Pages

Friday, September 24, 2010

நிலவும், அவனும்..அவளும்..நிலவில் தண்ணீர் இருக்கிறதாம்
விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.
நிலவைப்பெண்ணென்று
யார் சொன்னது!!
அதுவும் ஆணாகத்தான்
இருக்க வேண்டும்.
'ஜொள்ளு வடிக்கிறதே!!
உனைப்பார்த்து'
என்றான் அவன்.

இல்லையில்லை;
அதுவும் என் போல் பெண்தான்;
சொந்தமாய் ஒளிவீச
திறனில்லாமல்,
சூரியக்கணவனை
சார்ந்திருக்க வேண்டியிருக்கும் பச்சாதாபத்தால்,
வடித்த கண்ணீர்தான் அது,
என்றாள் அவள்:

வாதம் வலுப்பதை பார்த்துக்கொண்டே;
இருவருக்கும் சாட்சியாய்,
மேகமுக்காட்டுக்குள்,
நகைத்தது, பால் நிலா...


டிஸ்கி: 'அன்புடன் மலிக்கா' அவங்க தளத்தில் நடத்திய கவிதைப்போட்டியில், எழுதியது இது :-)). நான் ரொம்பவே சுறுசுறுப்பு..போட்டி நடந்துமுடிஞ்சு மாசக்கணக்காவுது. இப்பத்தான் வெளியிடுறேன். எல்லாம் ஒரு கணக்குக்காகத்தான் :-)))))
Monday, September 20, 2010

உனக்கென்ன பிடிக்கும்??

மணாளனுக்கும், மக்கட்க்கும்
மதிப்பிற்குரிய மூத்தோருக்கும்
அவரவர் விருப்பத்தை
பரிமாறிய அன்னபூரணிக்கு
தன்விருப்பம் மறந்ததே நினைவில்லை..


திருப்தியான முகங்களிலேயே
சாபல்யமடைந்துவிடும் அவளிடம்;
யாரேனும் கேட்டிருக்கக்கூடுமோ
அவள் எதிர்பார்ப்பு என்னவென்று?


விசாரிப்புகளுக்கப்பாற்பட்டாலும்
ஏங்கியிருக்கக்கூடுமோ
மனத்தின்மூலையில் தவித்துக்கொண்டிருக்கும்
அந்தச்சிறுகுழந்தை..!!


கொள்ளாமல் நிரம்பிவழிந்தபோதிலும்,
என்றென்றும்
பாத்திரம் அறிந்ததில்லை
பதார்த்தத்தின் ருசி!!
Thursday, September 9, 2010

நகரமென்னும்...

அனுமதி கிடைத்ததும்
புற்றீசலாய் கிளம்பும் வாகனங்களினூடே
ஒரு கணம் தடுமாறி,
பின், தாமுமொரு ஈசலாய் பறந்ததுண்டா!!!

வழிப்பாதையில்,
அரை மில்லிமீட்டர் புன்னகையை..
தினம் பரிசளிக்கும் வேற்றுமுகத்தை;
அண்டை வீட்டினராய்
கண்டுபிடித்ததுண்டா!!!

துளசியும் மல்லிகையும்
தம் குணம் மாறி,
ஏதோவொரு மணத்தில்
தம்மிருப்பை தெரிவித்ததுண்டா!!!

விட்டு வந்த
வயலும் வீடும்;
குளமும்,...குயில் கூவும் தோப்பும்,
கனவுகளாய் இம்சிப்பதுவும்;
உதயங்களைக்காணும் ஆவல்
விடிந்து.. மறைவதுவும்,
செக்கிட்ட எள்ளாய் உள்ளம்,
திணறித்தெளிவதுவும்;
களிக்கவும், கழிக்கவுமான
பண்டிகைப்பொழுதுகளை
வரவேற்பறை அரக்கன் கொண்டு செல்வதுவுமான...

ஏதேனும் ஒன்றை அனுபவித்திருந்தால்
உரக்கச்சொல்லுங்கள்;
நகரம், உங்களோடும் கை குலுக்கியிருக்கிறது.