Pages

Monday, February 7, 2022

நல்லாச்சி - 25


பாப்பா பேருக்கொரு
சீட்டெடுத்துப்போடு ஆத்தா மீனாச்சி
சீட்டை உருவியெறிந்துவிட்டு
நெல்மணிகள் அணைக்காத பசி நெருப்புடன்
கூண்டுக்குள் திரும்பி முடங்குகிறது பசுங்கிளி
சோகமாகிறாள் நல்லாச்சி மடியமர்ந்திருக்கும் பேத்தி
நெல்மணிகளை ஈந்துவிட்டு
காற்றைப் புசிப்பவன்
சீட்டுகளை மறுபடியும் அடுக்கத்துவங்குகிறான்
மீனாச்சிக்கு விடுதலையெப்போ
அவ சுதந்திரமாய்ப் பறப்பதுதானெப்போ
வேண்டி வருந்தும் பேத்தியை ஏறிட்டு
அடித்தொண்டையில் அழுகிறது கிளி
கதவென்னவோ திறந்துதானிருக்கிறது.

Thursday, February 3, 2022

நல்லாச்சி - 24


அரிசி மரம் காண 
ஆசை கொண்ட பேத்திக்கு
நெல் விளையும் வயலைக் காட்டுகிறாள் நல்லாச்சி
கூடவே கற்பிக்கிறாள்
அது
அரிசி மரமல்ல செடியுமல்ல
நெற்பயிரென இயம்புவதே சரியென
ஒவ்வொரு நெல்லாய்த் தோலுரித்து
அரிசியெடுக்கும் பணிக்கஷ்டத்திற்காய்ப் 
பரிதாபப்படும் பேத்திக்கு
ஆதியோடந்தமாய் விளக்கிச்சொல்லி
கிளைக்கேள்விகளுக்கெல்லாம்
ஊக்கப்படுத்தி
நா வறண்டு நிற்கும் நல்லாச்சியை நோக்கிப்
பாய்ந்து வருகிறது இன்னொரு கேள்விக்கணை
பச்சரிசிப் பயிரெது
புழுங்கலரிசிப் பயிரெது
காட்டுக இவ்வயலில் என..