Pages

Thursday, March 31, 2022

நல்லாச்சி - 29


பொலிந்து நிற்கிறது
பொற்கொன்றை மரம்
தொட்டடுத்தொரு மஞ்சாடி மரம்
பொன்னாய்ப் பாவித்து பூவை
நிறுத்து விளையாடுகிறாள் பேத்தி
கண்ணாடித்துண்டுகளே வைரவைடூரியங்கள்
கொற்கை முத்துகளுக்கோ யாதொரு பஞ்சமுமில்லை
போணி செய்ய வரும் நல்லாச்சி
பேத்தியின் கோலங்கண்டு
புன்னகை உறைய நிற்கிறாள்
இழுகிய மகரந்தப்பொற்பொடியால் வதனம் துலங்க
செவியணிந்த செம்பருத்தி மொட்டுகள்
லோலாக்காய் ஆட
செம்பூவிதழ் நுதலில் செந்தூரமாய்த் துலங்க
அமர்ந்திருக்கிறாள்
குளிர்ந்த கொற்றவையாய் பேத்தி
கொன்றை தூவிய பிரியத்தின் சில இதழ்கள்
படிகின்றன பேத்தியின் தலையில்
சொடக்கிட்டு கண்ணேறு கழிக்கிறாள் நல்லாச்சி

Wednesday, March 16, 2022

நல்லாச்சி - 28


அப்படி என்னதானிருக்கிறது?
குடைந்து 
ஆராய்ந்து கொண்டிருக்கிறாள் பேத்தி
பொடி டப்பியும் வதங்கிய வெற்றிலையும்
தாத்தாவின் வெற்றிலைச்செல்லத்தில்
சிற்சில ரெவின்யூ ஸ்டாம்புகளும்
பிள்ளைகளின் போட்டோவும்
அப்பாவின் பர்ஸில்
சித்தப்பா அலமாரியின் 
ரகசிய அறையில்
சிறையிருக்கும் சிறு டப்பாவில்
காய்ந்த ரோஜாவும் பஸ் டிக்கெட்டுகள் ஒன்றிரண்டும்
அம்மாவின் கைப்பையை அலசவோ
பாதாளக்கரண்டி வேண்டும்
இறுதி இலக்கு
நல்லாச்சியின் அஞ்சறைப்பெட்டி
பேத்தி தொடுமுன்
பாய்ந்து வந்து பத்திரப்படுத்தும் நல்லாச்சியின் 
"ங்ஙேரு.. ஓடிரு"
சிரிப்பு பொதிந்த அதட்டலுக்கு
வாய் பொத்தி கிளுகிளுவெனக் குலுங்குகிறாள்
ரகசியம் தெரிந்த பேத்தி.

நல்லாச்சி - 27

..
உச்சியில் கிருஷ்ணர் கொண்டை
சுற்றப்பட்ட பூச்சரம்
காகத்தின் இறகாய் புருவத்தீற்றல்
குருவிக்கால் மையெழுதி
கன்னத்தில் திருஷ்டிப்பொட்டிட்டு
காலில் கச்சப்புரம் அணிவிக்கிறாள் நல்லாச்சி
திட்டுத்திட்டாய் பவுடர் இழுகியிருந்தால்தானென்ன
பட்டுப்பாவாடை குலுங்க
வளைய வரும் பேத்தி ஜொலிக்கிறாள்
அத்தனை நட்சத்திரங்களிடையே
வீற்றிருக்கும் பாலாம்பிகையாய்.

நல்லாச்சி - 26


விடிகாலை
கோழிகூவலில் ஆரம்பித்து
அந்தியில் மலரும் 
நாலுமணிப்பூ வரைக்கும்
கச்சிதமாய் நேரம் சொல்லும் நல்லாச்சி
முற்பகலில் வரும் சிறுகுருவிக்கு
பதினொருமணிக் குருவியென்றே
பெயரிட்டிருக்கிறாள்
அவள் கடிகாரத்தை
உலைத்துப்போடும் மணிப்பயல் மட்டும்
வாலாட்டிக்கொண்டு
அதிகாரமாக வந்தமர்வான் இருளில்
ஒன்பதுக்கு மேல் பதினொன்றுக்ககம்
கடிகாரம் ஏதுமின்றியே நேரமுணரும் நல்லாச்சியிடம்
தனக்கும் அத்திறன் உண்டென மொழியும் பேத்தி
குறும்புடன் அடுக்குகிறாள் ஒவ்வொன்றாய்
அவளது கடிகாரத்தின் அத்தனை மணித்துளிகளுமே
சுற்றிச்சுழல்வதாக இருக்கின்றன
நல்லாச்சியை மையமாய்க்கொண்டு.