சாப்பிடவில்லையெனில்
இரண்டு கண்ணன் தூக்கிச்சென்று விடுவானென்ற
நல்லாச்சியின் மிரட்டலுக்கு
பேத்தி எண்கள் கற்றுக்கொள்ளும் வரை மட்டுமே பலனிருந்தது
தூக்கிக்கொள்ளச்சொல்லி உத்தரவிடும் பேத்திக்கு
செவி சாய்க்கும் தாத்தா
சாப்பிடச்சொல்லி அவள்
விழிகளால் மிரட்டும்போது மட்டும்
இப்பொழுதெல்லாம்
விலாங்காய் நழுவி விடுகிறார்
தான்தான் அந்த இரண்டு கண்ணன்
என்பதை
பேத்தி கண்டு கொண்ட தினத்திலிருந்து.
************************
பேத்திக்காகப் பத்திரப்படுத்தியிருந்த
கொய்யாப்பழங்களை
அணில் கவர்ந்து சென்ற
சோகத்தில் இருந்தாள் நல்லாச்சி
எங்கெங்கு தேடியும்
அணிலைக் காண முடியவில்லையென
அதை விடப் பெருஞ்சோகத்தில்
ஆழ்ந்திருந்தாள் பேத்தி
பழத்தை உண்ண மனம் வராமல்
வருந்தி அமர்ந்திருந்தது
கிளைகளுக்குள் மறைந்திருந்த அணில்.
********************************
கலகலக்கும் நகரத்து தீபாவளியை விட்டு
கிராமம் நோக்கி இம்முறை
பேத்தி பயணப்பட்டதற்கு
அதிரசத்தையும் கைமுறுக்கையும் தவிர
நல்லாச்சி வீட்டில் பொரிந்திருந்த
கோழிக்குஞ்சுகளும்
தோட்டத்து மரத்தில் குடிவந்திருக்கும்
கிளிகளும் காரணமென்பதை
அவ்விருவரும் மட்டுமே அறிவர்.
வால்: வெளியிட்ட அதீதம் மின்னிதழுக்கு நன்றி.
4 comments:
அற்புதம்
மிகக் குறிப்பாக பேத்தி பயணக் காரணம்
சொல்லும் கடைசிக் கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
அன்பு சாந்தி, நல்லாச்சி கவிதை மிக அழகு.
பட்டணத்திலிருந்து கிராமத்துக்குப் புறப்படச் சொன்ன காரணம்
வெகு அருமை. அடுத்த தடவை என்ன சொல்வாரோ நல்லாச்சி.
அழகான கவிதைகள். ஆம், கடைசிக் கவிதை எனக்கும் மிகப் பிடித்தது.
தொடருங்கள்..
வாங்க ரமணி.
வல்லிம்மா
ராமலஷ்மி..
அனைவருக்கும் மிக்க நன்றி.
Post a Comment