Pages

Wednesday, May 18, 2022

மிஞ்சும் சூன்யம்


கடலென விரிந்து பரந்திருக்கும்
பகலின் அலைகள்
ஒதுக்கிச்சேர்க்கும் அனுபவங்களின்
சிடுக்குகளிடையே மிதந்தலையும்
சிப்பிகளுக்கும் மற்றவற்றுக்குமூடே
விதியொளித்திருக்கும்
மின்னுஞ் சிறுமுத்து
ஏற்புடைத்தில்லை இது எமக்கு
பென்னம்பெரிதே எமக்குத் தகுதியென
அலசியலசி வீசியதில்
ஔியிழந்தனைத்தும் அகன்றுவிட
மிஞ்சிய இருட்சாகரத்தின் அமைதியில்
ஆதிமுத்து வந்தமர்கிறது
கிடைத்ததைத் தொலைத்து
கிட்டாததற்காய் ஏங்கி
பாழும் கனவுவெளியில் 
அங்கிங்கெனாதபடி தேடியலைந்த இறுதியில்
மிஞ்சுகிறது
ஒரு பிடி சூன்யம்.

Saturday, May 7, 2022

பெருங்கருணை


தேர்ந்த நடனமங்கையின் நளினத்தோடு
இடுப்பை அசைத்தசைத்து
நீந்திக்கொண்டிருக்கிறது அம்மீன்
தொட்டுப்பிடிச்சு விளையாடிய
சகமீன்கள் ஒளிந்து கொண்டுவிட
தேடித் தட்டழிகிறது
சொப்பு வாய் திறந்து கூவியழைக்கிறது
ஆள் நிழல் கண்டதும் ஆழத்தில் மறைகிறது
மீனின் தவிப்பை 
தப்பர்த்தம் கொண்ட மரம்
காக்கும் நோக்கில்
இலைகளை உதிர்க்கிறது ஒவ்வொன்றாய்
மிதக்கும் இலையே கேடயமாய்
ஒளிந்து கொள்கிறது பயந்த சிறுமீன்
பதறும் மரத்திடம்
ஒன்று சொல்ல வாய் திறந்து
பின்
ஏதும் சொல்லாமல் இரை மேய்கின்றன
அத்தனை மீன்களும்.

Friday, May 6, 2022

கோமாளிப்புன்னகை


சர்க்கஸ் கோமாளிகள் நகைக்கிறார்கள்
அது அவர்கள் உலகம்
வலியில்லா வேதனையில்லா அழுகையில்லா
அபூர்வ உலகம் அவர்களுடையது
கேலி செய்வோரையும் வாய்மூட வைக்கும்
சுய எள்ளல்வாதிகள் அவர்கள்
விழுவதையெண்ணிப் பயந்தால்
பறப்பதெப்போது 
என்ற சித்தாந்த வாதிகள்

சொந்த ஊரில் மரமேறிப்பிழைத்தவன்தான்
இதோ
அடிக்கொரு தரம் தடுக்கிவிழுந்து 
அழுது ஊரைக்கூட்டுகிறான்
கிணற்று உள்நீச்சலில் கைதேர்ந்தவன்தான்
ஓரடி உயரத்திற்கே 
பாசாங்காய்ப் பயப்படுகிறான்
தோட்டாவாய் 
திணித்துக்கொண்ட பீரங்கி துப்பியதும்
அலறிப்பறக்கும் அவனைக்கண்டு
வெடித்துச்சிரிக்கிறது அரங்கம்
முகப்பூச்சுதான் 
எத்தனை வசதியானதாக இருக்கிறது
உணர்வுகளையெல்லாம் மறைக்க
வயது வேறுபாடின்றி 
அத்தனை பேரும் ரசிக்கும் அவன்மேல்
பசிக்குப் பெருங்காதல் 
அவனுக்கோ கலைமேல்

தன்னை வருத்திப் 
பிறரை மகிழ்விக்கும் அவன்
ஓர் நாள்
துடித்துத் துவண்டதையும் 
மெதுவாய் அடங்கியதையும்
கேளிக்கையாகவே எண்ணி
இவ்வுலகம்
கை தட்டிக்கொண்டிருக்கிறது உரக்க
பிறர் நகைக்க தானழுதவன் இதழ்களில்
இன்று
உறைந்து நிற்கிறது புன்னகை.

நல்லாச்சி - 32


வடாமும் வற்றலும் காயுமிடத்தில்
மொய்க்கும் காகங்களை
கட்டுப்படுத்த முயல்கிறாள் நல்லாச்சி
அவற்றுக்கொரு பங்கு
கொடுத்த பின்னும்
மேலுங்கேட்பதாக ஆவலாதி சொன்னவள்
அவற்றை விரட்டவென
நூறு உபாயங்களைக் கைக்கொள்கிறாள்
எல்லாக்கூத்தையும் கண்ட பேத்தி
சந்தேகம் கேட்கிறாள்
சில தினங்களில்
தலைவாழை விருந்திட்டு
முன்னோரென மதித்து
வாவென்கிறீர்கள்
இன்னும் சில தினங்களிலோ
வராதே போவென்கிறீர்கள்
குழம்பித்தவிக்கும் காகங்கள்
தன் பசியன்றி வேறெது அறியும்
என்ற பேத்தி
கைப்பிடி அரிசியை இறைக்கிறாள்
காகங்களெல்லாம் அத்திசை செல்கின்றன
பேத்தியை உச்சிநுகர்கிறாள் நல்லாச்சி.

Sunday, May 1, 2022

நல்லாச்சி - 31


அட்டகாசம் செய்கின்றன குரங்குகள்
உன் போல் என
அலுத்தபடி வந்தாள் நல்லாச்சி
உண்ணாமல் தின்னாமல்
ஒரு வயிற்றுக்குள்ளும் போகாமல்
புழக்கடைத்தோட்டத்தில்
சூறைபடுகின்றனவாம் அத்தனையும்
பழிப்புக்காட்டி ஓடி விடும்
பல்லைக்காட்டி உறுமும்
மோனநிலையில் அமர்ந்திருக்கும் மந்திகள்
கூட்டத்திடையே
ஆத்தாளும் பேத்தியாளும் இருக்கக்கூடுமோ
என யோசனையிலாழ்கிறாள் பேத்தி
கவனம் சிதறிய கணத்தில்
கைக்கொண்ட நீர்ச்சொம்பைக்
கவர்ந்திழுக்கிறது
தாகித்திருந்த ஒரு குட்டி
இரு குரங்குகளும் போட்டியிட்டால்
என் செய்வேன் நானென
போலியாய் அபிநயிக்கிறாள் நல்லாச்சி
சிணுங்குகிறாள் பேத்தி சங்கீதமாய்.