Pages

Wednesday, September 5, 2012

துளியில் மலர்ந்த பூக்கள்..

படம் அளித்த இணைய வள்ளலுக்கு நன்றி


மலர்தலும் உதிர்தலும்
இயல்பெனினும்
காலக்கணக்கில் கட்டுண்டு நிகழாமல்
சிறு தூறலிலும்
உடன் மலர்ந்து விடுகின்றன
சாலைச்சோலையில்
பூக்கள்... குடைகளாய்;
தேனருந்தும் வண்டுகள்தாம்
மூக்குடைந்து திரும்புகின்றன
முயற்சியில் தோற்று.

ஊன்றுகோலாகவும் ஒத்தாசை செய்யும்
முதுகு வளைந்த
முதிய தலைமுறையினர் முன்
வெட்கிப் பதுங்கிய
இளைய தலைமுறைகள்
அடைக்கலம் தேடுகின்றன
கைப்பைகளுக்குள்,
மூன்று சாண் உடம்பை
ஒரு சாணாய்க் குறுக்கியபடி.

ஆரவாரத்துடன் நாட்டு வளம் காண
பாய்ந்து வந்த நொடியில்
சரேலென்று பறந்த
கறுப்புக்கொடிகள் கண்டு
திரும்பி விட எத்தனித்தாலும்
குடை மடக்கி உடல் நனைத்து
நா நீட்டி மழை ருசித்த
ஈர மனதை மேலும் குளிர்விக்கத்
திரும்பி வருகிறான்
வருண தேவன்.

டிஸ்கி : வல்லமையில் எழுதுனதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்.

6 comments:

ராமலக்ஷ்மி said...

குடையை விரிக்காமல் கவிமழையில் நனைந்தேன்.

மிக அருமை சாந்தி.

ஸாதிகா said...

கவிதையைப்போலவே தேர்ந்தெடுத்து போட்டு இருக்கும் படமும் அபாரம்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்...

வருண தேவன் எங்க ஊர் பக்கமும் விரைவில் வரட்டும்... வெயில் கொளுத்துகிறது...

பவள சங்கரி said...

அன்பின் சாந்தி,

மிக அழகான கவிதை. வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவளா

கீதமஞ்சரி said...

குடைக்கும் மழைக்குமான பிணைப்பை அழகுபட வெளிப்படுத்திய கவி வரிகள்.தலைமுறை இடைவெளியில் சிக்கிய குடைபற்றிய இரண்டாம் பத்தி வெகுவாக ஈர்த்தது. பாராட்டுகள்.

சந்திர வம்சம் said...

கவிதை அருமை; வண்ணப்படம் அதனினும் அருமை. பார்க்க:

பத்மா