Pages

Tuesday, May 9, 2023

பூனையும் வினையும்..


நல்ல பூனைகளுக்கு இங்கே இடமுண்டா
வினவிக்கொண்டு வாசலில் நின்றதொரு பூனை
முகத்திலும்
பளிங்காங்குண்டுக்கண்களிலும்
சொட்டிய அப்பாவித்தனம் தவிர
இன்னொரு நற்சான்றிதழ் தேவையா என்ன
அதை உள்ளே அழைப்பதற்கு

வந்த நாள் முதலாய்
சிறு சோகமொளித்த அதன் சிரிப்பும்
ஏகாந்த வேளைகளில் எங்கோ வெறித்த
அதன் பெருமூச்சுகளும்
சமநிலை இழக்க வைத்தன என்னை
அறியும் ஆவலை ஊதிப்பெருக்கின
பற்றியெரிந்த ஓர் நாளில் வினவினேன் அதனிடம்
சுமந்தால் பாரம்
பகிர்ந்தால் தீரும்
என்னதான் உன் வேதனை என்றேன்
பழைய நண்பனைப் பிரிந்த வேதனை
சிந்தையைத் திருப்ப முயல்கிறேன் என்றது அது
ஆதிகாலம் முதலாய் 
எம்முன்னோர் சொல்லிச்சென்ற வழிமுறைகளில்
ஒன்றிரண்டை
நானும் அதற்கு எடுத்துரைத்தேன்

முதற்கட்டமாய்
களையெடுத்துத் தோட்டம் திருத்தியது
வன்னமாய்ப்பூத்தன வண்ண மலர்கள்
அல்லியும் தாமரையும் மண்டின குளத்தில்
பின் வந்த நாட்களிலோ
அல்லிக்குளத்தின் வண்ணமீன்கள்
தடயமில்லாமல் மறையத்தொடங்கின
ஒன்றும் நினைக்கவில்லை நான்

முற்றத்துச்சுவர் தாங்கிய செயற்கை வீடுகளில்
குஞ்சுகளைப்பறி கொடுத்த குருவிகள்
கதறிப்பதறின
சின்னாட்களில் குருவிகள் இல்லாத என் வீடு
நிசப்த பூமியானது 
பூனையின் முகம் தெளிந்திருந்தது இப்போது

சுவரிலிருந்த ஓவிய மீன்கள் 
எலும்புக்கூடுகளாய் மிஞ்சிய ஓர் நாளில்
விசாரித்தேன் பூனையை
எல்லாம் உனக்காகத்தான் என்றது அது
குளத்தின் அழகைக்கெடுத்த மீன்கள்
எச்சமிட்டும் சத்தமிட்டும்
வீட்டை அழுக்காக்கிய குருவிகள்
அத்தனையும் அகன்ற பின்
சுந்தரச்சோலையாயிருக்கிறது பார் உன் வீடு என்றது
அகற்றப்பட்டவை என்னானதோவென 
விசாரப்பட்டபோது
பாழாய்ப்போவதெல்லாம் பூனை வயிற்றிலே 
என்றபடி மீசையை நீவிக்கொண்டது
அமைதியும் அழகும் கொண்டதோர் இல்லம்
அமைத்திருக்கிறேன்
எனக்கென்ன பரிசு எனக்கேட்டபோது
வாசலை நோக்கி விரல் சுட்டி விரட்டினேன்

நல்ல பூனைகளுக்கு 
இங்கே இடமுண்டாவென வினவியபடி
உங்கள் வாசலிலும்
ஒரு பூனை தென்படக்கூடும்
தோற்றப்பிழையால் ஏமாறுவதும்
கும்பிடு போட்டு அனுப்பி வைப்பதும்
அவரவர் வினைப்பயன்.

0 comments: