P:C: panbudan
தட்டட்டியில் பெய்யும் மழை நீரையெல்லாம்
தேக்கி வைக்கத்துடிக்கிறாள் பேத்தி
குளமாக்கி அணையாக்கி ஆறாக்கி
இறுதியில் அதை
கடலாகவும் ஆக்கி விட வேண்டுமாம்
சுறாமீன்களைத் தோணியாகவும்
திமிங்கிலங்களைக் கப்பலாகவும் கொண்டு
ஈரேழுலகமும் சுற்றி வர வேண்டும்
மனிதர் புழங்காத நாடுகளும் தீவுகளும்
ஏராளம் கண்டுபிடிக்க வேண்டும்
அவற்றில்
நல்லாச்சியின் கொடி உயரப்பறக்க வேண்டும்
வானளாவிப்பறக்கும் கொடியைப் பற்றிக்கொண்டு
விண்வெளிக்கும் செல்ல வேண்டும்
அங்கே
நிலவில் வடை சுடும் பெரிய ஆச்சி
பிடித்து வைத்திருக்கும் விண்மீன்களைக் கொணர்ந்து
தோட்டத்துக்கிணற்றில் விட வேண்டும்
மின்னி மின்னி அவை நீந்தும்போது
மத்தாப்பு கூட தோற்றுவிடும்
கதை வளர்த்துக்கொண்டே போகும் பேத்திக்கு
முளைக்கிறதொரு சந்தேகம் திடீரென
விண்மீனும் நட்சத்திர மீனும் ஒன்றா
பிற உயிர்களின் எலும்பெல்லாம்
அவ்வாறே வழக்கிலிருக்கும்போது
மீன்களின் எலும்பை மட்டும்
ஏன் முள்ளெனப் பகர்கிறோம்
இத்தனை விண்மீன்கள் உள்ளதெனில்
வானில் இருப்பது எத்தனையாவது கடல்
கேள்விகளால் துளைக்கிறாள்
வழக்கம்போல் விழிக்கும் நல்லாச்சி
வழக்கம்போல் சமாளிக்கிறாள்
‘எல… தண்ணியெல்லாம் வெளிய போவுது
தூம்பாவ மொதல்ல அடை
குட்டையளவேனும் நீர் தேங்கினால்தானே
அது
கடலை குட்டியாய்ப்போடும்’
நல்லாச்சியின் சொல்லையேற்ற பேத்தி
தட்டட்டியின் மடையை அடைக்கிறாள்
வானில் பெருகத்தொடங்குகிறது
ஒரு
தொங்கும் கடல்.
டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.
No comments:
Post a Comment