பழகிக்கொண்டாயிற்று
ஆயினும்,
ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அசந்தர்ப்பமாய்
துளிர் விடும் கண்ணீரை
என்ன செய்வதென்றுதான்
இன்னும் பிடிபடவில்லை
போகட்டுமென அதில் கரைந்து விடுவதைத்தவிர..

Wednesday, June 1, 2016

விடுமுறைகளுக்கென..

வீட்டுக்குழாயில் வந்து கொண்டிருக்கும் தண்ணீர்
எந்நிமிடத்திலும் நின்றுவிடக்கூடும்
அதற்குள்
துவைக்க
துலக்க
பெருக்கி மெழுகவென  காத்திருக்கும் வேலைகளோடு
அவர்களுக்குரிய கடமைகள் நிறைவேற்றப்படவென
காத்திருக்கின்றன குழந்தைகளும்

சிணுங்கல்களையும் வேண்டுதல்களையும்
சிரத்தையுடன் நிறைவேற்றியபடி
அடுத்து வரும் நொடிகளைத்தின்னும்
வேலைகளின்
பரபரப்போடு நானும்..

ஒத்தாசை இல்லையெனினும் பாதகமில்லை
செய்தித்தாள் கையிறக்கி விட்டு
பரிமாறிக்கொள் உணவை
அன்பு மனைவி அருகிருந்து ஊட்டுவதை
விடுமுறைகளில் வைத்துக்கொள்ளலாம்.

Tuesday, May 24, 2016

எவ்வரையில்..

ஒரு தாய்ப்பறவைக்கேயுரிய லாவகத்துடன்
ஒவ்வொரு குச்சியாக உருவி
கூட்டைக்கலைத்துக்கொண்டிருப்பவன்
அதே லாவகத்துடன் முட்டைகளையும்
சட்டைப்பையில் பத்திரப்படுத்திக்கொள்கிறான்
மாலையில் கூடு திரும்பும் பறவைகள்
தேடித் தட்டழியப் போவதைப்பற்றி
அவனுக்கென்ன கவலை..
காக்கைக்கூட்டில் முட்டையிடும் குயிலிடமிருந்து
கள்ளத்தனம் கற்றிருந்தால்
கண்மறைவாய்க் கூடு கட்டியிருந்திருக்கலாமென்று
சுள்ளிகளை மறுபடியும் சேகரிக்கும் இப்பறவைகளுக்கு
என்றேனும் தோன்றக்கூடும்
அதுவரை
கலைத்தலும் உருவாக்குதலும் பொருட்டே
உருண்டு கொண்டிருக்கும் அவ்வுலகம்.

Thursday, May 5, 2016

பட்டாம்பூச்சியும் நீலியும்..

படக்கொடையளித்த இணையத்திற்கு நன்றி
சிறு நகரத்தின் பின்னிரவையொத்த
பெரு நகரத்தின் முன்னிரவில்
தொலைக்காட்சித்தொடர்களின்
விசும்பல் ஓசைக்குள்
அமுங்கிப்போன அக்கதறல் வழக்கம்போல்
அக்குடிசைக்குள்ளேயே அடங்கிப்போனது

மீதமிருந்த ஒன்றிரண்டு ரூபாய் நோட்டுகளைக்
குடிகாரக்கணவனிடமிருந்து
காத்திடும் முயற்சியில்
தூக்கி வீசப்பட்டிருந்தவளின்
தலைக்காயத்திலிருந்து தெறித்த
ஒவ்வொரு துளியையும்
பட்டாம்பூச்சிகளைச் சுமந்து வந்திருந்தவளுக்கு
கதண்டுகளைப் பரிசளித்த
கையாலாகாச்சமூகத்தின் முன்
கேள்விக்குறியாய் விதைத்துக்கொண்டிருந்தாள்

கரைந்து கொண்டிருந்த அவனது பிரியத்தின்
கடைசி நூலிழை
இற்று அறுந்த எக்கணத்திலிருந்தோ
தனது பட்டாம்பூச்சிகளைக்
கூண்டிலடைத்து வாழப் பழகியிருந்த பின்னும்
உச்சந்தலையில் ஆணியறையப்பெற்ற
அந்த நீலி
ரத்தப்பழி தீர்க்க என்றேனும் வருவாளென
காத்திருக்கின்றன பட்டாம்பூச்சிகள்
கூண்டுக்குள் நாட்களை எண்ணியபடி.

Saturday, February 27, 2016

நல்லாச்சி - 5

படக்கொடையளித்த இணையத்திற்கு நன்றி
சாப்பிடவில்லையெனில் 
இரண்டு கண்ணன் தூக்கிச்சென்று விடுவானென்ற
நல்லாச்சியின் மிரட்டலுக்கு
பேத்தி எண்கள் கற்றுக்கொள்ளும் வரை மட்டுமே பலனிருந்தது

தூக்கிக்கொள்ளச்சொல்லி உத்தரவிடும் பேத்திக்கு
செவி சாய்க்கும் தாத்தா
சாப்பிடச்சொல்லி அவள்
விழிகளால் மிரட்டும்போது மட்டும்
இப்பொழுதெல்லாம்
விலாங்காய் நழுவி விடுகிறார்
தான்தான் அந்த இரண்டு கண்ணன்
என்பதை
பேத்தி கண்டு கொண்ட தினத்திலிருந்து.
************************
பேத்திக்காகப் பத்திரப்படுத்தியிருந்த
கொய்யாப்பழங்களை
அணில் கவர்ந்து சென்ற
சோகத்தில் இருந்தாள் நல்லாச்சி
எங்கெங்கு தேடியும்
அணிலைக் காண முடியவில்லையென
அதை விடப் பெருஞ்சோகத்தில்
ஆழ்ந்திருந்தாள் பேத்தி
பழத்தை உண்ண மனம் வராமல்
வருந்தி அமர்ந்திருந்தது
கிளைகளுக்குள் மறைந்திருந்த அணில்.
********************************
கலகலக்கும் நகரத்து தீபாவளியை விட்டு
கிராமம் நோக்கி இம்முறை
பேத்தி பயணப்பட்டதற்கு
அதிரசத்தையும் கைமுறுக்கையும் தவிர
நல்லாச்சி வீட்டில் பொரிந்திருந்த
கோழிக்குஞ்சுகளும் 
தோட்டத்து மரத்தில் குடிவந்திருக்கும்
கிளிகளும் காரணமென்பதை
அவ்விருவரும் மட்டுமே அறிவர்.

வால்: வெளியிட்ட அதீதம் மின்னிதழுக்கு நன்றி.